மக்களவை இடங்களை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை, “கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்” என்று தி.மு.க எம்.பி கனிமொழி, 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை விமர்சித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக கருப்பு நிற சேலை அணிந்து உரையாற்றிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போதே, ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’-ஐ வியாழக்கிழமையன்று அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவையும் கேள்வி எழுப்பினார்.
கனிமொழி பேசுகையில், “நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக மட்டும் இங்கே நிற்கவில்லை; தேர்தல் நேரத்தில் யாருடைய வாக்குகளுக்கு மதிப்பு குறைவு என்றும், இந்த நாடாளுமன்றத்தில் யாருடைய குரல் குறைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டதோ, அந்த எட்டு கோடி மக்களின் குரலாகவும் நிற்கிறேன். இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. நாம் இங்கே மசோதாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது, நேற்றே அதை அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த அவையின் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதை இதுதானா? இந்த மூன்று மசோதாக்களும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் இவை கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும்,” என்றார்.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதையும், அது ஏற்கனவே மக்கள் தொகை மாற்றத்தை (Demographic transition) வெற்றிகரமாக முடித்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், “தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி. பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று, வளர்ச்சிக்கான முன்மாதிரிகளாகத் திகழும் ஐந்து மாநிலங்கள் இவை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் அழைப்பை நாங்கள் ஏற்றோம். அதற்குக் கீழ்ப்படிந்தோம், எங்கள் பிறப்பு விகிதம் குறைந்தது. 2001-ல் தென் மாநிலங்களின் குரலுக்குச் செவிசாய்த்த ஒரு அரசாங்கம் இருந்தது (அதற்குரிய பெருமையை பாஜாகவிற்குத் தந்தாக வேண்டும்). தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் என்பதை அன்றைய நாடாளுமன்றம் உணர்ந்ததால், தொகுதி மறுவரையறைக்கு மேலும் 24 ஆண்டுகள் தடை விதித்தது.
இப்போது ஏன் இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்த வேண்டும்? மக்கள் தொகை மாறிவிட்டது என்று மசோதாவின் நோக்கத்தில் கூறிவிட்டு, மறுவரையறை செய்ய 15 ஆண்டுகள் பழமையான 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்களே உங்களுக்குள் முரண்படுகிறீர்கள். இடங்கள் அதிகரித்தால் பெரும்பாலான எம்.பி-க்களுக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பே கிடைக்காது. இன்று தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.6 ஆகும். இது பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை விடக் குறைவு. நாங்கள் மக்கள் தொகை மாற்றத்தை நிறைவு செய்துவிட்டோம். 1971-க்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 120 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை வெறும் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது,” என்று தெரிவித்தார்.
