தற்போதுள்ள இவிஎம் இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் நாட்டில் கண்டிப்பாக ஜனநாயகம் மலராது என்றும், இதனை மாற்ற மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உண்மை என்பதை லைவ் டெமோ மூலம் நிரூபிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று பேசியதாவது :- இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2015-16ஆம் ஆண்டுகளில் எலெக்டோரல் ரோல் நெட்வொர்க் என்கிற மென்பொருளை உருவாக்கினார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வது போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்ட இந்த மென்பொருளுக்காக ரூ.2,000 கோடி செலவு செய்துள்ளார்கள். இவ்வளவு செலவு செய்து, ஒரு பாதிப்பிற்குள்ளாகிற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் உத்திரபிரதேசத்தில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஆயிரம் பேரை நீக்கலாம். கோயம்புத்தூரில் ஆயிரம் பேரை சேர்க்கலாம்.
ஒரு பாதிப்பிற்குள்ளாக கூடிய அமைப்பை உருவாக்கி எப்படி வாக்குகளை திருடலாம் என்பது குறித்து ராகுல்காந்தி இரண்டு முறை செய்தியாளரை சந்தித்து விளக்கி இருந்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவருக்கு தெரியாமல் அவருடைய போன் நம்பரை திருடி, அவருடைய வாக்குச்சாவடியில் காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள், தலித்துகள் போன்றவர்களின் பெயர்களை நீக்குகிறார்கள். இதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் பலருக்கு முகவரி பூஜியம் என்று உள்ளது. பெற்றோர்களின் பெயர் ஏ,பி,சி என்று சொல்கிறார்கள்.
பாஜகவினுடைய பூத் லெவல் ஏஜெண்ட்டுகள் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு வெற்றி பெற முடியும் என்றால் என்ன அர்த்தம்? தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக சேர்ந்து 39 சதவீதம் வாக்குகளை வாங்குகிறோம். கூடுதலாக 5 சதவீதம் வாக்குள் வந்தால் 44 சதவீதம் வாக்குகள் வந்துவிடும். நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அமித்ஷா சொல்கிறார் என்றால் அவருடைய confidence level எந்த அளவில் இருக்கிறது என்று பாருங்கள்.
கிட்டதட்ட 70 வாக்குச்சாவடிகளில் 5 ஆயிரம் வாக்குகளுக்கு கீழாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தொகுதியில் ஒரு கட்சி அதிகம் வாக்குகள் வாங்கியுள்ளது. அதை உ.பி.யில் இருந்துகொண்டு ஒருவர் சைதாப்பேட்டை தொகுதியில் 5000 பேரை நீக்க முடியும் என்றால், பிளாக் லெவல் அதிகாரிகள் எந்தவித சரிபார்ப்பும் இன்றி அவர்கள் அப்படியே நீக்கினார்கள். இப்படிதான் ஒரே மாதத்தில் பிகாரில் 65 லட்சம் பேரை நீக்கி தேர்தல் ஆணையம் சாதனை படைத்திருக்கிறார்கள்.
தேர்தலின்போது மாலை 5 மணிக்கு மேல் 7 சதவீதம், 8 சதவீதம் அதிகமாக விழுந்திருக்கிறது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று அதில் உள்ள பட்டனை அழுத்தி பார்த்தால் உடனடியாக தெரிந்துவிடும். ஆனால், இவர்கள் 3,4 நாட்கள் கழித்து தான் 7 சதவீத வாக்குகளை கூட்டி காண்பிக்கிறார்கள். அப்போது, இவர்கள் சேர்த்த பூஜியம் முகவரி, ஒரே முகவரியில் 80 பேர், பெயரை இல்லாமல் போலி வாக்குகளை சேர்த்து, 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் திருத்தம் மேற்கொண்டு, அந்த வாக்குப்பபதிவு இயந்திரம் மூலமாக தான் இவர்கள் இறுதி முடிவகளை அறிவிக்கிறார்கள்.
ஒரு புறம் முறைகேடுகள் மேற்கொள்ள வாக்காளர் பட்டியலை திருத்துகிறார்கள். மறுபுறம் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து 5 மணிக்கு மேலாக வாக்கு சதவீதத்தை உயர்த்தி காண்பிக்கிறார்கள். 2024 தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல் கிட்டதட்ட 4.65 கோடி பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். 240 தொகுதிகளில் பாஜக வென்றுள்ள நிலையில், இந்த 4.65 கோடி வாக்குகள் எப்படி வந்தது என்பதற்கு எந்தவிதமான பதிலும் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது வழங்க மறுக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் வாக்குத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் 2024 மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். 2024 தேர்தல் திருடப்பட்ட தேர்தல். எனவே அது ரத்து செய்யப்பட வேண்டும். இரண்டாவது 2015-ல் இருந்து தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் இருந்த அனைத்து அலுவலர்கள் மீதும் குற்ற விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது விவிபேட் மூலமாக வருகிற ஸ்லிப் தெர்மல் பிரிண்டுக்கு பதிலாக, லேசர் பிரிண்ட் மூலம் அச்சிடப்பட்டு, தனிப் பெட்டியில் செலுத்தப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது விவிபேட் இயந்திரத்தையும், அந்த பெட்டியில் உள்ள ஸ்லிப்களையும் ஒப்பிட்டு முடிவகளை அறிவிக்க வேண்டும்.
தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் வாங்குவதற்கு மட்டும் ரூ.5,400 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் இதை எண்ணுவதற்கு 7 நாட்கள் ஆகும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வடிகட்டிய ஒரு பொய்யை கூறி இருக்கிறார்கள். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு உடந்தையாக இருக்கிறது என்றால், நாட்டின் ஒட்டுமொத்த சிஸ்டத்தையே பாஜக அரசு அடிமையாக மாற்றி வைத்துள்ளது என்பதுதான் நம் கண் முன்னால் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
எனவே தற்போது இருக்கின்ற இவிஎம் இயந்திரம், இந்த தேர்தல் ஆணையம் மூலம் கண்டிப்பாக ஜனநாயகம் மலராது. இதனை மாற்ற வேண்டும். எனவே மக்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்படி செய்தால் தான் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். தேர்தல் முறை மாற்றப்படும். தமிழ்நாட்டில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதனால்தான் பாஜகவுக்கு 18 சதவீதம் வாக்குகள் வந்துள்ளது. ஆனால் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் அவர்கள் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.