2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை மாவட்டம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. நேருக்கு நேர் மோதும் பிரதான கட்சிகள். அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவை திமுகவின் புதிய அரசியல் வியூகங்களால் மெல்ல சாய்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.


தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம், இந்த தேர்தலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், கோவையின் 10 தொகுதிகளில் 7 இடங்களில் இவ்விரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் போட்டியே. தனது சொந்த மாவட்டமான கரூரை விடுத்து, கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரும் விவதாமாக மாறியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், திமுக ஒரு இடத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் போனது. ஆனால், இந்த முறை தோல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்த முறை திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பகுதியாக பல புதிய முகங்கள் மற்றும் வலுவான வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிடுகிறார். இந்த மோதல் கோவை தெற்கு தொகுதியை மாநில அளவில் கவனிக்க வேண்டிய தொகுதியாக மாற்றியுள்ளது.
மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சிகளும் தங்களது பங்கினை வகித்து வருகின்றன. கொமதேக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு புறம், அதிமுக கூட்டணியும் தனது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் களம் இறங்கியுள்ளது. கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தொகுதிகளில் அதிமுக நேரடி போட்டியை வழங்குகிறது. அதேசமயம், நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக போன்ற கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால், பல இடங்களில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஆனால், மொத்த அரசியல் சூழலைப் பொருத்தவரை, கோவை மாவட்டத்தில் இந்த முறை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக பேசப்படுகிறது. இதுவரை அதிமுக வலுவான ஆதிக்கம் செலுத்திய பகுதியாக கருதப்பட்ட கோவை, தற்போது திமுகவின் புதிய அரசியல் வியூகங்களால் மெல்ல சாய்ந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை மக்களிடம் நினைவுபடுத்தும் வகையில் திமுக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. தொழில்துறை மையமாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் உள்ள டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், வெட்கிரைண்டர், பவுண்டரி துறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் முனைவோரும், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், சிறுபான்மையின மக்கள் மற்றும் குடும்ப தலைவிகள் என பல்வேறு சமூகக் குழுக்களையும் ஈர்க்கும் வகையில் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
‘சூப்பர் ஸ்டார்’ என விளம்பரப்படுத்தப்படும் திமுக தேர்தல் அறிக்கை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருப்பதால், அது வீடு தோறும் சென்று வாக்காளர்களை சென்றடைந்து வருகிறது. இதன் தாக்கம் தரையில் தெளிவாகக் காணப்படுவதாகவும், அது திமுகவுக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் – பெ.சண்முகம் பேட்டி
