‘எல்லைகளை வரையறுத்து உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளாா்.
வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சூறையாடக் கூடிய கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கைக்குத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் இரையாகிவிடக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் ரூ.72,000 கோடி பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகக் கூறி, அந்தத் தடையை நீக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரடாய்’ வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரம் என்ற இனிப்பு பூசி முன்வைக்கப்பட்டுள்ள, சுற்றுச்சூழலைச் சூறையாடக் கூடிய இந்த நச்சுக் கோரிக்கை மிகவும் ஆபத்தானது; கண்டிக்கத்தக்கது. உலகில் சில விஷயங்களைப் பொருளாதார அளவுகோல் கொண்டு அளவிட முடியாது. அதில் முதன்மையானது சுற்றுச்சூழல். ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக தற்போது வெறும் 1725 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. கடந்த 2003-ல் பா.ம.க மற்றும் பசுமைத் தாயகம் நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாகவே, இது கடந்த 2022-ஆம் ஆண்டு ‘இராம்சர்’ ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.
ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பின், அதன் எல்லைகளையும் தாக்கப்பகுதிகளையும் வரையறுத்துச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (CMDA) தெரிவிக்க வேண்டியது ஈரநிலங்கள் ஆணையத்தின் கடமையாகும். ஆனால், இந்தக் கடமையைத் தமிழக அரசும், ஈரநிலங்கள் ஆணையமும் செய்யவில்லை. மேலும், தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாதங்களுக்குள் வரையறை செய்ய வேண்டும் என கடந்த 11.12.2024 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத் திமுக அரசு அதனைச் செயல்படுத்தவில்லை. அதனால்தான், இப்பகுதியில் ரூ.2000 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்தது. தற்போது பசுமைத் தீர்ப்பாயம்தான் இந்தத் தடையை விதித்திருக்கிறது.
சென்னையின் அடையாளமாக இருந்த 250 ஏரிகள் அழிக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததன் விளைவைத்தான் 2005, 2015, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது சென்னை அனுபவித்தது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை உள்வாங்கும் திறன் இந்தச் சதுப்பு நிலத்திற்கு மட்டுமே உண்டு.
மேலும், இது யுரேஷியா கழுகு ஆந்தை, கரண்டி வாயன், நாமக்கோழி உள்ளிட்ட 115 வகையான லட்சக்கணக்கான வலசைப் பறவைகளுக்கும், 46 வகையான மீன்களுக்கும், அரிய வகை ஊர்வனவற்றிற்கும் புகலிடமாகத் திகழ்கிறது. வணிகத்திற்காக இவற்றை அழிக்கக் கூடாது.
எனவே, என்ன விலை கொடுத்தாவது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாத்தே தீர வேண்டும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழ்நாடு சதுப்புநிலங்கள் விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறுத்து அரசு அறிவிக்கை செய்ய வேண்டும். இதனைச் சென்னை இரண்டாவது பெருந்திட்டத்தில் (Master Plan) சேர்த்து, புதிய கட்டுமானங்களையும் ஆக்கிரமிப்புகளையும் தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் உடனடியாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும்.”இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
