ஆர்.விஜயசங்கர்
இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 1937ல் சென்னை மாகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியபோது எழுந்த திராவிட எதிர்ப்பலையில் உருவான தனிநாடு முழக்கத்தை தி.மு.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அண்ணா, அரசியல் களத்திற்குள் கொண்டுவந்தது தேசியவாதிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சுதந்திர இந்தியாவின் அரசியல் களத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை அவர் கண்டார். அதனால்தான், அரசியல் விடுதலை என்பது நீண்டகால சமூக விடுதலைக்கான போராட்டத்தின் முதல் கட்டம் என்று அவர் வரையறுத்தார்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, மொழியுரிமை, சமூக நீதி போன்ற கருத்தாக்கங்கள் பல தரப்பு மக்களும் ஒருங்கிணைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும், தேச ஒற்றுமையைக் குலைத்து விடும் என்கிற அச்சம் தேசியவாதிகளுக்கு விடுதலைப் போராட்ட காலத்திலேயே இருந்தது. ஆனால், ‘தேசிய இனங்களுடையை சுதந்திரத்தின் அடிப்படையில்தான் நாட்டின் சுதந்திரம் இருக்க முடியும், மாநிலங்களெல்லாம் சேர்ந்து உருவானதுதான் இந்திய ஒன்றியம்’ என்கிற தெளிவும் அண்ணாவிற்கும் அவரது தோழர்களுக்கும் இருந்தது. அண்ணா, 1962ஆம் ஆண்டு தன் நாடாளுமன்ற உரையில் பேசிய சொற்கள் அவரது சிந்தனைத் தெளிவைக் காட்டின. “இந்தியாவை ஒரே நாடாகவும் பிளவுபட முடியாததாகவும் வைத்திருக்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதிருப்திகொண்டிருக்கும் அமைதியற்ற மாநிலங்களாகச் சேர்ந்திருப்பதைவிட, தேச உணர்வும் ஒற்றுமையும் பாராட்டுகளின் கூட்டமைப்பாக நாம் தொடரலாம்.”

திமுக என்கிற அரசியல் கட்சியாக உருவெடுத்த திராவிட இயக்கம் தேர்தல் களத்திற்குள் நுழைந்தபோது, அதன் தேவைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது. நாத்திகப் பார்வை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற பார்வையாக மாறியது இதனால்தான். மாறிவரும் புறச்சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் நடைமுறை உத்தி தி.மு.கவின் பலங்களில் ஒன்று.
அதே போல்தான் தனிநாடு என்கிற கோரிக்கை பரிணாமமடைந்து மாநில உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி என்கிற முழக்கமாக மாறியது. 1962ல் இந்தியாவிற்கும் சீனத்திற்குமிடையே போர் மூண்டபோது நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும்.
நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும்” என்றார். 1963ல் பிரிவினைவாத தடைச் சட்டத்தினை நேரு அரசு கொண்டுவந்தபோது, தனி நாடு கோரிக்கையும் முடிவுக்கு வந்தது. பிரிவினைவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகும்கூட அவர் தன் திராவிட நாடு கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கத் தவறவில்லை: “புதுமையாக இருக்கிறது என்பதற்காகத் ‘திராவிட நாடு’ கோரிக்கையை நான் வலியுறுத்தவில்லை. இப்போதைய அரசியல் அமைப்பு – கூட்டாட்சி அமைப்பு நம் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போவதில்லை என்ற எண்ணம், விரக்தி மனப்பான்மை மிகத் தீவிரமாக எங்கள் மக்களில் ஒரு பகுதியினருக்கு வேகமாக வளர்ந்துவருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கூட்டாட்சியை அனுபவித்த பிறகு, தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வைச் சேராத மற்றவர்களுக்கும் புரட்சிகரமாக ஏதாவது செய்யாவிட்டால், இந்தக் கூட்டாட்சி முறை காலப்போக்கில் மாநிலங்களுடைய விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப செயல்பட முடியாமல்போகும் என்று தோன்றிவிட்டது.”
அண்ணாவின் இந்தக் கருத்திலிருக்கும் உண்மை எவ்வளவு ஆழமானது என்பதை கலைஞரின் ஆட்சிக்கால அனுபவமும் இன்று திரு மு.க. ஸ்டாலின் அரசின் அனுபவமும் திரும்பத் திரும்ப நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியா என்கிற ஒரு பெரிய நாட்டின் அங்கமாக இருந்தால், அதன் பரந்துவிரிந்த சந்தையும், இயற்கை வளங்களும், போக்குவரத்து போன்ற கட்டுமான வசதிகளும் தமிழ்நாட்டிற்கு நலம் பயக்கும் என்கிற எண்ணமும் அண்ணாவுக்கு இருந்தது. அரசியல் அதிகாரத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதைவிட, அந்த அதிகாரத்தில் பங்கு கேட்டுப் போராடுவது என்பதுதான் அவருடைய பார்வைக்கு அடிப்படை, அந்த சிந்தனைத் தொடர்ச்சி கலைஞரின் ஆட்சிக் காலத்தில் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.

மாநில சுயாட்சி முழக்கமும் எதிரொலியும்
ஓர் அரை நூற்றாண்டுக்காலம் விடுதலைப் போராட்டத்தினை முன்னின்று நடத்திய காரணத்தினால், நாடு முழுவதும் விரிந்து பரந்த சமூக அடித்தளத்தைப் பெற்றிருந்த காங்கிரஸ் இயக்கம், சுதந்திர இந்தியாவின் முதல் அரசை நேருவின் தலைமையில் அமைத்தது. அவர் உயிருடன் இருந்தவரை வலுவாக இருந்து அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பிலிருந்தது. அதன் ஆதிக்கம் முதலில் சிறிதாக உடைந்தது கேரளாவில், 1957 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்று ஈ.எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஒரு நெகிழ்வான கூட்டாட்சி முறையை அரசியமைப்புச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது டாக்டர். அம்பேத்கர் கூறியிருந்தபோதிலும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் போதவில்லை என்பதை உணர்ந்த ஈ.எம்.ஸ். நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் ஒன்றை அமைத்தார்.
ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும், மாநில அரசு பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கவேண்டுமென்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் அது தேசிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் காங்கிரஸே அதிகாரத்திலிருந்தது. இதனால் மாநில உரிமைகள், ஒன்றிய அரசில் அதிகாரக் குவிப்பு என்கிற பிரச்சினை எழவே இல்லை. ஆனால், 1967ல் நடந்த பொதுத் தேர்தல் இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிவிட்டது.
காங்கிரஸ் தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநிலங்களில் தோல்வியடைந்தது. இதனால் தி.மு.க, அகாலி தளம் போன்ற மாநில அளவிலான கட்சிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தன. மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு பெரிய தடை என்பதை அண்ணாவின் அரசு தன் நேரடி அனுபவத்தில் உணர்ந்தது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் விழா நேரத்தில் எழுதிய கட்டுரையில் அண்ணா எழுதிய வரிகள்:
“மாநிலங்கள் அதிக அதிகாரம் பெறும் வகையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறிவருகிறேன். இதற்கு நல்லாதரவு என்பது நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்கு தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன. அரசியல் கட்சிகளைச் சாராத அறிவாளர்கள் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். நாம் அரசு நடத்தியதால் கிடைக்கின்ற நற்பயன்களிலே இதனை ஒன்று என்றே கருதுகிறேன்’ இதன் தொடர்ச்சியாக, 1967 மற்றும் 1971 பொதுத் தேர்தலில் தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சிக்கு வழிவகுக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வர வேண்டுமென்று தெளிவுபடுத்தியிருந்தது.
அண்ணாவின் அகால மறைவுக்குப் பின் முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அதிக அதிகாரங்கள் இல்லை என்று புகாராக மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. பதவியேற்றவுடன், மார்ச் 17, 1969 அன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழுவை நியமிக்கப்போவதாக அறிவித்தார். நீதிபதி பி.வி.ராஜமன்னாரைத் தலைவராகவும் லட்சுமணசாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்தார். மே 27, 1971 அன்று, தன் 383 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்த ராஜமன்னார் குழு, ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு குறித்து பல பரிந்துரைகளைச் செய்திருந்தது. அவற்றுள் முக்கியமான பரிந்துரைகள்:
ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றியப் பட்டியல், மாநில பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என்று பிரிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை திருத்தப்பட்டு, மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்;
எல்லா மாநிலங்களுக்கும் மாநிலங்களவையில் சமமான இடங்கள் அளிக்கப்பட வேண்டும்.
மாநில அரசுகளைக் கலந்தாலோசித்துதான் ஒன்றிய அரசு ஆளுநர்களை நியமிக்க வேண்டும்.
மாநில சட்ட மன்றங்களைக் கலந்தாலோசித்துதான் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும்.
வரி சீர்திருத்தம் செய்து, மாநிலங்களின் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமெனக் கோரி, கலைஞர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து,
ஏப்ரல் 16, 1974 அன்று, தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சி கோரும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். தீர்மானத்தின்மீது நடந்த விவாதத்தில் முதல்வர் கருணாநிதி தி.மு.க.வின் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு அளித்த விளக்கம்: “இன்றைய தினம் மாநில அரசுக்குள்ள வேலை என்ன? மக்களுக்குச் சோறு போடுவது வேலை வாய்ப்பு தருவது -தொழில், நீதியை நிலைநாட்டுவது சுகாதாரத்தைப் பேணுவது – கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்யவேண்டியது, மாநில அரசு. ஆனால், மத்திய அரசின் வேலை என்ன? நாடக மேடையிலே வருகிற இராஜா, மந்திரியை அழைத்து, ‘மந்திரி, நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்று கேட்பானாம். அதுபோல மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை, மத்திய மந்திரி தில்லியில் கூட்டி, ‘பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் இருக்கிறதே தவிர, வேறு ஒன்றுமில்லை! மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர – மத்திய அரசு அல்ல. மக்கள்மீது அக்கறை இருக்கலாம் மத்திய அரசுக்கு. அது எப்படிப்பட்ட அக்கறை? – அண்ணா விளக்குகிறார்: ‘குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் மூன்றாவது மாடியிலுள்ள சீமான் ஏதோ புகை தெரிகிறதே, தீ விபத்து போலிருக்கிறதே!’ என்று கூறுவானே, அதைப் போன்ற அக்கறைதான் மத்திய அரசின் அக்கறை. ஆனால், குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் பதறித்துடிப்பது யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைவாசிதான். அதைப்போல் மாநில அரசுதான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்கவேண்டியது எனவும் குறிபிட்டார்!
அத்தீர்மானம்: ‘தலைவரவர்களே, மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், ராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை பேணிக்காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துகளை மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவுசெய்கிறது’ ஐந்து நாட்கள் நடந்த அனல்பறக்கும் விவாதத்தின் முடிவில், 161-23 என்கிற வாக்கு விகிதத்தில் தீர்மானம் நிறைவேறியது.
இந்தியாவில் மாநில சுயாட்சிக்காகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல் சட்டமன்றம் என்கிற பெயரும் கிடைத்தது. ‘நான் தமிழ்நாட்டிற்கு மட்டும் மாநில சுயாட்சி கேட்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் கேட்கிறேன்’ என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்தபோது, அது தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவை அனைத்தும் ஒன்றிய அரசிற்கு எதிராக மாநில உரிமைகள் என்கிற கொள்கையின் அடிப்படையில் ஒரே மேடையில் இணையும் வாய்ப்பினை உருவாக்கியது. பின்னால், காங்கிரஸின் ஒற்றை ஆட்சிக்காலம் முடிந்து, கூட்டணி ஆட்சி சகாப்தம் உருவானதற்கு விதையானது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த அகாலிதளம் ஆனந்த்பூர் சாஹிப் என்கிற இடத்தில் 1973ல் நடந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் மாநில சுயாட்சி என்கிற முழக்கத்தை ஏற்கெனவே எழுப்பியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான மேற்கு வங்க அரசு 1977ல் ஆட்சிக்கு வந்ததும் ‘ஒன்றிய-மாநில உறவுகளைச் சீரமைப்பது குறித்த அணுகுமுறை’ என்கிற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையையும், மனுவையும் ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை 1983 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
1983ஆம் ஆண்டு, எதிர்கட்சிகளின் மாநாடு ஒன்றை ஸ்ரீநகரில் கூட்டிய ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தன்னாட்சி கோரும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். தெலுகு தேசம் தலைவராகவும் ஆந்திர மாநில முதல்வராகவும் இருந்த என்.டி.ராமாராவ், தென் மாநில முதல்வர்களின் கவுன்சில் ஒன்றை உருவாக்கினார்.
1983ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த ஃபரூக் அப்துல்லா அரசும், 1984ல் ஆந்திரப்பிரதேசத்தில் ஆட்சிசெய்த என்.டி.ராமராவ் அரசும், ஜனநாயக விரோதமாகக் கலைக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளை இந்த இரு நிகழ்வுகளும் ஒன்றிணைத்தன. இந்த ஒற்றுமைதான், தேசிய முன்னணி என்கிற எதிர்க்கட்சிக் கூட்டணியாக உருவெடுத்தது. ஏற்கெனவே 1976இல் அவசரநிலைக் காலத்தில் இந்தக் கலைப்பு சதிக்குப் பலியான கலைஞர் கருணாநிதி தேசிய முன்னணியின் முன்னணித் தலைவராக இருந்தது மட்டுமின்றி அந்தக் கூட்டணியின் தொடக்கப் பேரணியை சென்னையில் நடத்தியும் காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர்மீது இருந்த பெரிய நம்பிக்கைக்கு, மிசா சட்டத்தை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேனென்று உறுதியாக நின்றதும் ஒரு காரணம்.
அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 26, 1975 அன்றிலிருந்து, தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட ஜனவரி 31, 1976 வரையிலான ஆறு மாதங்களுக்கு ஒன்றிய அரசின் பிடியிலிருந்து தப்பிய பல அகில இந்தியத் தலைவர்களுக்கு தமிழ்நாடுதான் புகலிடமாக இருந்தது. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்றவர்கள். தமிழ்நாட்டில்தான் அப்போது தங்கியிருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே. கோபாலன் நாடாளுமன்ற அவையிலேயே அவசரநிலைக் கால அறிவிப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால், அன்றிருந்த பத்திரிகைத் தணிக்கை முறையின் காரணமாக, அந்தச் செய்தியும், உரையும் மக்களுக்குத் தெரியாமல்போனது. அந்த உரையை உருட்டச்சு (cyclostyle) செய்து நாடெங்கும் ரகசியமாக வினியோகித்தது மார்க்சிஸ்ட் கட்சி. உரை, உருட்டச்சு செய்யப்பட்டது சென்னையில்தான்.
எமர்ஜென்சி காலத்தில் நடந்தவற்றை An Eye to India: The Unmasking of a Tyranny என்கிற நூலில் துல்லியமாக, ஏராளமான ஆதாரங்களுடன் பதிவுசெய்த டேவில் செல்போர்ன் என்கிற பத்திரிகையாளர், இப்படி எழுதுகிறார்: இந்திரா காந்தியின் அவசரநிலை ஆட்சியை இரண்டு மாநிலங்கள்தான் எதிர்த்து நின்றன. ஒரு ‘வலுவான, நிலையான ஒன்றிய அரசை’ உருவாக்குவது என்கிற பெயரில் அந்த அரசை மாநிலங்களில் எதிர்த்துவரும், மீதமிருக்கும் இரண்டு காங்கிரஸ் அல்லாத அரசுகளைக் கலைக்க இந்திரா காந்தி முடிவுசெய்தார் என்கிறார், செல்போர்ன். அவர் குறிப்பிடுவது தமிழ்நாடு மற்றும் குஜராத் அரசுகளை.
1971ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அரசு, ஏன் தி.மு.க.வை விரோதியாகப் பார்க்கத் துவங்கியது என்பதை கலைஞர் கருணாநிதியே விளக்கியிருக்கிறார். அவர் கூறிய இரண்டு காரணங்கள்: 1. அக்டோபர் 14, 1973 அன்று அலகாபாத் நகரில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் நலன் காக்கும் ஒரு மாநாட்டில் கலைஞர் கலந்துகொண்டார். இந்த மாநாட்டைக் கூட்டியவர், சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜ் நாராயண். (இவர் 1971 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றவர்; அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, இந்திரா காந்தி அவசரநிலை அறிவிப்பதற்கு முக்கிய காரணம்; எமர்ஜென்சிக்குப் பின்னால் நடந்த தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்தவர்) இது, இந்திரா காந்தியைக் கோபப்படுத்தியிருக்க வேண்டும் என ‘நெஞ்சுக்கு நீதியில்’ எழுதும் கலைஞர், ‘முழுப்புரட்சி இயக்கத்தை இயக்கத்தை நடத்திவந்த ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் எனக்கிருந்த தொடர்பும் புதுடெல்லிக்கு எரிச்சலூட்டியிருக்கக்கூடும்,’ என்கிறார்.
- இந்தியா முழுவதும் காங்கிரஸின் பிடியில் இருக்கிறது. தமிழ்நாடு ஒரு எதிர்க்கட்சியின் கைகளில் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தி.மு.க.வின் மாநில தன்னாட்சிக் கோரிக்கையிலிருந்துதான் அவர்களின் கோபம் எழுகிறது. நாங்கள் கேட்கும் தன்னாட்சி தமிழ்நாட்டிற்கு மட்டுமானதல்ல. அது உத்தரப்பிரதேசத்திற்கும் சேர்த்துதான். ‘தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அடி தண்ணீர்க்குழாய் போடுவதற்குக்கூட ஒன்றிய அரசின் அனுமதியைக் கேட்க வேண்டியிருக்கிறது;’ என்றார் கலைஞர்.
தன்னாட்சி, கூட்டாட்சி போன்றவை குறித்து கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டை டெல்லியிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகள் பாராட்டின. 1970ல் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையைக் குறித்து, ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு இப்படிக் கூறியது: ‘கூட்டாட்சி என்பதற்கும் கூட்டணி ஆட்சி என்பதற்கும் இடையிலிருக்கும் வேறுபாட்டிற்கு கருணாநிதி ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்:
கலைஞர் கருணாநிதியின் உரையைக் குறித்து ஷங்கர்ஸ் வீக்லி என்கிற வாராந்திர இதழ் கூறியது: ‘கருணாநிதியின் புதிய ஆலோசனையைக் குறித்து அச்சப்படத் தேவையில்லை. கூட்டாட்சி என்பதற்கு அவர் ஒரு அமைப்புரீதியான வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்.’
1971லேயே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, தேசிய அரசியலுக்குள் நுழைந்த தி.மு.க, அவசரநிலை காலத்துக்குப் பின் தேசிய அளவிலான கூட்டணிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. 1988ல் அமைக்கப்பட்ட தேசிய முன்னணி காங்கிரஸ், பி.ஜே.பி ஆகியவற்றுக்கான ஒரு தேசிய அளவிலான மாற்றாக அமைந்தது. அதன் தலைவரான வி.பி. சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மண்டல் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த முடிவுக்கு ஓர் ஒன்றிய அரசு வருவதற்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், இடஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முடிவு, வி.பி.சிங்கின் இந்த நகர்வுக்கு உந்துகோலாயிருந்தது. நேருவிற்குப் பிறகு தமிழ்நாட்டு மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராக வி.பி.சிங் இருந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
தேசிய முன்னணிக்குப் பின் ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக க் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போன்றவற்றில் அங்கம் வகித்து, அமைச்சரவை பொறுப்புகளிலும் இருந்தது தி.மு.க. இதில், பி.ஜே.பி தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது திராவிட இயக்கத்தின் ஆதரவாளர்களிடையே கூட கடுமையான விமரிசனத்திற்குள்ளானது.
சமூக நீதிக்காகவும் மொழிப்போரிலும் ஒன்றிய அரசை எதிர்த்து நின்று வளர்ந்த ஒரு மாநில அளவிலான கட்சி, அதே ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினைப் பெற்றது, இந்திய அரசியல் வரலாறு 75 ஆண்டுகளில் எவ்வளவு மாறியிருக்கிறது என்பதற்கான சான்று.
தொடரும் அநீதி – தொடரும் போராட்டம்
காங்கிரஸின் அரசியல் வீழ்ச்சிக்குப் பின் வந்த காலகட்டத்தில் இனி கூட்டணி அரசுகள்தாம் கோலோச்சும், மாநில உரிமைகளுக்கு ஊறு விளையாது என்கிற நம்பிக்கையை 2014 பொதுத் தேர்தல் சிதறடித்தது.
இந்திய வளர்ச்சிப்போக்கில் அதிகப் பொருளாதார பலன் பெற்ற முதலாளிகள், சனாதனத்தையும் வருணாசிர தர்மத்தையும் தூக்கிப் பிடிக்கும் உயர்ஜாதிகளின் (உயர்நடுத்தர வர்க்கத்தின்) பிரதிநிதியாக ஒன்றிய அரசினை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி அணி கைப்பற்றியது. சமூக நீதி, மாநில உரிமைகள், மொழியுரிமை, சமமான நிதிப்பங்கீடு என திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாகப் போராடிப் பெற்ற பலன்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கும் மூர்க்கத்துடன் மோடி அரசு களத்திலும், கருத்தியல்ரீதியாகவும் செயல்பட்டுவருகிறது.
மாநில உரிமைகளை எப்பாடுபட்டாவது காப்போம், தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டோம் என்கிற உறுதியுடன் திரு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வும் தமிழ்நாடு அரசும் எதிர்த்த நிற்கின்றன. தேசிய அளவிலான கூட்டணிகளை அமைத்து வெற்றிகண்ட தி.மு.க. இன்று, இந்தியா கூட்டணியின் வலிமைமிகு அங்கமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மோடி அலை எனும் மாய பிம்பத்தை தமிழ்நாட்டின் எல்லையிலேயே தடுத்துநிறுத்தி, வலுவிழக்கச் செய்யும் ஒரு கூட்டணியை அமைத்த ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலிலும் வென்று ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறார்.
பல தசாப்தங்களுக்கு முன், அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் மாநில உரிமைகள் குறித்து பேசிய அனைத்தையும் மீண்டும் இன்னமும் வலிமையாகப் பேசவேண்டிய நிலையில்தான் மோடியின் ஃபாசிஸ ஆட்சி இந்தியாவை வைத்திருக்கிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்ட அவர், ஒன்றிய-மாநில உரிமைகளை ஆய்வுசெய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழு எப்படி அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் குவிந்திருக்கின்றன என்பதை விவரித்திருந்தது. ஆனால் இன்று, அந்த அதிகாரங்கள் சுமார் 500 பேரைக் கொண்ட பிரதமர் அலுவலகத்தில் குவிந்துகிடக்கின்றன.
அதிகாரக் குவிப்பினால் நிகழும் அநீதிகளை முதல்வர் ஸ்டாலின் இப்படிப் பட்டியலிடுகிறார்:
‘மாநில அரசின் கல்விக்கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யும் வண்ணம் இருந்துவந்த நமது கல்விக்கொள்கையினை நீர்த்துப்போகச் செய்து, முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும் விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
‘இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசிய கல்விக்கொள்கை 2020ன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின்மீது திணிக்க முற்படுகிறது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின்மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்கவேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்துவருகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்குத் தெரிவித்துள்ளது’.
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியானது, தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இயற்கைச் சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும் வழங்கப்படவே இல்லை’. ‘ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும் விதமாக, 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச்செல்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுவருகின்றன’.
தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினையை முதன்முதலாக எழுப்பி, தென் மாநில முதல்வர்களின் மாநாட்டைக் கூட்டிய ஸ்டாலின், பி.ஜே. பி அரசின் மக்கள் விரோத கொள்கைகள் அனைத்து மாநிலங்களையும் பாதிக்கின்றன, நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் பேசவில்லை; அவர்கள் அனைவரின் உரிமைக்காகவும் பேசுகிறேன் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுப்பிய குரலின் எதிரொலி போல் இன்று பேசி, தேசிய அரசியலின் முக்கிய பிரச்சினைகளைத் தேசிய அளவிலான விவாதப் பொருளாக்கியிருக்கிறார்.
அண்ணா அன்று கூறியதுபோல் 1947ல் நாடு விடுதலை அடைந்தது ஒரு நீண்டகால உரிமைப் போராட்டத்தின் முதல் கட்டம்தான். அந்த உரிமைப் போராட்டம் இன்று இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பது போல் இந்தியா கூட்டணி என்கிற ஓர் எதிர் சக்தி உருவாகியிருக்கிறது. அந்த சக்திக்கு வலு சேர்த்திருக்கிறது, ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்!
https://www.apcnewstamil.com/news/article-news/kalathin-niram-karuppu-sivappu-the-dark-ages-of-human-rights-a-stormy-era-in-the-history-of-the-league-2/18634


