துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அந்த தடை உடைபட்டு விடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு சென்றதாக கருதவில்லை. 2 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுக்கள் தான் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைக்கு ஆளுநர் ரவியிடம் அதிகாரங்கள் எதுவும் செல்லவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தேடுதல் குழு, அதற்கான பணிகளுக்கு சட்ட ரீதியாக தடை உள்ளது. மற்றொருன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வர வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஒரு மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர், அல்லது மாநில அரசின் பிரதிநிதி, மாநிலத்தின் துறை சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞரும் பொய் சொல்ல முடியாது. அதாவது உச்சநீதிமன்றத்தில் எதுவும் சொல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை மாற்ற சொன்னதாக சொல்ல மாட்டார்கள்.

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் பல வரிகள் மிகவும் ஆட்சேபிக்க தக்கவையாகும். சொல்லப் போனால் வழக்கறிஞர் சங்கங்களும் ஆட்சேபிக்க வேண்டும். என்ன காரணம் என்றால் மூத்த வழக்கறிஞர் வில்சன், வகுப்பறை போன்று தங்களுக்கு பாடம் எடுக்கிறார் என்கிற ரீதியில் வார்த்தை பிரயோகம் உள்ளன. இது பெரிய தவறாகும். ஏனென்றால் சட்டம் ஒரு இருட்டறை. வக்கீலின் வாதம் விளக்கு என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். வழக்கறிஞர் தான் வாதிட முடியும். அவரது வாதம் என்பது லெக்சர் தான் அதில் என்ன சந்தேகம். அப்போது நீதிபதிகள், மிகவும் நீளமாக பேச விரும்புகிறார்களா? என்கிற வாதம் வந்துவிடும். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவில் இருந்து, அந்த வாதத்தை நீக்க வேண்டும். அதற்கு தனியாக ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் இத்துடன் முடிந்து போகபோவது இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இது மூன்று முனைகளாக பிரிந்து போய் கொண்டிருக்கிறது. இயல்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. அந்த உத்தரவின் விளைவாக எழுந்த சட்டங்கள். சட்டங்களின் விளைவாக எழுந்த தேடுதல் குழுக்கள் ஆகியவை ஒரு முனை. உயர்நீதிமன்றம். அந்த உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர். அவர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள். உயர்நீதிமன்றத்தின் கருத்து மற்றும் இடைக்காலத் தடை ஒரு முனையிலும். வாதம் செய்த வழக்கறிஞர்கள் பற்றிய தனிப்பட்ட முறையிலான கருத்து ஒரு முனையாகவும் இது மாறுகிறது. இந்த மூன்று முனைகளும் நல்லது அல்ல. உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அந்த உத்தரவு பிடிக்கவில்லையா. நாம் மறுஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்ய வேண்டும். நீதியரசர் சந்துரு இது தொடர்பாக ஆங்கில பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது சட்ட ரீதியான வழிமுறையாகும். ஜனாதிபதி விளக்கம் கோருவதே சட்ட ரீதியான அணுகுமுறை இல்லை என்று அவர் சொல்கிறார். ஜனாதிபதி விளக்கம் கோரும் நிகழ்வுகள் 15 முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தீர்ப்பின் வலிமை என்பது ஜனாதிபதியின் விளக்கம் கோருதலுக்கு வழங்கும் பதிலுக்கு கிடையாது. இத்தனைக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விளக்கம் அளிக்கும். ஆனாலும் 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் வலிமை, ஜனாதிபதியின் கேள்விக்கு அளிக்கப்படும் பதிலுக்கு கிடையாது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் முன்னால் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறபோது, என்ன எல்லாம் நிலுவையில் இருந்தது. 1. ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. மற்றொன்று ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளது. இந்தநிலையில் உயர்நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது என்பது உச்சநீதிமன்றத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிற ரீதியில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறபோது உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உடைபட்டு விடும். மறுஆய்வு என்றால் அதே உத்தரவு தான் வரும். மறுசீராய்வு மனு என்றால் பெரிய அமர்வுக்கு வழக்கு போகும். ஆனால் ஆளுநர் Vs தமிழ்நாடு அரசின் தீர்ப்பு அதற்குள்ளாக போகவே இல்லை. இடைக்கால தடை வழங்குகிறபோது, அது மறைமுகமாக உச்சநீதிமன்றத்தின் மறுஆய்வு மனுக்களின் அதிகார வரம்புக்குள் திருத்தம் செய்ததாக ஆகிறது. மூத்த வழக்கறிஞர்கள் இதற்கான விளக்கங்களை வைத்திருப்பார்கள். உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு போடுகிறது. அந்த தீர்ப்பின் நோக்கம் கால தாமதத்தை தவிர்ப்பது. ஆஸ் சூன் அஸ் பாசிபிள் என்றால் என்ன அர்த்தம்? பெரிய சட்ட சிக்கல் உள்ள விஷயம். இந்த இடத்தில் தான் உச்சநீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. அதுவும் அவர்களாக கொடுக்கவில்லை. உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை அடிப்படையில் தான் இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அதிகபட்ச அவகாசம் 90 நாட்கள்.
இந்த தீர்ப்பை அமல்படுத்துவதன் விளைவாக நமது பல்கலைக்கழங்கள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழு. துணை வேந்தர் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான். தலைமை இல்லாவிட்டால் சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்ட குழுவே பல்கலைக் கழக நிர்வாகத்தை கவனிக்க முடியாது. ஆனால் சிண்டிகேட் குழுவை வைத்து பல வருடங்களாக நிர்வாகித்து வருகிறார்கள். அதற்கு காரணம் தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை இடம்பெற வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அப்படியான விதிகள் எதுவும் கிடையாது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துதான் தீர்ப்பே வந்தது. அந்த தீர்ப்பின் நோக்கம் என்னவோ, அதை திசை திருப்புகிற வகையில் உயர்நீதிமன்றத்தின் தடை வந்துள்ளது. இது ஒரு மாபெரும் சிக்கல். இதை நோக்கிய பயணத்தில் பல்வேறு சட்டக்கூறுகள் வெளிப்படும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.