உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்
“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” – மார்கஸ் ஆரீலியஸ்
சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் ‘ஹரிக்கேன்’ கார்ட்டர், 1960களின் மத்தியில், தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தன் உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவர் செய்யாத ஒரு பயங்கரமான குற்றம் அவர்மீது தவறாகச் சுமத்தப்பட்டது. அவர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். பாரபட்சமான விசாரணை நடைபெற்றது. அதில் அவருக்கு நியாயமற்ற ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று ஆயுள் தண்டனைகள் அவருக்கு வழங்கப்பட்டன.

புகழ் மற்றும் வெற்றிச் சிகரத்திலிருந்து அதலபாதாளத்தை நோக்கிய படுபயங்கரமான வீழ்ச்சி அது. கார்ட்டர் ஒரு விலையுயர்ந்த கோட்டும், ஐயாயிரம் டாலர் மதிப்புக் கொண்ட ஒரு வைர மோதிரமும், ஒரு தங்கக் கைக்கடிகாரமும் அணிந்து கொண்டு சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார். உள்ளே நுழைந்ததும், அச்சிறைச்சாலையின் உயரதிகாரி ஒருவரைத் தான் பார்க்க விரும்பியதாக அவர் தெரிவித்தார்.
தன்னைச் சந்திக்க வந்த தலைமைக் காவலரின் கண்களைக் கார்ட்டர் நேருக்கு நேர் உற்றுப் பார்த்தபடி, அவரிடம், “என்னை இந்தச் சிறைக்குக் கொண்டுவந்து சேர்த்த அநீதிக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் அறிவேன். அதனால், நான் விடுதலையாகின்றவரை இங்கு தங்கியிருக்க நான் தயாராக இருக்குறேன். ஆனால், எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில், நான் ஒரு கைதி அல்ல. நான் ஒருபோதும் சக்தியற்றவனாக இருக்க மாட்டேன்” என்றுகூறினார்.
அவா் இருந்தது போன் ஒரு சூழலை எதிா்கொள்பவா்கள் பெரும்பாலும் செய்வது போல அவா் மனமுடைந்து போகவில்லை. கார்ட்டர் தனக்கே உரித்தான சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தன்னுடைய மனப்போக்கையும் நம்பிக்கைகளையும் தேர்ந்தெடுப்புகளையும் அடகு வைக்க அவர் விரும்பவில்லை. அவர் பல வாரங்கள் தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதுகூட, தேர்ந்தெடுப்பதற்குத் தனக்குப் பல விஷயங்கள் இருந்ததாக அவர் கருதினார். உடல்ரீதியாக அவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றாலும், தன்னுடைய தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க அவர் விரும்பவில்லை.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவர் கோபம் கொண்டாரா? அதிலென்ன சந்தேகம்? ஆமாம், அவர் கடும் சீற்றம் கொண்டிருந்தார். ஆனால் தன்னுடைய கோபம் ஆக்கபூர்வமானதல்ல என்பதை அவர் உணர்ந்திருந்ததால், அவர் ஒருபோதும் ஆத்திரமடையவில்லை. மனமுடைந்து போவதற்கும் தாழ்ந்து போவதற்கும் விரக்தி அடைவதற்கும் அவர் இடம் கொடுக்கவில்லை. அவர் சிறை உணவை சாப்பிட மறுத்தார், கைதிகளின் சீருடையை அணியாமல் இருந்தார், தன்னைச் சந்திக்க வந்த எவரையும் பார்க்காமலிருந்தார், சிறை விடுப்புகளுக்கான கூட்டத்திய கலந்து கொள்ளாமலிருந்தார், தண்டனைக் காலத்தை குறைத்துக் கொள்வதற்காகச் சிறையின் உணவுக்கூடத்தில் வேலை செய்ய முன்வராமல் இருந்தார். தன்மீது எவருடைய சுண்டுவிரல்கூடப் பட அவர் அனுமதிக்கவில்லை.
இவை அனைத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது. தன்னுடைய ஆற்றல் முழுவதையும் அவர் தன்னுடைய வழக்கின்மீதே செலவழித்தார். தான் விழித்திருந்த ஒவ்வொரு கணத்தையும் சட்ட நூல்கள், தத்துவம் மற்றும் வரலாற்று நூல்களைப் படிப்பதில் அவர் செலவிட்டார். அவர்மீது பழி சுமத்தியவர்கள் அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாகச் சீரழித்திருக்கவில்லை. தான் இருக்கத் தகாத ஓர் இடத்திற்கு அவர்கள் தன்னை அனுப்பி வைத்திருந்ததாக அவர் கருதினார். அவ்வளவுதான். அங்கு நீண்டகாலம் இருக்க அவர் திட்டமிட்டிருக்கவில்லை. தனக்குக் கிடைத்திருந்த நேரம் முழுவதையும் படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் அவர் செலவழித்தார்.
இரண்டு விசாரணைகள் மற்றும் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய தீர்ப்பு திருத்தி எழுதப்பட்டது. கார்ட்டர் சிறையைவிட்டு வெளியேறிய உடனேயே,தன்னுடைய வாழ்க்கையை அவர் எந்த இடத்தில் விட்டிருந்தாரோ, அந்த இடத்திலிருந்து உடனடியாகத் தொடங்கினார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஷ்ட ஈடு கேட்டு அவர் வழக்குத் தொடரவில்லை. நீதிமன்றத்திலிருந்து மன்னிப்புக் கேட்டுக்கூட அவர் விண்ணப்பிக்கவில்லை. அப்படிச் செய்தால், அவர்கள் தன்னிடமிருந்து ஏதோ ஒன்றைப் பறித்துவிட்டிருந்தார்கள் என்பதைத் தான் ஒப்புக் கொண்டதாக ஆகும் என்று அவர் நினைத்தார். ஏனெனில், அவர் அப்படி ஒருபோதும் உணரவில்லை. அவர் இருண்ட தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தபோதுகூட அப்படி ஒருபோதும் உணரவில்லை. அவர் தன்னுடைய தேர்ந்தெடுப்பை மேற்கொண்டிருந்தார்: ‘இது என்னைக் காயப்படுத்தாது. இது எனக்கு நேர வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியிருந்திருக்க மாட்டேன். ஆனால், அது நிகழ்ந்துவிட்டதால், அது இனி என்னை எப்படி பாதிக்கும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதைத் தீர்மானிப்பதற்கான உரிமை வேறு எவருக்கும் கிடையாது.’
நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு சூழலையும் நாம் எப்படிக் கையாள்வோம் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஒரு சூழலை எதிர்கொள்கின்றபோது நாம் மனமுடைந்து போக வேண்டுமா அல்லது அதை எதிா்த்து நிற்க வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை நாம்தான் தீா்மானிக்கிறோம். ஒரு விஷயத்தை நாம் கைவிட வேண்டுமா இல்லையா என்ற தேர்ந்தெடுப்பைப் பிறர் நம்மீது திணிக்க முடியாது. உண்மையில்லாத ஒன்றை நாம் நம்ப வேண்டும் என்று யாராலும் நம்மை வற்புறுத்த முடியாது. நம்முடைய கண்ணோட்டம் நம்முடைய முழுமையான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அவர்கள் நம்மைச் சிறையில் தள்ளலாம், நம்மீது முத்திரை குத்தலாம், நம்முடைய உடமைகளைப் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர்களால் ஒருபோதும் நம்முடைய எண்ணங்களையோ, நம்முடைய நம்பிக்கைகளையோ, அல்லது நம்முடைய செயல்விடைகளையோ கட்டுப்படுத்த முடியாது.
அதாவது, நாம் ஆற்றலே இல்லாதவர்களாக ஒருபோதும் இருப்பதில்லை என்று அதற்குப் பொருள்.
சிறையில்கூட சில சுதந்திரங்கள் மிச்சமிருக்கின்றன. உங்களுடைய மனம் உங்கள் வசம் இருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருந்தால், சிறையில் உங்களுக்குப் புத்தகங்கள்கூடக் கிடைக்கும். உங்கள் வசம் ஏராளமான நேரம் இருக்கும். கார்ட்டர் ஒருபோதும் தன்னை ஆற்றலற்றவராகக் கருதியதில்லை. நெல்சன் மண்டேலாவிலிருந்து மால்கம் எக்ஸ் வரை பல தலைவர்கள் இந்த அடிப்படை வேறுபாட்டை உணர்ந்திருந்தனர். அதனால்தான் அவர்களால் தங்களுடைய சிறைக்கூடத்தைப் பட்டறைகளாக மாற்றித் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ள முடிந்தது, அதன் மூலம் அவர்களால் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழவும் முடிந்தது.
ஒருவரால் தன்னுடைய நியாயமற்றச் சிறைத் தண்டனையை, நன்மை பயக்கத்தக்க விதத்தில் முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொள்ள முடியுமென்றால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எந்தவொரு சூழலிலும் நன்மை இல்லையென்று நம்மால் கூறவே முடியாது. எந்தவொரு சூழலையும் நல்லது என்றோ அல்லது மோசமானது என்றோ முத்திரை குத்த முடியாது. நம்முடைய கண்ணோட்டத்தின்படி அவற்றை நாம் எடைபோடுகிறோம்.
ஒருவனுக்கு எதிர்மறையானதாகத் தெரிகின்ற ஒரு சூழல் மற்றொருவனுக்கு நேர்மறையானதாகத் தெரியக்கூடும்.
“எதுவும் நல்லதோ அல்லது மோசமானதோ அல்ல. எண்ணம்தான் அதை அப்படி ஆக்குகிறது. என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார்.
அமெரிக்க எழுத்தாளரான லாரா இங்கல்ஸ் வைல்டர் இந்த அணுகுமுறையைத் தன்னுடைய வாழ்க்கையில் சுவீகரித்துக் கொண்டவர். அவர் தன் வாழ்க்கையில் பல பாதகமான இயற்கைச் சூழல்களைச் சந்தித்தார். சாகசங்களாக எடுத்துக் அவற்றையெல்லாம் கொண்டார். புதிய இடங்களையும் புதிய விஷயங்களையும் முயன்று பார்ப்பதற்குத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளாக அவர் அவற்றைப் பார்த்தார்.
அதற்காக அவர், உலகம் எப்போதும் சிறப்பாக இருக்கிறது என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் என்று கூற முடியாது. ஒவ்வொரு சூழலையும் கடின உழைப்பாலும் பொங்கி வழிந்த உற்சாகத்தாலும் அவர் வரவேற்றார். பிறர் அதற்கு நேரெதிரான தேர்ந்தெடுப்புகளை மேற்கொண்டனர். அவர் சந்தித்த அளவு பயமுறுத்துகின்ற சூழல்களை நாம் எதிர்கொள்வதில்லை என்றாலும், நம்முடைய சூழ்நிலை படுமோசம் என்ற முடிவுக்கு நாம் உடனடியாக வந்துவிடுகிறோம்.
இப்படித்தான் சாதாரணமான தடைகள்கூடப் பெரும் முட்டுக்கட்டைகளாக ஆகிவிடுகின்றன.
நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு தடையையும், நமக்கு நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து நாம் கொண்டுள்ள கண்ணோட்டங்கள் மூலமாக நாம்தான் உருவாக்கிக் கொள்கிறோம்.
நமக்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஓர் அர்த்தத்தைக் கற்பித்து அது குறித்த ஒரு கதையை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம்.
சொந்தமாக உங்களுக்குச் இருக்கின்ற ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கின்ற ஓர் ஊழியர் தன்னுடைய கவனக்குறைவால் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதனால் உங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கத்தான் நீங்கள் ஏகப்பட்டப் பணத்தையும் நேரத்தையும் அதில் கொட்டியிருந்தீர்கள். அதனால் அந்த ஊழியர்மீது நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். அல்லது அதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, உங்களுடைய அமைப்புமுறையில் தேவையான மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
நிகழ்வு ஒன்றுதான். ஒருவர் தவறிழைத்துவிடுகிறார். அது குறித்த அலசலும் அதன் விளைவும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன. ஓர் அணுகுமுறையில் நீங்கள் கோபத்திற்கும் பயத்திற்கும் பலியாகிறீர்கள். மற்றொரு அணுகுமுறையில் நீங்கள் அதை உங்களுக்கு அனுகூலமாக்கிக் கொள்கிறீர்கள்.
ஒரு விஷயம் மோசமானதாக, உங்களுடைய எதிர்பார்ப்பின்படி இல்லாதிருப்பதாக, ஒட்டுமொத்தத்தில் எதிர்மறையானதாக இருப்பதாக உங்களுடைய மனம் உங்களிடம் கூறினால், அதனோடு நீங்கள் ஒத்துப் போக வேண்டும் என்று கட்டாயமில்லை. அதேபோல, ஒரு விஷயம் பயனற்றதாக இருப்பதாக, படுமோசமாக உள்ளதாக, சரி செய்ய முடியாத அளவு உடைந்து போயுள்ளதாகப் பிறர் கூறுகின்ற ஒரே காரணத்தால் அது அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை. நமக்கு நாமே என்ன கதை கூறிக் கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். அல்லது, நாம் எந்தக் கதையும் சொல்லாமல் இருக்கத் தீர்மானிக்கிறோம்.
கண்ணோட்டத்தின் சக்தி அது. அனைத்துச் சூழல்களுக்கும் அது பொருந்தும். எக்காரணத்தை முன்னிட்டும் உங்களால் அதைத் தடை செய்ய முடியாது. ஆனால் அதை உங்களால் கைவிட முடியும்.
அது உங்களுடைய தீர்மானம்!


