மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மீது அவர் முன்வைத்த காட்டமான விமர்சனங்களின் தொகுப்பு இதோ:


சினிமா கிளைமாக்ஸ் போலப் பேசுகிறார் விஜய்:
“முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸில் பேசுவது போல அவர் பேசுகிறார். பேசினால் கத்திப் பேசுகிறார், இல்லையென்றால் பேசாமலேயே இருக்கிறார். காவல்துறை தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறந்து விஜய் பேசி வருகிறார். கரூர் நெரிசல் விவகாரத்தில் போலீஸ் தவறு செய்ததாகக் கூறும் விஜய், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?”
கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதா?
“கட்சி நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும். இது கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல உள்ளது. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பது போல கருப்பு சட்டை மட்டுமே அணிந்திருந்தாரே தவிர, விஜய்யின் பேச்சிலோ, அவரது உடல்மொழியிலோ துக்கம் வெளிப்படவில்லை. வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக விஜய் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டாம். அவரது பேச்சில் ஆணவமும், அகங்காரமும்தான் தெரிகிறது.”
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – குழந்தை கூட நம்பாது:
“விஜய்க்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவெகவை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள்தான். அதிமுக உறுப்பினர்கள் தானாகவே பதவி விலகினார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது. அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது அப்பட்டமான குதிரை பேரம். பிள்ளை பிடிப்பது போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களைப் பிடித்து ஆட்சி நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். 6 அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம்தான். தவெகவினர் எம்.எல்.ஏ திருடர்கள்; இந்தச் செயலுக்குப் பின்னால் ஊழல் இருக்கிறது.”
தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி:
“தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்திதான் தவெக. தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகள் ஆனாலும் தவெக அரசு நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.”
‘Reel Less Work More’ – தினகரன் அறிவுரை:
“இனிமேலாவது ரீல் விடுவதைக் குறைத்துக்கொண்டு, விஜய் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ‘Reel Less Work More’ என்ற நிலைக்கு அவர் மாற வேண்டும். ஷூட்டிங் மனநிலையில் இருந்து முற்றிலும் வெளியே வந்து, உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்பட வேண்டும்” என்று டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
