ஆவடி மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் காலையில் இருந்து விடாமல் தொடர்மழை பெய்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதன்மையான சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார்களை வைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது ஒவ்வொரு மழை காலங்களிலும் ஆவடி வீட்டு வசதி வாரியம் பகுதி இப்படித்தான் இருக்கிறது. அதிகாரிகள் பொதுமக்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்பது கூட இல்லை. அனைத்து அதிகாரிகளின் மெத்தன போக்கே மக்களின் துயரத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர்.


