மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் “அலையடு ஹெல்த் சயின்ஸ்” படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் இருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கல்லூரி உள் புகார் குழு விசாரணை நடத்தி, ஒருவரை பணி நீக்கம் செய்தது. மற்றொரு ஊழியரை 2 மாதம் சஸ்பெண்டு செய்துவிட்டு, பின்னர் மாணவிகளுக்கு தொடர்பு இல்லாத வகையில் நகர பகுதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட டெக்னீஷியன் மீண்டும் கல்லூரிக்கு பணிக்கு வந்ததை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டித்தும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எக்ஸ்ரே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

அந்த மாணவிகளுக்கு ஆதரவாக மத்திய பல்கலைக்கழக மாணவர்கள், சட்டகல்லூரி மாணவர்கள், மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து மாணவிகள் புகார் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்பு காலாப்பட்டு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 7 மாணவிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் திவாகர், சரவணன் ஆகியோரை கைது செய்து போலீசார் காலாபட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா். அதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், இணை இயக்குநர் மேரி ஜோசபின் சித்ரா, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புலமுதன்மையர் அய்யப்பன், ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறை தலைவர் வல்ச டயானா, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகியோர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அளித்த தகவல்களை பதிவு செய்தனர். விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து சுகாதாரத்துறை செயலர் மூலமாக கவர்னரிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/the-work-of-issuing-s-i-r-calculation-forms-in-coimbatore-is-85-complete-district-collector-pawan-kumar-infor


