திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.


திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் விவரங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பான விசாரணையின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். 1923ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவற்றை எல்லாம் பரிசீலனை செய்யாமல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை வழங்கியிருக்கிறார் என்று அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே முடிவாகிய ஒரு விவகாரத்தில் எப்படி மீண்டும் விசாரித்து உத்தரவு வழங்க முடியுமா? என்று பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களை விளக்கி பேசினார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அதிகாரி சார்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜராகி, எழுத்துப்பூர்வமான வாதங்களையும், நீதிமன்றத்தில் நீளமான வாதத்தையும் முன்வைத்தார். அதில் மிக முக்கியமாக அவர்கள் முன்வைத்தது, கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக 5 நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அவற்றில் எந்த இடத்திலும் அவர்கள் இந்த தீப தூண் விவகாரத்தை கொண்டுவரவில்லை.

இதை தாண்டி திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் எந்த வழக்கிலும் தீபத்தூண் என்று அவர்கள் சொல்லவில்லை. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக மட்டும்தான் இந்த பிரச்சினை வந்துள்ளது என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் திறந்து விசாரிக்கும் அதிகாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கிடையாது. அந்த அதிகார வரம்பை ஜி.ஆர்.சுவாமிநாதன் மீறியிருக்கிறார் என்பது அவர்கள் வைத்த வாதம்.
ராம ரவிகுமார் வழக்கில் அவர்கள் தரப்பு வாதத்தில் சொல்லப் பட்டதை தாண்டி நீதிபதி வழக்கில் பயணித்துள்ளார். குறிப்பாக அவரது சொந்த விருப்பத்தின் பெயரில், சொந்த புரிதலின் பெயரில் என்ன செய்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் நீதிபதி அந்த தீர்ப்பை எழுதியுள்ளார். வழக்கில் மனுதாரர் குறிப்பிட்ட விஷயத்திற்கு தான் பதில் சொல்ல முடியும். நீதிபதி தன்னுடைய சொந்த புரிதலில் தீர்ப்பு எழுதினார் என்றால், அதற்கு தாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ராம ரவிக்குமாரின் மனுவை நேற்று மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி நீதிமன்றத்தில் முழுமையாக வாசித்து காண்பித்தார். அதில் முதலாவது 5 வழக்குகளின் எண்களை குறிப்பிட்டு, அந்த தீர்ப்புகளின் அடிப்படையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ராம ரவிகுமார் சொல்கிறார். 2வது கோயில் தரப்பில் பாரம்பரிய வழக்க முறைப்படி திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தன்னையும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்ட 5 வழக்குகளில், முதலாவது சிக்கந்தர் மலை என்று அழைக்கக்கூடாது என்ற வழக்கு, 2-வது ஆடு – கோழி வெட்டக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு. 3வது மலையில் தொழுகை நடத்தக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு. 4வது தர்கா தரப்பில் இருந்து காவல்துறை தங்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு. இவை வேறு அமர்வுகள் விசாரித்த வழக்குகளாகும்.
5-வது வழக்கு 1996ல் கார்த்திகை தீபம் தொடர்பாக சொன்ன வழக்கு. அந்த வழக்கில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றுவது தான் பாரம்பரியமான இடம். ஏற்கனவே உள்ள 1923 நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். 3வதாக கோயில் நிர்வாகமோ, தனி நபரோ தீபம் ஏற்ற விரும்பினால், கோயில் நிர்வாகம் இடத்தை முடிவுசெய்ய வேண்டும். அதற்கு முன்பாக இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் போதிய அனுமதி பெற வேண்டும் என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

1996 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் தான் இருக்கிறார்கள். மேலும் தர்காவுக்கு வழங்கப்பட்ட சொத்தில் இருந்து 15 மீட்டர் தள்ளி எங்கு வேண்டும் என்றாலும் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பில் சொல்லியுள்ளனர். ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தர்காவின் சுற்றுச்சுவரில் இருந்து 15 மீட்டர் என்று சொல்கிறார். திருப்பரங்குன்றத்தில் 3 மலை உச்சிகள் உள்ளதாக நீதிபதிகள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகம் தரப்பில் கருவறைக்கு மேலே உள்ள மலை உச்சியில் தான் தீபம் ஏற்றுவோம். அதுதான் பாரம்பரிய இடம் என்று வாதிடப்பட்டது.
மற்றொரு மலையில் தர்கா உள்ளது. அந்த மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு ராமரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் கிடையாது என்று மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி வாதிட்டார். மேலும், அந்த மலையில் 8 அடி உயரமுள்ள கிரானைட் தூண் உள்ளது. அந்த தூண் மீது 11 லிட்டர் நெய், பெரிய திரியை வைக்க முடியாது. அப்படி தீபம் ஏற்ற வேண்டும் எனில் திருவண்ணாமலை, உச்சி பிள்ளையார் கோயிலில் வைப்பது போன்று புதிதாக தான் கட்டி தீபம் ஏற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எப்போது அந்த தூண், அங்கே வைக்கப்பட்டது என்பதற்கு இந்த வழக்கிலும், இதற்கு முந்தைய வழக்குகளிலும் எந்த ஆதாரம் கிடையாது என்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வாதிடப்பட்டது. மேலும், அந்த கல் தீப தூணா? அல்லது சர்வே கல்லா? என்பதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது. திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள இந்து வழிபாட்டு முறைக்கும், அந்த தூணிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. வழிபாட்டு முறைக்கு தொடர்பில்லாத ஒரு கல்லில் கோயில் நிர்வாகம் எப்படி போய் ஏற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நீதிபதிகள் தரப்பில், அந்த கல் சர்வே கல் என்பதற்கான ஆதாரம் உள்ளதா? என வினா எழுப்பப்பட்டது.
அதற்கு கோயில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, அந்த கல் சர்வே கல்லா? அல்லது தீபத்தூணா என்பதற்கான உறுதியான ஆதாரம் எங்களிடம் இல்லை. அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்புக்கு உள்ளது. வழக்கை தொடர்ந்தவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் வழக்கில் எங்களுடைய கருத்தை கேட்டு, அதை அடிப்படையாக வைத்து முடிவு செய்ய முடியாது. அவர்கள் வழக்கை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். அதற்கு பிறகு நாங்கள் சொல்கிறோம் என்று தெரிவித்தார், இவ்வாறு அவர் கூறினார்.
