வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப் பிரித்து வேறுபடுத்துவதுதான்: என்னால் கட்டுப்படுத்த முடியாத புற விஷயங்கள்; ஆனால் அவை குறித்து நான் மேற்கொள்கின்ற தேர்ந்தெடுப்புகள்மீது எனக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. நல்லதும் கெட்டதும் என்னுடைய தேர்ந்தெடுப்புகளில்தான் இருக்கிறது – எபிக்டெட்டஸ்
மிகப் பிரபலமான பேஸ்பால் விளையாட்டு வீரர் டாமி ஜான் இருபத்தாறு ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர் ஆட்டத்திற்குள் நுழைந்தபோது கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தார். ஜான் அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தார். அவ்வளவு நீண்டகாலம் அவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

அது ஓர் அசாதாரணமான மனிதச் சாதனை. அவர் அதில் மிகவும் சிறந்து விளங்கியதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஒரு கேள்வியைப் பல்வேறு வடிவங்களில் தன்னிடமும் பிறரிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்: “எனக்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? நான் செய்யக்கூடியது ஏதேனும் இருக்கிறதா?”
அக்கேள்விகளுக்கு அவர் எப்போதும் ‘இருக்கிறது’ என்ற பதிலையே எதிர்பார்த்தார். அதற்கான வாய்ப்பு மிகச் சிறியதாக இருந்தால்கூட அவா் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அவர் தயாராக இருந்தார். அதற்குத் தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் வழங்க அவர் தயாராக இருந்தாா். அவருடைய முயற்சி ஒரு விளையாட்டின் போக்கை மாற்றும் என்றால், அதற்காக அவர் தன்னுடைய உயிரைக் கொடுக்கக்கூடத் தயாராக இருந்தார்.
உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு சம்பவம் 1974ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது அவர் தன்னுடைய கையைக் காயப்படுத்திக் கொண்டார். அவர் எந்தக் கையால் பந்து வீசுவாரோ அந்தக் கையின் முழங்கையின் தசைநார் பெரும் சேதமடைந்தது. அக்காலகட்டத்தில் பேஸ்பால் விளையாட்டு வீரர் ஒருவருக்கு அப்படியொரு காயம் ஏற்பட்டால், அத்துடன் அவருடைய சகாப்தம் முடிந்துவிடும்.
ஆனால் ஜான் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர் வழக்கமாகக் கேட்கின்ற ‘அது குறித்து என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்ற கேள்வியை அவர் கேட்டார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு ஒரு வழி இருந்தது. மருத்துவர்கள் அவருக்குப் பரீட்சார்த்தமான அறுவை சிகிச்சை ஒன்றைப் பரிந்துரைத்தனர். அச்சிகிச்சையின்படி, அவருடைய மற்றொரு கையிலிருக்கின்ற தசைநார் வெட்டி எடுக்கப்பட்டு, காயப்பட்டுள்ள கையில் வைத்துத் தைக்கப்படும். அச்சிகிச்சை வெற்றி பெற்றால்கூட, அதற்குப் பின்னர் பேஸ்பால் விளையாட்டில் மீண்டும் இறங்குவதற்குத் தனக்கு வாய்ப்பு இருந்ததா என்று ஜான் அம்மருத்துவர்களிடம் கேட்டார். நூற்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருந்ததாக அவர்கள் பதிலளித்தனர். “அறுவை சிகிச்சை இல்லையெனில் எத்தனை சதவீத வாய்ப்பு இருந்தது?” என்று அவர் கேட்டதற்கு, “ஒரு சதவீத வாய்ப்புக்கூட இல்லை,” என்பது அவர்களுடைய பதிலாக இருந்தது.
அத்துடன் அவர் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், நூற்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பயிற்சி செய்வது என்பது பெருமளவுக்கு அவருடைய கைகளில் இருந்தது. அதனால் அவர் அந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டார். அதற்குப் பிறகு அவர் பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி மேலும் 164 விளையாட்டுகளில் வெற்றி பெற்றார். இப்போது அது பரவலாக ‘டாமி ஜான் அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜானுக்கு மற்றொரு சோதனை வந்தது. ஆனால் இம்முறை அது விளையாட்டின் வடிவத்தில் வரவில்லை. மாறாக, அவருடைய இளம் மகனுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் வடிவில் அது வந்தது. அவருடைய மகன் மூன்றாவது மாடிச் சன்னலிலிருந்து விழுந்துவிட்டான். அவன் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் கடினமான அச்சூழலிலும் ஜான் மனம் தளராமல், தன் குடும்பத்தினரிடம், தன் மகன் குணமாவதற்குப் பத்தாண்டுகள் ஆனாலும்கூடத் தான் தன்னுடைய முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று சபதம் செய்தார்.
அவருடைய மகன் முற்றிலுமாக குணமானான்.
1988ல் ஜானின் பேஸ்பால் விளையாட்டு ஒரு முடிவுக் கட்டத்தை நெருங்கியிருந்ததுபோலத் தோன்றியது. அந்த ஆண்டு அவருக்கு நாற்பத்தைந்து வயது ஆகியிருந்ததால், அவர் ஆடிக் கொண்டிருந்த அணி, அடுத்த ஆண்டு அவரைத் தங்களுடைய அணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்று அவரிடம் கூறியது. ஆனால் ஜான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மறு ஆண்டில் ஆட்டக்காரர்களுக்கான தேர்வு நடைபெறும்போது தான் வந்தால், தன்னை ஒரு புதிய ஆட்டக்காரனாகக் கருதி அவர்கள் தன்னை நியாயமாகச் சோதிப்பார்களா என்று அவர் தன்னுடைய பயிற்றுவிப்பாளர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
அதனால், மறு ஆண்டு, பயிற்சிக்கு அவர் முதல் ஆளாக வந்து நின்றார். அவர் பல மணி நேரம் பயிற்சி செய்தார். அதன் விளைவாக, அணிக்குள் அவர் மீண்டும் நுழைந்தார். பேஸ்பால் விளையாட்டின் வரலாற்றில் விளையாடிய மிகவும் வயதான வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. அந்த ஆண்டு அவருடைய ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.
டாமி ஜானுக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர் தன்னுடைய நூறு சதவீத முயற்சியை அதில் போட்டார். சந்தேகத்திற்கு இடமானவற்றுக்கும் சாத்தியமில்லாதவற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பாகுபடுத்திப் பார்ப்பதுதான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரர் என்ற முறையில் தன்னுடைய வேலை என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அவை இரண்டுக்கும் இடையே ஒரு நூலிழை இடைவெளிதான் இருந்தது என்பதை அவர் கண்டுகொண்டதால்தான் அவர் அவ்வளவு பெரிய வீரராக உயர்ந்தார்.
அவர் பெற்றிருந்த அதே ஆற்றலைப் பெறுவதற்காகத்தான், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புவோர் ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொள்கின்றனர். அந்தப் பிரார்த்தனைக்கு ‘அமைதிப் பிரார்த்தனை’ என்று பெயர். அதில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்:
கடவுளே, என்னால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை எனக்குக் கொடு.
என்னால் மாற்ற முடிகின்ற விஷயங்களை மாற்றுவதற்குத் தேவையான துணிச்சலை எனக்குக் கொடு.
இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் எனக்குக் கொடு.
இப்படித்தான் அவர்கள் தங்களுடைய விஷயங்களில் கவனத்தைக் குவிக்கின்றனர். வாழ்க்கையின் பிற பிரச்சனைகளையும் சேர்த்துப் போராட வேண்டியிருக்காவிட்டால், குடிப்பழக்கத்தை எதிர்த்துப் போராடுவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். உங்களுடைய பெற்றோர் கொடுமைக்காரர்கள் அல்லது வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவற்றை உங்களால் மாற்ற முடியாது. எனவே, உங்களால் மாற்ற முடிகின்ற விஷயங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்களால் மாற்ற முடிகின்ற விஷயங்கள்மீது உங்களால் கவனம் செலுத்த முடிந்தால் என்ன நடக்கும்? அங்குதான் உங்களால் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.
அமைதிப் பிரார்த்தனைக்குப் பின்னால் இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஸ்டோயிசிசத் தத்துவ வார்த்தைகள் ஒளிந்திருக்கின்றன. கேள்வி வடிவிலான அத்தத்துவம் இதுதான் :
எவை நம்மைப் பொறுத்தவை. எவை நம்மைப் பொறுத்தவை அல்ல?
எவை நம்மைப் பொறுத்தவை?
நம்முடைய உணர்ச்சிகள்.
நம்முடைய அபிப்பிராயங்கள்.
நம்முடைய படைப்பாற்றல்.
நம்முடைய மனப்போக்கு.
நம்முடைய கண்ணோட்டம்.
நம்முடைய விருப்பங்கள்.
நம்முடைய தீர்மானங்கள்.
நம்முடைய மன உறுதி.
வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இவை நம்முடைய விளையாட்டு மைதானமாகும்.
எவை நம்மைப் பொறுத்தவை அல்ல?
தட்பவெப்ப நிலை.
பொருளாதாரம்.
சூழ்நிலைகள்.
மற்றவர்களின் உணர்ச்சிகள்.
மற்றவர்களின் அபிப்பிராயங்கள்.
நடப்பு வழக்குகள்.
பேரழிவுகள்.
வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், இவற்றை விளையாட்டு விதிகள் மற்றும் சூழல்கள் என்று அழைக்கலாம். சிறந்த விளையாட்டு வீரர்கள், இருக்கின்ற சூழலைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் அதற்கு எதிராகச் செல்வதற்குத் தங்களுடைய நேரத்தை செலவழிப்பதில்லை. ஏனெனில், அது அா்த்தமற்றது.
விவாதிப்பது, குறை கூறுவது விலகிவிடுவது போன்றவை நமக்கு முன்னால் இருக்கின்ற தேர்ந்தெடுப்புகள், விளையாட்டில் வெற்றி பெற இத்தகைய தேர்ந்தெடுப்புகள் நமக்கு உதவாது.
கண்ணோட்டம் என்று வரும்போது, நாம் பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்: நம்முடைய சக்திக்கு உட்பட்டு இருக்கும் விஷயங்கள், நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுதல். சாதனையாளர்களுக்கும் போதைக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு அதுதான்.
நாம் மாற்ற வேண்டியிருக்காத விஷயங்களை நம்மால் மாற்ற முடியும் என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்ற எண்ணங்கள்தாம் நாம் எதிர்கொள்கின்ற எண்ணங்களிலேயே மிகவும் ஆபத்தானவை. உங்களுடைய நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று வேறு யாரோ ஒருவர் தீர்மானிக்கிறார். அது குறித்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உங்களுடைய வேண்டுகோளின் தொனியை மாற்றியமைக்கின்ற தீர்மானம்? அது உங்களைப் பொறுத்தது. உங்களுடைய யோசனையை வேறு யாரோ திருடிவிட்டார்கள் அல்லது அதை உங்களுக்கு முன்பாகச் செயல்படுத்திவிட்டார்கள் என்றால்? அது குறித்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதை மேம்படுத்தி, சந்தைக்குள் நுழைவது என்பது? அது உங்களைப் பொறுத்தது.
உங்கள் சக்திக்கு உட்பட்டதில் கவனம் செலுத்துவது உங்களுடைய சக்தியைப் பல மடங்கு பெருக்கும். ஆனால் நம்மால் தாக்கம் விளைவிக்க முடியாத விஷயங்கள் மீது நாம் செலவிடுகின்ற ஆற்றல் விழலுக்கு இறைத்த நீர்தான். நமக்கு நாமே தோண்டிக் கொள்கின்ற சவக்குழி அது.
ஒரு முட்டுக்கட்டையை அடையாளம் காண்பது சவாலானது. ஆனால் முடிந்தவரை அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பது ஒரு தேர்ந்தெடுப்பு. அது நம்மைப் பொறுத்தது.


