தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், புதியதாக அமைந்துள்ள தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடரலாம் என்ற அவரது பேச்சுக்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, மாநில உரிமைகள் மற்றும் பல்கலைக்கழக சுயாட்சி தொடர்பான திமுக அரசின் முந்தைய நிலைப்பாடுகள் மீண்டும் நினைவுகூரப்படுகின்றன. முன்னதாக, பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறி, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில், மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என வாதிடப்பட்டு, பல்கலைக்கழக வேந்தர் நியமனம் மாநில அரசின் அதிகாரம் என தீர்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு எதிராக க.பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி” என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஆளுநரே வேந்தராக தொடரலாம் என்ற நிலைப்பாடு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக வேந்தரை முதலமைச்சராக நியமிக்கும் சட்டம் திமுக ஆட்சியில் பல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆனால் அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் கிடைக்காததால் நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஒருகாலத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியே தற்போது மாறுபட்ட நிலைப்பாடு எடுத்திருப்பது, “பதவி சுகத்துக்காக கொள்கை மாற்றமா?” என்ற கேள்வியை எழுப்புவதாகவும் பொன்முடி விமர்சித்துள்ளார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சு மாநில உரிமைகளுக்கு எதிரானது என விசிக தரப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் தமிழக அரசியலில் புதிய மோதல் புள்ளியாக உருவெடுத்துள்ளது.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
