தமிழகத்தில் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்து அந்நாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வந்தது. தேர்தல் களத்தில் இதனை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. தவெக தனது தேர்தல் அறிக்கையில், இத்திட்டத்தை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்று பெயர் மாற்றி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் நிலவியது.
அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த விளக்கம்
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் பெண்களுக்கு வழங்கப்படும் என்று தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கிய விவரங்கள், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இந்த உயர்த்தப்பட்ட தொகை பெண்களுக்குக் கிடைக்கும்.
கடந்த ஆட்சியில் ஒரே பெயரில் 2 முதல் 3 முறை விண்ணப்பிக்கப்பட்ட குளறுபடிகளும், ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகளை வைத்துக் கொண்டு இரண்டு பெண்கள் பணம் வாங்கியதையும் அரசு கண்டுபிடித்துள்ளது. மேலும், வசதி படைத்த சிலரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நிதியைப் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. தகுதியற்றவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, கடந்த ஆட்சியில் விண்ணப்பித்தும் பணம் கிடைக்காத உண்மையாகவே வறுமையில் உள்ள தகுதியான பெண்களை கூடுதலாகச் சேர்க்கும் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
குளறுபடிகள் அனைத்தையும் சரிசெய்து, தகுதியான ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்தத் திட்டம் முறையாகச் சென்றடைய அரசு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் அதுவரை சற்று பொறுமை காக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, ரூ.2,500 வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்?? – உயர்நீதிமன்ற கிளை கேள்வி..!!
