திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா்.
தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்துள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதனைத் தனது பதிவின் மூலம் தெரிவித்த அவர், “சகோதரர் தேஜஸ்வியை தமிழ்நாடு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இன்று மாலை மேட்டுபாளையத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், இருவரும் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். “பெரியார் மற்றும் கர்பூரி தாகூரின் வழிக்காட்டுதலோடு நாம் ஒன்றுபட்டு, பிரிவினைவாத சக்திகளை வீழ்த்தி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்” என்றார்.
சமூக நீதியை முன்னிறுத்தும் இந்த இயக்கத்தில், மேட்டுபாளையத்தில் நடைபெறும் கூட்டம் முக்கிய கட்டமாக இருக்கும் என்றும், மக்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
