- Advertisement -
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் ரூ.25 லட்சம் கொள்ளை
திருப்பதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ரூ.25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அடுத்த வைகுண்டபுரம் சாலையில் உள்ள தனலட்சுமி நகரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுப்பதற்காக பொது மக்கள் சென்றபோது ஏ.டி.எம்.இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சந்திரகிரி டி.எஸ்.பி. யஷ்வந்த், குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
விசாரணையில் அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையர்கள் சி.சி.டி.வி. கேமிராவிற்கு கறுப்பு பெயிண்ட் ஸ்ப்ரே அடித்து ஏ.டி.எம் இயந்திரத்தை கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ரூ.25 லட்சம் வரை பணம் கொள்ளை அடித்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.