முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைவதாகவும், விசாரணைச் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்வதைப் போன்றது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி வருமாறு:

முதலமைச்சரின் பயணத்தைக் கண்டு திமுகவிற்கு ஏன் பயம்?
”ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும், எந்தவொரு இடத்திற்கும் செல்வதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. ஆனால், முதலமைச்சர் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை. முதலமைச்சர் நேரில் சென்றால் அங்குள்ள மக்கள் தங்களுக்கு நடந்த துரோகங்களையும், உண்மைகளையும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சமே திமுகவின் இந்த அலறலுக்குக் காரணம்.
முதலமைச்சரின் பயணத்தைத் தடுப்பதற்காக எந்தவொரு அடிப்படை விவரமும் இல்லாமல், திமுகவின் சட்டக் குழு உச்ச நீதிமன்றம் வரை சென்று மனுத்தாக்கல் செய்து அனைவரின் நேரத்தையும் வீணடித்துள்ளது. ‘வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே திமுக தரப்புக்கு அறிவுறுத்தும் அளவுக்குத்தான் அவர்களின் மனுக்கள் இருந்துள்ளன. கடந்த காலங்களில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்தவர்கள்தான் தற்போது முதலமைச்சரின் பயணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

சம்மனுக்கு அஞ்சி ஓடி ஒளிபவர்கள் குற்றவாளிகளே!
அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சம்மன் அளிக்கப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
குற்றத்தில் ஈடுபாடு இருப்பதால் மட்டுமே அவர்கள் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிகிறார்கள். கடந்த காலங்களில் டெல்லியில் சிபிஐ சம்மன் அனுப்பியபோது நாங்கள் நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தோம். செந்தில் பாலாஜி தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நினைத்துக்கொள்ளக் கூடாது. காவல்துறை தனது கடமையைச் சட்டப்படி சரியாகச் செய்து வருகிறது.
மின்கட்டண உயர்வு இல்லை; 15,000 தற்காலிகப் பணியிடங்கள்:
தற்போது தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். பல மாநிலங்களை விடத் தமிழகத்தின் மின்சாரத் துறை அதிக கடனில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அத்துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மின்சாரத் துறையில் சுமார் 15,000 பேர் ஆறு மாத காலத்திற்குத் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்று, பின்னணிச் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தற்காலிகப் பணி நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றன. எந்தவொரு சிபாரிசுக் கடிதத்தின் அடிப்படையிலும் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை; தகுதியின் அடிப்படையில் மட்டுமே முழு வெளிப்படைத்தன்மையுடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
