Homeசெய்திகள்மாவட்டம்வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் - இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

-

- Advertisement -

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் - இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கிரிஜா (வயது 25), நூற்பாலை தொழிலாளி.
​நேற்று மாலை கிரிஜா தனது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் எரியோடு சென்றுவிட்டு, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளார். வழியில் ஈ.சித்தூர் தண்ணீர் பந்தம்பட்டி பிரிவில் தனது உறவினர் சிறுவனான ஜிவி ரோஷன் (வயது 12) என்பவரையும் ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

​வாகனம் மொங்குபித்தம்பட்டி மதுரைவீரன் கோவில் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலத்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரிஜாவிற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 12 வயது சிறுவனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 3 வயது குழந்தை லேசான சிராய்ப்புகளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ​உடனடியாகப் பலத்த காயமடைந்த கிரிஜாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி கிரிஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

we-r-hiring

​​விபத்து நடந்த இடத்தில் தனியார் பள்ளி வாகனம் ஒன்றும், டவேரா கார் ஒன்றும் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்த கிரிஜாவின் கணவர் முத்துராஜ், அந்த குறிப்பிட்ட வாகனங்களைக் குறிப்பிட்டு எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ​ஆனால், எரியோடு போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனங்களைக் கண்டறியாமல், விபத்து நடந்த இடத்தில் எந்த வாகனமும் இல்லை என்றும், “அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து” என்றும் வழக்கை திசை திருப்பிப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உரிய விசாரணை நடத்தும் முன்பே உடற்கூராய்வு செய்ய (பிரேத பரிசோதனை) தங்களைக் கட்டாயப்படுத்தி போலீசார் கையெழுத்து வாங்குவதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

​இதனால் ஆத்திரமடைந்த கிரிஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், “விபத்தை ஏற்படுத்திய உண்மையான வாகனங்களைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” எனக் கூறி, வேடசந்தூர் அரசு மருத்துவமனை எதிரே (வேடசந்தூர் – வடமதுரை சாலையில்) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
​இதனால் அந்தச் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முத்துராஜின் புகாரின் அடிப்படையில் விபத்து குறித்து உரிய முறையில் மறுவிசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய வாகனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். ​போலீசாரின் இந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் வேடசந்தூர் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

குமரியில் அணுக்கனிம சுரங்கம் – காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு அதிரடி அரசாணை!

MUST READ