முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஓபிஎஸ் சந்திப்பு என்பது நிச்சயமாக கூட்டணியை நோக்கி நகர்த்தாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ், பிரேம லதா போன்றவர்கள் சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தேமுதிக, திமுக கூட்டணிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. 8 தொகுதிகளை கொடுப்பதாக திமுக பேசியுள்ளது. 10 முதல் 12 இடங்கள் கேட்டுப்பெற வேண்டும் என்கிற நிலையில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க போகிறார்கள் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அதிமுக ராஜ்யசபா இடம் வழங்கியபோது, கூட்டணி தொடர்பாக ஜனவரிக்கு பிறகு முடிவு எடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் சொல்கிறார். இதன் மூலம் நாங்கள் திமுக கூட்டணிக்கு செல்லப் போகிறோம் என்று அதிமுகவுக்கு சமிக்ஞை கொடுக்கிறார். இதேபோல், திமுகவுக்கு, எனக்கு ராஜ்யசபா கொடுக்கப் போகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். தேமுதிகவுக்கு தான் ஒரு மீட்டுருவாக்கம் தேவைப்படுகிறது. மாறாக திமுகவுக்கு, தேமுதிகவின் வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெறும் என்கிற கட்டாயம் இல்லை. அதனால் இந்த விவகாரத்தில் வழக்கமான நவடிக்கைகளை தான் மேற்கொள்ளும் மனநிலையில் உள்ளனர்.
ஓபிஎஸ் காலையில் நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். ஒபிஎஸ் சந்திப்பு கண்டிப்பாக திமுகவை நோக்கி நகர்த்தாது. ஏனென்றால் அவர் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார். அப்படி தனிக்கட்சி தொடங்கி, அந்த அணி திமுக கூட்டணிக்கு வந்தால் ஓபிஎஸ் அடிபட்டு போய்விடுவார். திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானமாக பேசி கட்டமைக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஓபிஎஸ் திமுக எதிர்ப்பு அரசியலை மட்டுமே பேச முடியுமே. இல்லாவிட்டால் அன்வர் ராஜா போல திமுகவில் இணைய அவர் தயாராக இருக்க வேண்டும்.
திமுகவுக்கு சென்றால் அது சரிவராது என்று ஓபிஎஸ்க்கும் நன்றாக தெரியும். அதிமுகவின் தலைமை பொறுப்பை வகித்துள்ள ஓபிஎஸ் தன்னுடைய நிலை மறந்து யாசகம் கேட்பது போல பிரதமர் மோடியை சந்திக்கும் பாக்கியம் கிடைக்குமா? என்று கடிதம் எழுதுகிறார். அதுவே பிரதமர் சந்திக்கவில்லை என்றதும், திடீரென கல்வி நிதி ஏன் தரவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். பாஜக வேண்டாம் என்று முடிவு எடுத்த உடன் அறிக்கை வெளியிடுகிறார். ஓபிஎஸ்க்கு பெரிய அளவில் வாக்கு வங்கி என்பது கிடையாது. அவருக்கு பின்னால் இருக்கும் வைத்திலிங்கம் தான் அவருக்கு பலமே. அவரும் தற்போது செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பில் தாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளனர். ஒபிஎஸ் ஒரு கட்சி தொடங்கப் போவது உண்மை. அந்த கட்சி விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு ஆலோசனை கூட்டம் சொல்கிற செய்தி. அதனால் தான் தேர்தல் நேரத்தில் நாங்கள் முடிவு எடுப்பாம் என்று சொல்கிறார்கள். பாஜக திரும்ப அழைத்தால் மீண்டும் போய் சேர்ந்துகொள்வார் ஓபிஎஸ். அதற்கான வாயிலை தான் திறந்து வைத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி எஸ்டிபிஐ மாநாட்டில் இனி பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொன்னார். அந்த செய்தி ஈரம் காய்வதற்குள் அவர் டெல்லி போய்விட்டு வந்தார். அதேபோல், இந்த செய்தி வெளியாகி விவாதப் பொருளான உடன் அமித்ஷாவோ, மோடியோ தொடர்பு கொண்டு வாங்க பன்னீர்செல்வம் சந்திக்கலாம் என்றால் உடனே போய்விடுவார். இதுதான் அவருடைய நிலைப்பாடு.
குருமூர்த்தி சொல்லி ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதேபோல குருமூர்த்தி சொல்லிதான் இந்த முடிவையும் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் விஜய் ஒரு வளர்ந்து வரும் சக்தி என்று காட்ட வேண்டும். அதிமுகவை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால், அந்த இடத்திற்கு பாஜக வர முடியாது. அப்போது பெரியார், அண்ணாவை பேசுகிற விஜய்தான் வர முடியும். அந்த அரசியலுக்கு அவர்கள் தயாராகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.