அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பணிகள் நிறைவடைந்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல்களை வெளியிட்ட நிலையில், அதிக மக்கள் தொகை, சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 12.55 கோடி வாக்காளர்களின் பல்வேறு காரணங்களால் 2.88 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, உயிரிழந்ததன் காரணமாக 46.23 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் வழங்கியுள்ள முகவரியில் வசிக்காத சுமார் 2.17 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரட்டை வாக்குரிமை பெற்றிருந்த 25.47 லட்சம் வாக்காளர்கள் முந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இதுவரை எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள 13 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 2.88 கோடி வாக்காளர்களும், தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக 56,384 வாக்காளர்களைக் கொண்ட லட்சத்தீவில் 1,384 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



