கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலிடம் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய இன்னும் அரசுக்கு அவகாசம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக விஜயை கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் சொல்கிறார். அதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. எப்.ஐ.ஆரில் விஜயின் பெயரை சேர்க்க வேண்டும். ஆனால் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறபோது விஜயின் பெயர் இல்லாவிட்டால் அது பலவீனமானதாகிவிடும். எனவே கூடுதல் எப்.ஐ.ஆர் போட்டு விஜயின் பெயரை சேர்க்கலாம். பிறகு இரண்டு எப்.ஐ.ஆர்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே குற்றப் பத்திரிகையாக கொண்டு வந்துவிடலாம். விஜயின் பெயர் சேர்க்காவிட்டால் வழக்கு அடிபட்டு போய்விடும். தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கு நேற்று நினைவு தினம். அவர் ஒரு அஞ்சலி செலுத்தினாரா?

சரி விஜய் அரசியலில் கத்துக்குட்டி என்று நன்றாக தெரிகிறது. அவருடன் இருப்பவர்கள் எல்லாம் டுபாக்கூர்கள். அவர்களுக்கு உண்மையிலே ஒன்றுமே தெரியவில்லை. விஜய் என்கிற ஒரு பிம்பத்தை வைத்துதான் அவர்கள் உருட்ட வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார்கள். அவர் முழுமையாக அம்பலப்படுகிறார். பிறகு எதற்கு அரசாங்கம் பயப்பட வேண்டும். விஜய் மீது எப்ஐஆர் பதிய வேண்டியது தானே. ஜெயலலிதா, ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார். சில நடவடிக்கைகளை அரசு எடுத்துதான் ஆக வேண்டும். அப்படி விஜயின் பெயரை சேர்த்திருந்தால் அவரும் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்திற்கு வந்திருப்பார். சிறைக்கு பயந்தால் அவர்கள் அரசியல்வாதிகள் கிடையாது.
விஜய் பேசுகிறபோது மயங்கி விழுகிறார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அப்போது விஜயை நோக்கி செருப்பை வீசுகிறார்கள். அது அவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக கூட இருக்கலாம். ஆனால் அவரை தாக்கும் நோக்கம் இல்லை. விஜய் வந்த உடனே இருவர் உயிரிழந்து விட்டார்கள் என்று தெரிகிறது. இதை துல்லியமாக கண்டறிய விஜய் வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் வேண்டும். செல்போன் வீடியோக்கள் தனி நபர்கள் எடுத்ததுதான். அவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்கும்போது, அந்த வீடியோவை எடுத்தவர்களையும் ஆஜர்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் விஜய் வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை எடுத்தால், அதன் ஆபரேட்டரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் குற்றச்சாட்டை நிருபிக்க வேண்டும். நிருபிக்கா விட்டால் மே மாதம் தேர்தல் வருகிறது. ஏப்ரல் மாதம் வழக்கில் ஆதாரம் இல்லை என்று சொன்னால் என்ன ஆவது? நீதிமன்றம் சாட்சிகளும், ஆவணங்களும்தான் முக்கியம். இன்றைக்கு இருக்கும் அரசியல் நீதிமன்றத்திற்கு கிடையாது. எனவே வழக்கில் குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதாரங்களை வழங்க வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு ஓடிவிட்டார். அவருடைய தலைவர் கஷ்டத்தில் இருக்கும்போது விளையாட்டு போட்டியை காண சென்றுள்ளார். 40 பேருக்கு மேல் இறந்துபோயுள்ளனர். இந்நிலையில், நான் டெல்லிக்கு போகிறேன். அரசியல் பேச செல்லவில்லை. விளையாட்டு போட்டியை பார்க்க போகிறேன் என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். ஒரு அரசியல் தலைவர் இப்படியா சொல்வார்? விஜய் வீடியோவில் பேசுகிறார். அவ்வளவுதான் இவர்களுக்கு தெரிகிறது. விஜயை சுற்றி நிற்பவர்களின் நோக்கம் என்பது, விஜய் கையை காட்டினால் ஒரு கோடி வாக்குகள் விழும் என்று பைத்திக்காரத்தனமாக கணக்கு செய்கிறார்கள். அப்படி எல்லாம் வாக்குகள் வராது. விஜய் முதலமைச்சரானால் நான்தான் உள்துறை அமைச்சர் என்று இவன் நினைப்பான். இது கனவாகும். விஜய், நம்மிடம் வந்துவிட்டால் நாம் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதுதான் சிக்கலாகும். விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்துவிட்டால் வடநாட்டில் பயனளிக்கும் என்றும் பாஜகவினர் நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் எவருமே மனித உயிர்களை பற்றி கவலைப்படவில்லை. பிண அரசியல் தான். இறந்துபோனவர்களை வைத்து அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார்கள்.
விஜய், திமுக எதிர்ப்பு வாக்குகளை அல்ல, திமுக ஆதரவு சிறுபான்மை வாக்குகளை பிரித்து விடுவார் என்று தவெகவினர் சொல்கிறார்கள். அவர் பாஜக கூட்டணிக்கு சென்றால் ஒட்டுமொத்த வாக்குகளும் திமுகவுக்கு தானே விழும். என்ன கணக்கு இது? விஜய் பாஜக பக்கம் செல்கிறார் என்றால் அது திமுகவுக்கு லாபமாகும். அப்படி சென்றால் விஜய்க்கு அரசியல் எதிர்காலம் என்னவாகும்? ஆதவ் அர்ஜுனா எப்படி உள்துறை அமைச்சர் ஆவார்? புஸ்ஸி ஆனந்த் எப்படி துணை முதலமைச்சர் ஆவார்? ஆனந்த், அங்கே புஸ்ஸியில் ஒரு ஒன்னே முக்கால் தெருவில் அரசியல் செய்தார். இங்கே தமிழ்நாட்டில் 108 பிரச்சினைகள் உள்ளன. 208 ஜாதிகள் இருக்கு. ரூ.2,800 கோடி புழங்கும். விஜய் வாரத்துக்கு 2 ஊர்களுக்கு போனால் மக்கள் எல்லாம் மாறி வாக்களித்து விடுவார்களா? விஜயை எல்லோருமே பார்ப்பார்கள். சீமான் சொல்வது போல நயன்தாரா வந்தாலும் பார்க்க போவார்கள்.
ஒரு கூட்டநெரிசல் சம்பவம் நடைபெற்றுவிட்டது. அதற்கு பிறகான அரசியல் என்ன? என்று தான் பார்க்க முடியும். கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அவருடைய வண்டியிலேயே சிசிடிவி காட்சிகள் இருக்கிறது. கரூரில் இருந்து திருச்சி போகிற இடைவெளியில் அவருடைய வாகனத்தில் இருந்து இதை பார்த்தாலே மனது பதை பதைத்திருக்கும் அல்லவா? திருச்சியில் இறங்கியபோதே ஒன்று செய்தியாளர்களிடம் பேசி இருக்க வேண்டும். அல்லது கருருக்கு திரும்பி இருக்க வேண்டும். அப்படி செய்ய வில்லை. சரி 41 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம் அல்லவா? உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம் அல்லவா? அடிப்படையான மனிதாபிமானம் கூட இல்லாமல் விஜய் என்ன முதலமைச்சர் ஆக போகிறார். 2026ல் முதலமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறீர்கள். தொண்டர்களும், மக்களும் விஜய்க்கு ஆதரவாகவே இருக்கட்டும். அடிப்படையான மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை எல்லாம் இருக்க வேண்டாமா? இனி முதலமைச்சர் ஆகி விஜய் என்ன செய்யப் போகிறார்?
சீமான் ஒரு அரசியல் தலைவராக கருருக்கு வந்து தன்னுடைய கடமையை ஆற்றுகிறார். முதலமைச்சர் நிர்வாக தலைவராக அவருடைய கடமையை ஆற்றுகிறார். யாருமே இந்த சம்பவத்தை வைத்து கருரில் ஒரு பிரச்சினையை உருவாக்கி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. தவெக அலுவலகத்தை மூடிவிட்டு போய்விட்டது. அவ்வளவு பேரும் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களுக்கு அவ்வளவுதான் தெரிகிறது. சட்ட கடமைகளின் படி விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அது காவல்துறைக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் தெரியும். மேலிடத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்னதால் தான் பெயர் போடவில்லை. அதைதான் திருமாவளவன் சொல்கிறார். தற்போதும் நேரம் உள்ளது. விஜய் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.