இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக பா.ஜ.க. ஆட்சியில் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 975 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 136 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகுந்த கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரந்தர தீர்வு காணப்படும் என்று 2013 ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது அன்றைய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியை கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி நிறைவேற்றாத நிலையில் மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசோ, தமிழக பா.ஜ.க.வோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண கடுகளவு முயற்சியும் எடுக்கவில்லை. 145 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி 2 கோடி மக்கள் தொகை கொண்ட அண்டை நாடான இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தரவில்லை என்றால் இதைவிட தமிழக மீனவர் விரோதப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

அண்டை நாடான இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணாத பிரதமர் மோடி தமிழர்கள் நலனில் அக்கறை இருப்பதாக பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்“ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.


