Homeசெய்திகள்தமிழ்நாடுவாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு...

வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

காவிரி பாசன மாவட்டங்களில் வாடத் தொடங்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும், வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு சாகுபடிக் காலம் முழுவதும் தண்ணீர் கிடைக்காது என்ற அச்சத்தால், வழக்கமான அளவைவிடப் பாதிக்கும் குறைவாக சுமார் 7 லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இருப்பினும், அந்தப் பயிர்களையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததைக் காரணம் காட்டி, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வினாடிக்கு 10,920 கன அடியாக இருந்த நீர் திறப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, அக்டோபர் 25ஆம் தேதி வினாடிக்கு 1,003 கன அடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது வரை அதே அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாகவும், இந்த அளவு குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்யும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்பார்த்த வடகிழக்குப் பருவமழையும் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யாததால், சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் விவசாயிகள் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றனர்.

வசதியில்லாத விவசாயிகள் அருகிலுள்ள நீர்நிலைகளிலிருந்து பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயிர்களுக்கு ஊற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

சம்பா மற்றும் தாளடி பயிர்களின் சராசரி வாழ்நாள் 120 முதல் 125 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது பெரும்பாலான பயிர்கள் 40 முதல் 50 நாட்களையே கடந்துள்ளன. இன்னும் 70 முதல் 80 நாட்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமில்லை.

அடுத்த சில நாட்களில் ஓரளவு வடகிழக்குப் பருவமழை பெய்து, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61.53 அடியாகவும், நீர் இருப்பு 25.84 டி.எம்.சி.யாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த நீரைக் கொண்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமழையும் குறிப்பிடத்தக்க அளவில் பெய்யாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியும் பெரிய அளவில் நடைபெறவில்லை. தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர்.

இந்தப் பயிர்களும் வறட்சியால் கருகிவிட்டால் விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். குறிப்பாக, வட்டிக்குக் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்த தவெக அரசு, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 கடன் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாகவும், மீதமுள்ள கடன் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு கூட்டுறவு வங்கிகள் மூலம் அழுத்தம் தரப்படுவதாகவும் அன்புமணி தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். சம்பா சாகுபடியில் ஏற்படும் இழப்பும் சேரும்போது விவசாயிகளின் நிலை மேலும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, உரிய இழப்பீடுகளை வழங்குவதே விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான வழி என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக அதிகாரிகள் குழுவை காவிரி பாசன மாவட்டங்களுக்கு அனுப்பி நேரில் ஆய்வு செய்து, வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதுடன், விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருவதா? தேர்தலுக்காகக் காவிரி அரசியல் செய்யக் கூடாது: அன்புமணி இராமதாஸ்

MUST READ