தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா? – இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தேதி திங்கள்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் மே 7 – ஜூன் 15 வரை பல்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. சட்டமன்றத் தேர்தலை அதற்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தேர்தல் அட்டவணை நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்பீச்மன்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மக்களவையை சேர்ந்த 130 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 63 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் என மொத்தம் 193 எம்.பி-க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனித்தனியே இந்த நோட்டீசை வழங்கியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கூடிய நோட்டீஸ் நிலுவையில் உள்ள போது தலைமை தேர்தல் ஆணையரால் தேர்தலை அறிவிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சகம் சட்டரீதியான ஆலோசனைகளை பெற்று வருவதாகவும், ஒருவேளை பதவி நீக்க தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் தேர்தல் அறிவிப்பதில் சிக்கல் சட்டப்படி இருக்காது என முடிவு கிடைக்கப்பெற்றால் திட்டமிட்டபடி தேர்தலை அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் ஒருவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள போது அந்நபரால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணியை மேற்கொள்ள முடியாது என சட்ட வல்லுநர்கள் பதிலளித்தால் தேர்தல் தேதி அறிவிப்பை சில தினங்களுக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை அன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் தீர்மானம் தோல்வியடைந்தால் வரும் வியாழக்கிழமை அன்று தேர்தல் அட்டவணையை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
