இளைஞர்கள் தனது வாகனத்தை தொடர்ந்து வருவதுதான் நமக்கான விளம்பரம் என்று விஜய் நினைக்கிறார். கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவரை தான் முதலில் குற்றம்சாட்ட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளாது.

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தை நடுநிலையோடு ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் நிறைய உண்மைகள் தெரியவரும். விஜய் திருச்சியில் முதல் கூட்டத்தை நடத்தியபோதே கூட்டநெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக சொன்னேன். கட்டுப்பாடு இல்லாத கூட்டம் போன்று விஜய் ரசிகர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களை பயன்படுத்துகிற தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பார்க்க வேண்டிய விஷயம். எங்கள் காலத்தில் இளைஞர்களை பயன்படுத்திக் கொண்ட தலைவர்கள் பெரியாரிடம் இருந்து பெரிய அளவிலான பயிற்சியோடு வந்தனர். கூட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் தலைவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தும் நாம் அவர்களை மதிப்பிடுகிறோம்.

கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் அதை மறுக்கக்கூடிய பல வீடியோ ஆதாரங்கள் வந்துவிட்டன. விஜய் பேச தொடங்குவதற்கு முன்னதாக மரம் முறிந்துவிழுந்த இடத்தின் உரிமையாளர், கூட்டம் அதிகளவு கூடியதாகவும், விஜய் வர தாமதமானதாலும் எங்கள் பேச்சை கேட்காமல் கூரை மீறி ஏறி நின்றார்கள். ஜெனரேட்டரும் ஆப் செய்யவில்லை. கூட்டம் வந்தததால் ஜெனரேட்டர் பியூஸ் போய்விட்டதாக சொல்கிறார்.
விஜய், செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடுவதற்கு ஒரு சில நிமிடத்திற்கு முன்னதாகவே மரண சம்பங்கள் நடக்க தொடங்கவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்ததுதான். இறந்துபோனவர்களில் பெண்கள், குழந்தைகள், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என 95 சதவீதம் பேருக்கு அரசியலே தெரியாது. அவர்கள் விஜயை பார்ப்பதற்காக வந்தவர்கள். இளம் கன்று பயம் அறியாது. இளைஞர்களை நாம் குறை சொல்ல முடியாது.
ஆனால் ஒரு தலைவராக தன்னை உருவகப்படுத்தி கொள்கிற விஜய், தன்னை பின்பற்றுகிற இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அவர்களுக்கு சரியான வழியை விஜய் காட்டவில்லை. இதுதான் நமக்கான கெத்து என்று நினைக்கிறார். அதுதான் அவருடைய சிக்கல். இளைஞர்கள் தொடர்ந்து வருவதுதான் நமக்கான விளம்பரம் என்று நினைக்கிறார். இப்போது கூட்டநெரிசல் மரணங்களுக்கு முதலாவதாக குற்றம்சாட்டுவதாக இருந்தால் விஜயாகத்தான் இருக்கும்.
கருர் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. 2017ம் ஆண்டு ஷாருக்கான் பங்கேற்ற நிகழ்வில் கூட்டநெரில் மரணங்கள் ஏற்பட்டது தொடர்பாக பாஜக அரசு வழக்குப்பதிவு செய்தது. ஆனால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. சிவில் கவனக்குறைவை எளிதாக நிரூபித்துவிடலாம். ஆனால் கிரிமினல் கவனக்குறைவை நிரூபிக்க முடியாது. விஜய் இத்தனை பேர் இறப்பார்கள் என்று தெரிந்துகொண்டு வந்திருக்க மாட்டார்கள்.
இது செய்த தவறாக இருக்காது. இந்த சம்பவத்தை பொருத்தவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம். கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர்கள்தான் வருவார்கள் ஆனால், இவ்வளவு பேர் வந்துவிட்டார்கள் என்று சொல்லக்கூடாது. எதிர்பாராமல் வந்த கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்குக்கு உள்ளது. குற்றச்சாட்டு என்பது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது தான் நிற்கும்.
இவற்றை எல்லாம் விட அரசியல் தான் முக்கியமானது. விஜய், தன்னை ஸ்டாலினுக்கு போட்டியாக முதலமைச்சர் வேட்பாளர் என்று புரமோட் செய்கிறார். அப்போது ஒரு முதலமைச்சர் வேட்பாளரிடம் இருந்து மக்கள் என்ன எதிர்பார்ப்பார்கள். மக்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கடமை விஜய்க்கு உள்ளது. கூட்டத்தில் பிரச்சினை ஏற்படுகிறது என்று சொன்ன உடன்தான் விஜய் அங்கிருந்து புறப்படுகிறார். அவர் ஒரு அரசியல்வாதி என்றால் மிக இயல்பாக, மக்களைதான் ஆற்றுப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி விஜய் செய்யாவிட்டாலும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் செய்திருக்க வேண்டும். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக எப்.ஐ.ஆர் போட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் தாமாகவே வந்திருக்க வேண்டும். அப்போது கட்சி என்கிற அமைப்பே இல்லை என்பது நிரூபணமாகிவிடுகிறது.
முதலமைச்சர், பிரதமர் போன்றவர்களுக்கு கொடுக்கிற பாதுகாப்பை விஜய்க்கு தர முடியாது. காரணம் அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். விஜய்க்கு பாதுகாப்பு கொடு என்று சொன்னால், அது மட்டுமே அரசாங்கத்தின் வேலை அல்ல. நீங்களே பாதுகாப்பை நம்பாமல் தானே பவுன்சர்களை கூப்பிட்டு செல்கிறார். தனது வாகனத்துடன் கூட்டமாக வருவதுதான் பவர் என்று நினைக்கிறார்.
விஜயின் கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இவை எல்லாவற்றுக்கும் திமுக அரசுதான் காரணம் என்று ஒரு குரூப் சொல்கிறது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு அரசியல் லாபம் கிடைக்கிறதோ இல்லையோ? திமுகவை எதிர்க்கும் மற்ற கட்சிகள் அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள். திமுக, இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. விஜய் ஒரு வருத்தம் கூட சொல்லவில்லை. அவர் பாட்டிற்கு தனி விமானம் பிடித்து பனையூர் போய்விட்டார் என்று விமர்சிக்கும். விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் போனவர்கள் சாதாரண மக்கள் தான்.
மற்றொரு திரை நட்சத்திரம் வந்தாலும் மக்கள் இப்படிதான் பார்க்கப் போவார்கள். எனவே விஜய் வருகிறார் என்பதற்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். விஜய் கட்சிக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள். நாளைக்கு பிரச்சினை வந்தால் நம்மோடு இருப்பார்களா? இது தான் மக்களின் எதிர்பார்ப்பு. கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் அப்படிதான் தமிழக வெற்றிக்கழகம் எக்ஸ்போஸ் ஆகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.