தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.


பொறுப்பு ஆளுநரின் டெல்லி பயணம்
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான கேரளாவின் ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பும் (கூடுதல் பொறுப்பு) தற்காலிகமாக வழங்கப்பட்டது.
தற்போது பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றுவது மற்றும் காலியாக உள்ள இடங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி செல்கிறார். அங்கு அவர் மத்திய அரசின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, கூடுதல் பொறுப்பாகத் தமிழ்நாட்டைக் கவனித்து வரும் ஆளுநர் அர்லேகர், மாநிலத்தின் முழுநேர ஆளுநராகவே தொடர்ந்து நீடிக்கத் தனக்குள்ள விருப்பத்தை மத்திய தலைமைக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலுக்கு யாரை முழுநேர ஆளுநராக நியமித்தால் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து வருகிறது.
மீண்டும் ஆர்.என்.ரவி? கிளம்பும் புதிய யூகங்கள்!
இந்த ஆளுநர்கள் மாற்றப் பட்டியலில் மற்றொரு சுவாரசியமான தகவலும் உலா வருகிறது. தமிழகத்தின் முந்தைய ஆளுநராகச் செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவியை மீண்டும் தமிழ்நாட்டின் ஆளுநராகவே கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும் டெல்லி மேலிடத்தில் ஒருபுறம் ரகசியமாக நடந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே இந்த ஆளுநர்கள் இடமாற்ற அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், ஆளுநர் அர்லேகரின் இந்த டெல்லி பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தொழில் எளிமைப்படுத்தல் – மத்திய செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை!
