திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக – ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.


திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று நேற்று மீண்டும் தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறி பாஜக தலைவர் நயினார், ஹெச்.ராஜா உள்ளிட்டோரை கைது செய்துள்ளது. தமிழக அரசு மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய கடமையை, தனது அரசியல் அமைப்பு சட்ட கடமையை செய்திருக்கிறது. 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு அரசு சரியான முடிவை எடுத்து, பாஜகவினரை கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
அரசியலில் மதத்தை கலக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லியுள்ளது. ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகள் அரசியலில் எப்போதும் மதத்தை கலக்கிறார்கள். சபரிமலை, சிதம்பரம் கோயில் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்றும் சொல்லும் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல், அதற்கு நேர்மாறாக திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியில் உள்ள சங் பரிவார் அமைப்புகள் தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை வாங்கிக் கொண்டு அவர்கள் செல்கிறார்கள்.

வழக்கமாக அவர்கள் பிரச்சாரம் செய்த அனைத்து விவகாரங்களுக்கும் நேர் எதிராக நின்று, ஒரு அரசியல் நடவடிக்கையாக இதை செய்கிறார்கள். அதனால் தான் எடப்பாடி அறிக்கை விடுகிறார். ஹெச்.ராஜா, அண்ணாமலை, நயினார் போன்றவர்கள் வருகிறார்கள். இதை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் மக்களும், தமிழ்நாடு அரசும் அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால் இந்த பிரச்சினை கலவரமாக மாறாமல் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு செய்தது சரிதான்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஒரு தன்மானப் பிரச்சினையாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பார்க்கிறாரா? என்று தெரியவில்லை. வழக்கை மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 6 மணிக்கு வர சொல்வது. 10 நிமிடத்தில் உத்தரவை எழுதி சிஎஸ்ஐஎப் படையை அனுப்புவது போன்றவை என்ன நடைமுறை என்று தெரியவில்லை. நீதிபதி இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டும்? என்கிற கேள்வி சாதாரண மக்களிடம் எழும் அல்லவா.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்திருக்கும் தீர்ப்பு ஒரு வரலாற்று பிழை. மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றில் கருப்பு பக்கங்களில் தான் அந்த தீர்ப்பு எழுதப்பட வேண்டும். நடப்பவை எல்லாம் அரசியல் சட்ட மீறல். அதிகார துஷ்பிரயோகம் ஆகும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விளக்கம் அளிக்க 4 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 6.07க்கு விசாரணைக்கு எடுத்தார். மனுதாரர் ராமரவிக்குமாரிடம் தீபம் ஏற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். அவர் ஏற்றவில்லை என்கிறார். உடனே அரசுத் தரப்பு சொல்ல வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி சிஎஸ்எப்-ஐ கூப்பிட்டு உத்தரவை போட்டு அனுப்பி வைத்தார்.
இதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கையாளும் முறையா? 1920 முதல் 2025 வரை வழக்கு 124 ஆண்டுகளுக்கு வழக்குகள் நடைபெற்றது. இதில் எந்த வழக்கிலாவது தீபத்தூண் என்று சொன்னார்களா? 1996 தீர்ப்பில் தீபத்தூண் என்று சொன்னார்களா? மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை. 2 வாரங்களுக்கு முன்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக ஒரு பெட்டிஷனை போட்டு, எந்த வித ஆதாராங்களும் கொடுக்காத நிலையில் நீதிபதி நேரில் சென்று பார்த்து தீபத்தூண் மாதிரி உள்ளது அதில் ஏற்றுங்கள் என்று சொன்னார்.

உச்சநீதிமன்றத்தில் இன்று காலை தான் தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளது. எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும் என்பது பின்னர்தான் தெரியும். அதேவேளையில் காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. மதியம் 12.30 மணி அளவில் திருப்பரங்குன்றம் கோவில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கட்டும். ஆனால் அநீதியான உத்தரவுகள் நாட்டில் பிறப்பிக்கப்பட்டால், தமிழ் மண் அதை ஏற்காது என்கிற முடிவை தமிழக மக்கள் ஏற்க வேண்டும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு உச்சநீதிமன்றம் தான் வழங்கியது. நாம் போராடி அதை மாற்றினோம் அல்லவா? ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்புதான் இறுதியானது. மொத்தத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிற விவகாரத்தில் நீதிமன்றத்தின் அணுகுமுறை அரசியல் சட்ட மீறலாகும். ஹெச்.ராஜா போன்றவர்கள் தமிழக முதல்வரை அவமதித்து பேசியது உச்சபட்ச திமிர். அதை தமிழக மக்கள் அடக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


