சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய பத்திரிகையாளர் பணிக்கு இடையூறு விளைவித்து வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையினர் தன்னையும், தனது அலுவலக ஊழியர்களையும் குறிவைத்து துன்புறுத்தி வருவதாகவும், சில சமயங்களில் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மாநில உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறையிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
சவுக்கு சங்கர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்மீது புலன் விசாரணையில் உள்ள 13 வழக்குகளை 4 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 24 வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது அவரது மனுவில் வைக்கப்படாத கோரிக்கையாக இருந்ததாகவும், விசாரணை அமைப்புகளின் கருத்து கேட்காமல், நோட்டீஸும் அனுப்பாமல் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது விசாரணை சுதந்திரத்தை பாதிக்கக் கூடியது என அவர் மேன்முறையீட்டு மனுவில் கூறினார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நோட்டீஸ் பெற உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.


