கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேராப்பட்டு மற்றும் கல்வராயன் மலைப்பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் முக்கியச் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பள்ளி மாணவிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின் நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
