மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி நள்ளிரவிலும் தடையின்றி அரங்கேறி வரும் பிரம்மாண்ட கனிம வளக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்துடன் நடக்கும் இந்த முறைகேட்டால், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாமல் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ட்ராக்டருக்கு அனுமதி… கனரக லாரிகளில் கடத்தல்!
அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அழகாபுரி, பண்ணைகுடி, அச்சம்பட்டி மற்றும் தேவசேரி ஆகிய கிராமங்களில் உள்ள பாசனக் கண்மாய்களில் இந்த விதிமீறல் தடையின்றி அரங்கேறி வருகிறது. விவசாயப் பயன்பாட்டிற்காக, விளைநிலங்களில் மண் கொட்டப் போவதாகக் கூறி அரசிடம் அனுமதி பெறப்படுகிறது.

அரசு விதிமுறைப்படி, கண்மாய்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ளுவதற்கு ட்ராக்டர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த விதியை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, 20-க்கும் மேற்பட்ட மாபெரும் கனரக லாரிகளைப் (Tippers) பயன்படுத்தி, இரவு பகலாக கண்மாய்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அள்ளப்படும் மண், வணிக ரீதியாக வெளிச்சந்தையில் பல ஆயிரங்களுக்கு விற்கப்பட்டு பெரும் லாபம் பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ ஆதரவாளர்களின் பிடியில் கண்மாய்கள்?
இந்த சட்டவிரோத மண் கடத்தலுக்குப் பின்னணியில், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் ஆதரவாளர்களே மூளையாகச் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இப்பகுதியில் ஆய்வு செய்ய வரும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் அவர்கள் மிரட்டி முடக்குவதாகவும் விவசாயிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் ஆவேசத்துடன் கூறுகையில்:
”விவசாயிகளின் நலனுக்காகவும், பாசனக் கண்மாய்களைத் தூர்வாரவும் கொண்டு வரப்பட்ட திட்டத்தை, அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திச் சூறையாடி வருகின்றனர்.
இந்த அத்துமீறலால் கண்மாய்களின் கட்டமைப்பு முற்றிலும் சிதைவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், இத்தகைய கனிம வளக் கொள்ளை தொடர்வது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது,” எனத் தெரிவித்தனர்.
உடனடி நடவடிக்கை பாயுமா?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சட்டவிரோத மண் கடத்தலை மாவட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்டுள்ள கனரக லாரிகளைக் கைப்பற்றி, இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் புள்ளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
