பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில் 41 பேர் பரிதாபமாக பலியான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதில் தவெகவுக்கு ஆதரவாக அதிமுக, பாஜக பின்னணியை சார்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினர்.
குறிப்பாக மூத்த வழக்கறிஞர்களான தாமா சேஷாத்ரி நாயுடு மற்றும் ராகவாச்சாரி இருவருமே பாஜக, அதிமுக சார்புடையவர்களாக அறியப்படுபவர்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் வாதாடுவதாக கூறிக்கொண்டு, தவெகவையும் விஜய்யையும் நியாயப்படுத்த கடுமையாக முயன்றார்கள். இவர்களைத் தவிர்த்து வேறொரு வழக்கறிஞருக்காக வாதாடிய பாலாஜி சுப்பிரமணியம், நேரடியாகவே அதிமுக வழக்கறிஞர் என்று அறியப்படுபவர்.

தாமா சேஷாத்ரி நாயுடு, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர். பாஜகவுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். பி.ஜே.பியினருக்காக பல வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். குறிப்பாக பத்து பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவுக்கு நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் தடை விதித்த வழக்கில் இவரது பங்கு அளப்பறியது. திமுகவுக்கு எதிராக பல வழக்குகளில் அதிமுக, பாஜக சார்பாக ஆஜர் ஆனவர் ராகவாச்சாரி. மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமாருக்கும் கரூர் வழக்கில் முன்ஜாமீன் கேட்டவர் இதே ராகவாச்சாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக என்று கூறிக் கொண்டு வாதாடியவரும் இதே ராகவாச்சாரிதான்.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் எவரும் நம்பமுடியாத வாட்சப் சதிக்கோட்பாடுகளை வாதமாக வைத்து, நீதியரசர்களிடம் மூக்குடைப்பட்டவர் ராகவாச்சாரி. கூட்டத்தில் விஷ ஸ்பிரே அடித்தார்கள், கத்தியால் கிழித்தார்கள் என்பதைப் போன்ற தவெக வாட்சப் மெசேஜ்களை, ஒரு மூத்த வழக்கறிஞரே வாதமாக வைத்தது, மதுரை வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரபரப்பாக பேசப்பட்டது.
இன்னமும் தவெக நேரிடையாக பாஜக, அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை. ஆனால், பாஜக அதிமுக வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது, தவெகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சிதானோ என்று வழக்கு விசாரணையை கவனித்துக் கொண்டிருந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
கொள்கை எதிரி பாஜக என்று விஜய் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், தாமாக முன்வந்து பாஜக விஜய்க்கு கை கொடுப்பதற்கு பின்னணியில், தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கட்சியை காவு கொடுத்தாலும் பரவாயில்லை, கரூர் வழக்கில் தான் சிறை சென்றுவிடக் கூடாது, அதற்காக எதையும் செய்யுங்கள் என்று த.வெ.க நிர்வாகிகளிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள். த.வெ.க என்கிற புதுக்கட்சியால் அ.தி.மு.கவுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்குகளும் போய்விடுமோ என்கிற அச்சத்தில் இருந்த எடப்பாடி கரூர் சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று கருதியே, இவ்வழக்கில் அழையா விருந்தாளியாக அதிமுக வழக்கறிஞரை அனுப்பி வைத்திருக்கிறார் என்று டெல்லி வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
ரஜினிக்காக புதிய கதையை தயார் செய்த நெல்சன்…. ‘ஜெயிலர் 2’ – க்கு பிறகும் ஒரு அலப்பறை!


