அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணையாத நிலையில், அவரிடம் மற்ற கட்சிகள் செல்லாமல் தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எந்த கூட்டணிக்கு செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ், தன்னை அதிமுகவில் மீண்டும் இணைத்து ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அமித் ஷாவினுடைய உதவியை அவர் நாடிய போதும், எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதால் அவர்களும் தலையிட மறுத்துவிட்டனர். இதனால் தனிக்கட்சி தொடங்கி என்.டி.ஏ. கூட்டணியில் சேர பாஜக அறிவுறுத்திய நிலையில், அதில் அவருக்கு உடன்பாடு இல்லை. தனியாக செல்வது என்றால் தவெகவுக்கு போக ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு விருப்பமில்லை. திமுகவுக்கு செல்ல வாய்ப்பு இருக்கும் சூழலில், பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே, எடப்பாடியை கடுமையாக எதிர்த்த தினகரன் என்டிஏவில் இணைந்துள்ளார். தற்போது ஓபிஎஸ் திமுக பக்கம் சென்றால்? முக்குலத்தோர் வாக்குகளும் திமுகவுக்கு செல்கிற வாய்ப்புள்ளது. அதனால் ஓபிஎஸ் என்டிஏவில் இணைய வேண்டும். அல்லது ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பாஜக சொல்லி விட்டது.

இதற்கிடையே, ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள் எல்லாம் திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றுவிட்டனர். இதனால் ஓபிஎஸ் தனிமரமாக ஒதுக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய கவலை என்பது அவருடைய அரசியலை விட, அவருடைய 2 மகன்களின் அரசியல் முக்கியமாக உள்ளது. ஒருவர் பாஜக கூட்டணிக்கும், மற்றொருவர் விஜய் கூட்டணிக்கும் செல்ல வேண்டும் சொல்கிறார்கள். அதிலும் குழப்பம் உள்ளது. இதனை பயன்படுத்தி பாஜக என்டிஏவுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறது. அப்படி அவர் போனால், எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்-ஐ வெற்றி பெற விடுமா? அவர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஓபிஎஸ், என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரன் என்டிஏவுக்கு செல்கிற விஷயத்தை ஓபிஎஸ் இடமோ, தனது கட்சியினரிடமோ கூட சொல்லவில்லை. தினகரனுக்கு எதாவது அழுத்தம் வந்திருக்கும் அவர் மாறி இருக்கலாம். ஆனால் அவர் ஓபிஎஸ் இடம் சொல்லிவிட்டு சென்று இருக்கலாம். அதனால் தற்போது ஓபிஎஸ் தனிமரமாகிவிட்டார்.

டெல்லியில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரும்படி விஜய்க்கு அழுத்தம் தரப்பட்டு உள்ளது. ஆனால் அவர் வர முடியாது என்று சொல்லிவிட்டார். வழக்கமாகவே பாஜகவை விமர்சிக்காத விஜய், அதிமுகவை மட்டும் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். அதற்கு அதிமுக தரப்பில் எதிர்வினை ஆற்றியது தான் ஆச்சரியமாக உள்ளது. விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தான் அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது. பாஜக எப்படியாவது விஜயை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். இதன் விளைவுகளை விஜய் சந்திப்பார் என்றும் சொல்கிறார்கள். ஜனநாயகன் படம் வெளியாகாமல் தாமதம் ஆவதும், விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டேன் என்று சொன்னதையும் விஜய் ரசிகர்கள் தொடர்புப்படுத்தி பேச தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட நான்கு முனை போட்டி உறுதியாகிவிட்டது. அதிமுக – என்டிஏ கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் தான் இடம்பெற்றுள்ளன. புதிதாக டிடிவி தினகரன் வந்துள்ளார். அதில் தேமுதிக இணைந்தால் கூட்டணி மேலும் வலிமைபெறும். அதேவேளையில் தினகரனுடைய வாக்கு வங்கி, முழுமையாக அவர் பின்னால் செல்லுமா? என்பது கேள்விக்குறிதான். அதனால் தேமுதிக வரும்போது என்டிஏ கூட்டணிக்கு பலம் சேர்க்கும். பாஜகவை பொருத்தமட்டில் விஜயை எவ்வளவு தூரம் தனிமைப்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிமுகவுக்கு செல்கிற வாக்குகளை விஜய் எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று நினைக்கிறார்கள். தினகரன் போகாத நிலையில், ஓபிஎஸ்-ம் போகக்கூடாது என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். அவருக்கும் விஜயிடம் போகும் எண்ணம் கிடையாது. அதிமுக – தவெக இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடராது. காரணம் விஜய் சைலன்ட் மோடுக்கு போய்விடுவார். இனி அடுத்த கூட்டத்தில் பேசியதை வைத்து தான் பேசுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


