இஸ்ரேலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 
சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன். குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற அவர், இஸ்ரேலில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணியாற்றிய நிறுவனம் உரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்த சிவனேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள், சிவனேசனின் மனைவி தவமணிக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்த தவமணி, தனது கணவரின் உடலை விரைவாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலி!!
