”ஒரு நல்ல மனிதன் நிகழ்வுகளுக்குத் தன்னுடைய சொந்த வண்ணத்தைப் பூசுகிறான். பிறகு நடப்பவை அனைத்தையும் அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறான்” – செனகா
நவீனப் போர்களில் மிகவும் பயங்கரமான போர்முறையாகக் கருதப்படுவது ஜெர்மானிய ‘மின்னலடித் தாக்குதல்’ ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது, அதற்கு முந்தைய போர்களில் இரு வேறு நாடுகளின் போர்வீரர்கள் பதுங்குக் குழிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு சண்டையை நீண்ட நாட்கள் இழுத்தடித்தது போன்ற ஒரு போர்முறையைப் பின்பற்ற ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. அதனால், மின்னல் வேகத்தில் நகரக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெரும் படையைக் கொண்டு, எதிரிகள் தயாராக இல்லாதபோது அவர்களைத் தாக்குகின்ற போர்முறையின்மீது அவர்கள் கவனம் செலுத்தினர்.
ஓர் ஜெர்மானிய ‘பான்சர்’ பீரங்கிகள், ஓா் ஈட்டிமுனையைப்போல, போலந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குள் வேகமாக ஊடுருவின. அதன் விளைவாக, குறைவான எதிர்ப்புகளுடன் அவர்கள் அந்த நாடுகளை வென்றனர். பெரும்பாலான இடங்களில், தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த, தோற்கடிக்கப்பட முடியாத ஒரு பேரரக்கனைப் போன்ற எதிரியுடன் மோதுவதற்கு பதிலாக, அந்நாடுகளின் படைகள் எந்த எதிர்ப்புமின்றி ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படையிடம் சரணடைந்தன. ஜெர்மானியர்களின் வெற்றி எதிரிகளின் திகைப்பை நம்பியே இருந்தது. ஒருவன் தன்னுடைய எதிரியின் படை வலிமையையும் அதன் வேகத்தையும் பார்த்துத் திகைத்து நிற்கும்போது அவனைத் தாக்கி வீழ்த்துவது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய உத்தியாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியை எதிர்த்த நேச நாடுகள், மின்னலடித் தாக்குதலை இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்த்தன. அவர்களால் எதிரியின் பெரும் சக்தியையும் தங்களுடைய பலவீனத்தையும் மட்டுமே பாா்க்க முடிந்தது. வெற்றிகரமான நா்மன்டி தாக்குதலுக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து, நேசப் படைகள் மீண்டும் ஜெர்மனியின் பெரும் படையை எதிர்கொண்டன. ஜெர்மானியரை எப்படி வீழ்த்துவது என்று நேச நாடுகள் திகைத்தன. பெரும் விலை கொடுத்துத் தாம் பெற்றிருந்த வெற்றிக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று அவை அஞ்சின.
அதற்கான தீர்வை ஒரு மாபெரும் தலைவர் வழங்கினார். மால்ட்டா தீவில் நடைபெற்றக் கூட்டத்தில் அமெரிக்கத் தளபதியான டுவைட் ஐசன்ஹோவர் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். “தற்போதைய சூழலை நாம் ஒரு பேரழிவாகப் பார்க்காமல், நமக்குக் கிடைத்துள்ள ஓர் அருமையான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்,” என்று அவர் முழங்கினார்.
ஐசன்ஹோவர் போர்முனைக்குச் சென்றபோது, அவர்கள் அதுவரை காணத் தவறியிருந்த தீர்வை அவர் கண்டார். நாஜிக்களின் போர் உத்திக்கு உள்ளேயே அதனுடைய அழிவும் அடங்கியிருந்ததை அவர் கண்டார்.
அதாவது, அதுவரை அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த முட்டுக்கட்டையைப் பார்ப்பதை விடுத்து, அந்த முட்டுக்கட்டைக்குள் இருந்த வாய்ப்பை ஐசன்ஹோவர் கண்டார். அதை மனத்தில் வைத்து நேசப் படையினர் வகுத்த உத்தி அவர்களுடைய வெற்றிக்கு வழி வகுத்தது. அவர்கள் ஜெர்மானியப் படையை நேரடியாகத் தாக்காமல் பக்கவாட்டிலிருந்தும் பின்புறமிருந்தும் சுற்றி வளைத்துத் தாக்கி வெற்றி பெற்றனர்.
முட்டுக்கட்டைகளைக் கண்டு திக்குமுக்காடிப் போகாமல் இருப்பது அல்லது ஊக்கமிழக்காமல் இருப்பது என்பது வேறு, அவற்றுக்குள் ஒளிந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பார்ப்பது என்பது வேறு.
லாரா இங்கல்ஸ் வைல்டர் இதைக் கச்சிதமாக விவரித்துள்ளார்: “எல்லாவற்றிலும் நல்லவை ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.”
ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. அந்தப் பரிசைக் கண்டவுடன் நாம் நம்முடைய கண்களை மூடிக் கொள்கிறோம். ஐசன்ஹோவரின் நிலையில் நீங்கள் இருந்து இப்படி நடந்து கொண்டால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். இன்னும் எத்தனை இலட்சம் உயிர்கள் பலியிடப்பட்டிருக்கும்? அந்தப் போர் எப்படி முடிந்திருக்கும்?
நம்முடைய கண்ணோட்டங்கள்தாம் நம்முடைய பிரச்சனையே .விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவை நமக்குக் கூறுகின்றன. அவை அப்படி இல்லாமல் போகும்போது, சூழல் நமக்குச் சாதகமாக இல்லை என்றோ, மாற்று வழிகளைப் பின்பற்றுவது நேர விரயம் என்றோ நாம் இயல்பாக அனுமானித்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அனைத்துச் சந்தர்ப்பங்களும் நாம் செயலில் இறங்குவதற்கான வாய்ப்புகளே.
நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஓர் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்ளலாம்: நமக்கு வாய்த்திருப்பவர் ஒரு மோசமான மேலதிகாரி. நாம் அங்கு நரகத்தை மட்டுமே பார்க்கிறோம். அதனால் நாம் மனமுடைந்து போகிறோம்.
நாம் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பார்த்தால் எப்படியிருக்கும்?
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற ஒரு நிலையை நீங்கள் அடைகின்றபோது, அங்கு உண்மையில் நீங்கள் வளர்வதற்கும் மேம்படுவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. அதே வேலையில் நீங்கள் புதிய திட்டங்களைத் தேடலாம், புதிய உத்திகளைப் பயன்படுத்தலாம். உங்களுடைய மேலதிகாரியை அவதானித்து அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். உங்களுடைய தற்போதைய வேலையைவிட மேம்பட்ட ஒரு வேலையைத் தேடுவதற்கு உங்களுடைய மேலதிகாரியின் நடத்தையை நீங்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் துணிச்சலாக இந்த அணுகுமுறையைக் கடைபிடித்துச் செயல்பட்டால், ஒருவேளை, உங்களால் உங்களுடைய மேலதிகாரியிடமிருந்து புதிய சலுகைகளைக்கூடப் பெற முடியக்கூடும், அதன் மூலம் உங்களுடைய வேலையை நீங்கள் இரசிக்கத் தொடங்கவும்கூடும். அல்லது என்றேனும் ஒரு நாள் உங்களுடைய மேலதிகாரி ஏதோ ஒரு பெரிய தவறைச் செய்யக்கூடும். அதைக் கொண்டு நீங்கள் அவரை மடக்கலாம். இவை அனைத்தும் நீங்கள் உங்களுடைய மேலதிகாரியைப் பற்றி முனகிக் கொண்டிருப்பதைவிடவும் அவதூறு பேசுவதைவிடவும் மேலானவையே.
உங்களுடைய நீண்டகாலப் போட்டியாளரின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்குக் கீழ்க்கண்ட விஷயங்களையும் செய்யக்கூடும் என்பதை நினைவில் வைத்திடுங்கள்:
- உங்களை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்திருக்கலாம்.
- நீங்கள் உங்களுடைய தரத்தை உயர்த்த உதவலாம்.
- அவருடைய செயல்பாடுகள் தவறென்று நிரூபிக்க உங்களை ஊக்குவிக்கலாம்.
- உங்களுடைய மன உறுதியை அதிகரிக்கலாம்.
- உண்மையான நண்பர்களின் அருமையைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவலாம்.
- நீங்கள் யாராக ஆகிவிடக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக அவர் விளங்கலாம்.
அதேபோல, உங்களுடைய கணினியில் தோன்றிய ஒரு சிறு பிரச்சனையின் காரணமாக உங்களுடைய அனைத்துக் கோப்புகளும் அழிந்து போன சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவை அனைத்தையும் நீங்கள் மீண்டும் ஒரு முறை உருவாக்குவதால், அதில் நீங்கள் முன்னைவிட இரண்டு மடங்கு அதிகத் திறமை பெற்று விளங்குவீர்கள்.
உங்களுடைய தொழிலில் நீங்கள் மேற்கொண்ட ஒரு தீர்மானம் தவறாகப் போனது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் ஓர் அனுமானத்தைக் கொண்டிருந்தீர்கள். அது தவறாகப் போய்விட்டது. அது ஏன் உங்களை இந்த அளவு மனமுடையச் செய்ய வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஓர் அறிவியலறிஞர் எதிர்கொண்டால், அது அவருக்கு உதவும். அடுத்த முறை நீங்கள் ஒரே ஒரு விஷயத்தின்மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இப்போது இதன் மூலம் நீங்கள் இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்களுடைய உள்ளுணர்வு தவறாகப் போயிருந்தது என்பது முதலாவது விஷயம். ஆபத்தை விலைக்கு வாங்க நீங்கள் எந்த அளவு தயாராக இருக்கிறீர்கள் என்பது இரண்டாவது விஷயம்.
ஆசீர்வாதங்களும் சுமைகளும் எதிரெதிர் அணிகளில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அது நீங்கள் நினைப்பதைவிட அதிகச் சிக்கலானது. எப்போதும் நச்சரித்துக் கொண்டிருந்த ஒரு மனைவி சாக்ரடீஸுக்கு வாய்த்திருந்தார். அவரைத் திருமணம் செய்து கொண்டது தன்னுடைய தத்துவ வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதாக சாக்ரடீஸ் ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.
சமீபத்தில், விளையாட்டு வீரர்கள் திறமையாகச் செயல்பட உதவுகின்ற உளவியலாளர்கள், தீவிரமாகக் காயமடைந்த அல்லது பெரும் பின்னடைவைச் சந்தித்தப் பிரபல விளையாட்டு வீரர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். முதலில் அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உணர்ந்ததாகவும், உணர்ச்சிரீதியாகச் சஞ்சலம் அடைந்திருந்ததாகவும், தங்களுடைய விளையாட்டுத் திறமை குறித்து ஐயம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் படிப்படியாகத் தங்களுக்குள் தலைதூக்கியதாகவும், புதிய கண்ணோட்டங்கள் தங்களிடம் துளிர்விட்டதாகவும், தங்களுடைய சொந்த பலம் குறித்தப் புரிதல் தங்களுக்கு ஏற்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதாவது, காயத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்டிருந்த பயம், பின்னர் புதிய அணுகுமுறைகளை அவர்களிடம் வளர்த்திருந்தது.
“எது என்னைக் கொல்வதில்லையோ அது என்னை பலப்படுத்துகிறது,” என்ற நீட்சேயின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
முட்டுக்கட்டைக்கு எதிரான போராட்டம் அதில் ஈடுபடுபவரை ஒரு புதிய தளத்தில் இயங்க வைக்கிறது. போராட்டம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். முட்டுக்கட்டை என்பது ஒரு சாதகமே அன்றி, பாதகமல்ல. இதை நம்மைப் பார்க்கவிடாமல் தடுக்கின்ற எந்தக் கண்ணோட்டமும் நமக்கு எதிரானதுதான்.
நாம் இதுவரை பார்த்துள்ள உத்திகளில் இதைத்தான் நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவீர்கள். இந்த அணுகுமுறை மட்டும் இருந்தால் போதும், எதை வேண்டுமானாலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடலாம்.
மக்களைப் பற்றிய இந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
- மக்கள் நம்மிடம் முரட்டுத்தனமாக அல்லது மரியாதைக் குறைவாக நடந்து கொள்கின்றபோது, அவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். அதனால் நாம் அதை நமக்குச் சாதகமான ஒரு நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மக்கள் தீய செயல்களில் ஈடுபடும்போது, நாம் அவர்களைத் தண்டித்தால் நாம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை.
- மக்கள் நம்முடைய திறமையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றபோது அவர்கள் நம்மிடமிருந்து குறைவாக எதிர்பார்ப்பர். அப்போது அந்த எதிர்பார்ப்பைத் தாண்டி மிகச் சிறப்பாகச் செயல்படுவது நமக்கு எளிதாக இருக்கும்.
- மக்கள் சோம்பேறிகளாக இருக்கும்போது, நாம் எதைச் சாதித்தாலும் அது மெச்சத்தக்கதாகவே தெரியும்.
ஆகவே, முதல் பார்வைக்குப் பாதகமான சூழ்நிலையாகத் தெரியும் விஷயத்தின்மீது கவனத்தைக் குவியுங்கள். ஏனெனில், அதற்கு உள்ளேதான் மதிப்பான விஷயங்கள் ஒளிந்திருக்கும்.
இங்கு நாம் ஒரு கண்ணாடிக் கோப்பை பாதி நிறைந்திருக்கிறதா அல்லது பாதி காலியாக இருக்கிறதா என்பதைப் போன்ற பயனற்றக் கூற்றுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு விஷயத்தை ஒட்டுமொத்தமாகத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதைப் பற்றியது.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே


