அமெரிக்காவில் கருப்பின மக்கள் போராட்டத்தின் போது, அங்குள்ள இந்தியர்கள் அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தற்போது அதற்கான பிரதிபலனாக டிரம்ப் H1-B விசா கட்டணங்களை உயர்த்தி இருப்பதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.

H1-B விசா கட்டண உயர்வால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பகள் மற்றும் டிரம்ப் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- H1-B விசாவுக்கு டிரம்ப் ஒரு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். இதனால் இந்தியாவின் வளர்ச்சி பாதிப்பிற்குள்ளாகும். இந்தியா வல்லரசாவதை டிரம்ப் தடுத்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 19ஆம் தேதி அன்று அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்கான H1-B விசாவுக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். அளவுக்கு அதிகமான நபர்கள் வேலைக்காக அமெரிக்காவுக்கு வருவதை கட்டுப்படுத்துவதற்காக இனி H1-B விசா வாங்க ஒரு நபருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று பீதி அடைந்து கூக்குரல் எழுப்பினார்கள். அத்துடன் H1-B விசா கட்டண உயர்வு 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் விடுமுறை மற்றும் சொந்த காரணங்களுக்காக இந்தியா வந்தவர்கள் உடனடியாக அமெரிக்க திரும்ப முயற்சித்தனர். இதனால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தது. அமெரிக்க அரசின் முடிவு மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்தது.
H1-B விசா கட்டணம் உயர்வு குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. அதேவேளையில் நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த், இந்த கட்டண உயர்வு நன்மைதான். இந்தியா வல்லரசாக டிரம்ப் ஒரு ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களே கலங்க வேண்டாம். இந்தியாவுக்கு திரும்பி வந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று கூறியுள்ளார். H1-B விசா விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , அமெரிக்காவின் மார்கோ ரூபியோ உடன் சந்தித்து பேசியபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய மக்களுக்கு ஒரு வில்லன் போன்று தோற்றமளிக்கிறார். இதனால் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது H1-B விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் சம்பாதிக்கப் போவது யார் என்கிற கேள்வி எழுகிறது?
H1-B விசா கட்டணங்களை உயர்த்தியதற்கு டிரம்ப் தெரிவித்துள்ள காரணங்கள் என்ன என்று பார்த்தால்? அதி உயர் தொழில்நுட்ப திறன்களை கொண்டவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர H1-B விசா அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்க தொழிலாளர்களை நீக்கிவிட்டு அவர்களை விட திறமை குறைவான, சம்பளம் குறைவான ஆட்களை வெளி நாடுகளில் இருந்து கொண்டுவர இந்த ஏற்பாடு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தன்னுடைய உத்தரவில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை பயன்படுத்தி தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க பல தொழில்நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 2000 – 2019 இடையில், இத்தகைய STEM workers-ன் எண்ணிக்கை 12 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரித்திருக்கும் நிலையில், அதி உயர் தொழில்நுட்பங்க வேலைகளுக்கான தேவை அதிகரிக்கவில்லை. அப்படி அதிகரிக்காத போதும் 25 லட்சம் தொழிலாளர்களை இறக்குமதி செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
குறிப்பிட்ட ஐ.டி. நிறுவனம் ஒன்று தன்னிடம் பணிபுரிந்த 1,5000 அமெரிக்கர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, வெளிநாட்டில் இருந்து 5,000 தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள். அவர்களில் 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள். மற்றொரு அமெரிக்க ஐ.டி நிறுவனம் 27ஆயிரம் அமெரிக்க தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் 25 ஆயிரம் வெளி நாட்டினரை நியமித்துள்ளனர் என்று அதிபர் டிரம்ப் உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி வெளியேற்றப்படும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக பயிற்சி அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். இது தொடர்பா அமெரிக்க தொழிலாளர்கள் புகார் அளித்த நிலையில், அமெரிக்க அரசு H1-B விசா என்பது ஒரு ஸ்கேம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த H1-B விசாவால் பயனடைந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய ஐ.டி. நிறுவனங்கள்தான். 2015 முதல் 2024ஆம் ஆண்டு வரை H1-B விசா மூலம் அமெரிக்கா சென்றவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். 11.7 சதவீதம் சீனர்கள். மற்ற நாடுகள் குறைந்த அளவில் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக H1-B விசா மூலம் 41 லட்சம் பேர் சென்றுள்ள நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியர்கள். அதேவேளையில H1-B விசாவில் அமெரிக்காவில் சென்று பணிபுரிபவர்களில் அதிக சம்பளம் வாங்குவதில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். கடைசி இடத்தில் நேபாளம் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியர்கள் 21வது இடத்தில் உள்ளனர். நம்மைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் இடத்தில் துருக்கி, நைஜீரியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் உள்ளன. H1-B விசாக்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களில் 70 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் டாலரை விட குறைவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் அண்மையில் வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் இந்தியர்களை இனிமேலும் உள்ளே விடக்கூடாது. அமெரிக்கா கிறிஸ்தவ நாடாக இருக்கும் வரைதான் இங்கே சுதந்திரம் இருக்கும் என்று சார்லி கிர்க் கூறியுள்ளார். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்கா இதுவரை சந்திக்காத ஒரு அபாயகரமான அரசியல் நெருக்கடியை சந்திக்க இருப்பதாக பேசியுள்ளார். இந்தியர்களின் பெருமைகளை பேசக்கூடிய அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள், தங்களை வெள்ளையர்களுடன் தான் அடையாளப்படுத்தி கொள்கின்றனர். பிளாக் லிவ்ஸ் மேட்டர் விவகாரத்தில் டிரம்ப்-ஐ ஆதரித்தவர்கள்தான் இவர்கள். இன்றைக்கு அது திருப்பிக்கொண்டு அடிக்கிறது.
பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்று புடின், ஜின்பிங் உடன் பேச்சவார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப் பயந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் உண்மையில் மோடிதான், டிரம்பிடம் சரணடைந்து விட்டார். காரணம் இந்திய பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்து பிணைக்கப்பட்டிருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதை தடுப்பது மென்பொருள் ஏற்றுமதி, ஐடிஇஎஸ், பொருள் ஏற்றுமதி போன்றவைதான். டிசிஎஸ், பின்போசிஸ், விப்ரோ போன்ற நிறுன முதலாளிகளின் நலன், அவர்களின் அந்நிய செலாவணி வருவாய், அதை சார்ந்த தொழில், ஐடி ஊழியர்கள், அங்கு இருக்கும் லட்சக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள், அவர்களுடைய நலன், வடஇந்திய மேல் தட்டு மக்களின் நலன்களுக்காக தான் மோடி வேலை பார்க்க முடியும். மத்திய அமைச்சர்கள் போய் அமெரிக்காவிடம் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும், அவர்கள் சொல்வதை கேட்காமல் இவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. , இவ்வாறு அவர் தெரிவித்தார்.