2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆர். ரமேஷின் தேர்தல் பிரச்சார அலுவலகம், மே 1ஆம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் அலுவலகம் முழுமையாக எரிந்து சாம்பலானதுடன், தேர்தல் பிரச்சாரப் பொருட்கள், வாக்காளர் பட்டியல்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் சேதமடைந்தன.
மேலும், அலுவலகம் வெளியே வைக்கப்பட்டிருந்த விஜய் மற்றும் வேட்பாளர் ஆர். ரமேஷ் ஆகியோரின் டிஜிட்டல் பேனர்களும் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தவெக விவசாய அணி மாவட்டச் செயலாளர் வீர சிவா, பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதுடன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், வேட்பாளர் ரமேஷ், வாக்கு எண்ணிக்கை நாளில் தவெக தொண்டர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டு, கூடுதல் பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் எதிர்க்கட்சியினர் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பொது மக்கள்!
