அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அது முழுக்க முழுக்க திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மற்றும் அமித்ஷா வருகையின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு குறித்து போடும் அரசியல் கணக்குகள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதை எப்படி சரிகட்டுவது என்று தெரியாமல் விளித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை என அனைத்து காய்களையும் இறக்குகிறார்கள். நயினாருக்கும், டிடிவி தினகரனுக்கும் மோதல் உள்ளது. அதனால் அண்ணாமலையை இறக்கி, டிடிவி – ஓபிஎஸ் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்கள். அவர்களிடம் பேசியபோது, அவர்கள் ஒரு பதில் சொன்னார்கள்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை நேரடியாக சந்தித்து, ஓபிஎஸ், தினகரன் தரப்பில் வைக்கப்படும் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியின் கால்களிலேயே விழுந்துவிட்டார். ஒரே சமுதாயத்தை சேர்ந்த தன்னை பதவியில் இருந்து காலி செய்தது நீங்கள் தான். உங்களுக்கு பயந்துதான் கட்சி தலைமை தனக்கு பதவி எதுவும் வழங்கவில்லை. எனவே தனக்கு கட்சியில் பதவி கிடைக்க நீங்கள் தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று எடப்பாடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாகியது. ஆனால் அப்படி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் பேசிய சி.வி.சண்முகம், குருமூர்த்தியை புரோக்கர் என்று விமர்சித்ததுடன், உடனிருந்தே அதிமுகவை கெடுத்தவர்கள் தான் அதிகம் என்று பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். இந்த மோதலின் பின்னணியை அறிவதற்காக அமித்ஷா, நயினார் நாகேந்திரனை எடப்பாடி பழனிசாமியிடம் அனுப்பி வைத்தார்.
அப்போது தனிக்கட்சி தொடங்குவதாக சொன்ன ஓபிஎஸ், தவெக செல்வதாக மிரட்டும் வைத்திலிங்கம் ஆகியோரை சமாதானம் செய்து மீண்டும் அதிமுகவில் இணைப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதிமுக அவைத்தலைவர் பதவியை கே.பி.முனுசாமிக்கு வழங்குவதற்காக தான் பொதுக்குழுவையே நடத்தினார்கள். ஆனால் அந்த பதவியை காலியாக வைத்ததே, அதை ஓபிஎஸ்க்கு வழங்குவதற்காக தான் என்றும் சமிக்ஞைகள் சொல்கின்றன. எடப்பாடியை பொருத்தவரை தனக்கு கட்டுப்படும் நபரை அந்த பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். எனவே ஒபிஎஸ்க்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாது.

தற்போது சசிகலாவிடம், பாஜக தலைமை நேரடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அவரை நேரடியாக பாஜகவில் சேரும்படி கூறுகிறார்கள். சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை 2029 வரை உள்ளது. அதுவரை தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கவும், அமலாக்கத்துறை சோதனைகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கும் அவர் பாஜகவுக்கு செல்ல வேண்டும். அதற்கு சசிகலா தயாராகி வருகிறார். அதேவேளையில் தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
லண்டன் ஓட்டல் வழக்கு, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. அதனால் தினகரன், விஜய் உடன் கூட்டணிக்கு செல்ல முடியாது. பாஜக தலைமையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்போம் என்று சொன்னபோதும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே அண்ணாமலை, எடப்பாடி எதிர்ப்பை கைவிட்டு, என்டிஏ கூட்டணிக்கு வரும்படி தான் தினகரனுக்கு அறிவுரை வழங்கியிருப்பார்.

கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி என்பது, அவர்கள் தவெக உடன் கூட்டணிக்கு செல்வோம் என்று சொல்கிற டிரம்ப் கார்டை ஸ்லோடவுன் செய்கிறது. போட்டி கடுமையாக இருந்ததால், விஜய் ரசிகர்கள் 10 லட்சம் பேரை பயன்படுத்தி, கே.சி.வேணுகோபால் வரலாம் என்று எண்ணினார்கள். ஆனால் மிகவும் எளிதாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தவெக உடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்கிற வாதத்தை வலுவிழக்க செய்துள்ளது. தவெகவை பாஜக எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமானது. இதுவரை பாஜக, தவெகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேபோல் தவெகவும், பாஜகவை எதிர்த்து பேசவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கூட அரசு தான் தவறு செய்ததாக நிர்மல் குமார் சொன்னார்.

தவெக மீது பாஜகவுக்கு சாஃப்ட் கார்னர் உள்ளது. அது எவ்வளவு தூரம் நீடிக்கும்? நாளைக்கு அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், மறைமுகமாக விஜயை போனில் அழைத்து பேசுவாரா? அல்லது மறைமுகமாக இருவரும் சந்தித்து பேசுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. அதிமுக, தவெக, பாஜக என மூன்று கட்சிகளிடமும் திமுக எதிர்ப்புக்காக மற்றவர்களை பயன்படுத்தி கொள்கிற திட்டம் உள்ளது. எனவே திமுக எதிர்ப்புக்காக மூவரும் ஒன்றிணைவார்களா? என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து நேரட்டிவ் செட் செய்யும்போது, சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாக தான் திரளும். இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காத விஜயும் அம்பலப்படுவார், இவ்வறு அவர் தெரிவித்தார்.


