எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் முதலில் பாதிக்கப்பட போவது விஜய்தான். ஆனால் அவர்கள் களத்திலேயே இல்லை. திமுக – அதிமுக தான் களத்தில் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.


தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவம் நடைபெற்று 30 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மகாபலிபுரத்தில் சந்தித்து பேசினார். அது குறித்து அதிகாரப்பூர்வமாக அவர்கள் கட்சி சார்பில் ஏன் அறிவிக்கவில்லை? இதனை தொடர்ந்து நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுவிலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்ன என்றால், இந்த சம்பவத்திற்கு ஒரு சதவீதம்கூட அவரிடம் இருந்து குற்ற உணர்ச்சி வெளிப்பட வில்லை.
அரசாங்கத்தை குறை சொல்வதிலும், முழுக்க முழுக்க தீர்ப்பை படித்துக்காட்டுவதில் விஜய்க்கு இருக்கும் ஆர்வம். இறந்தவர்கள் எல்லாம் உங்களுக்காக வந்த கூட்டம் என்று குறைந்தபட்சம் அந்த தார்மீக பொறுப்பை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள். விஜய் உடைய அரசியல் இதோடு முடியப் போவது இல்லை. கூட்டநெரிசல் சம்பவம் பொதுவெளியில் நடைபெறுகிறது. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் 4 சுவர்களுக்குள் நடக்குமா?

தவெக பொதுக்குழுவில் தங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார். அந்த பொதுக்குழுவில் தங்களுக்காக சட்டமன்றத்தில் பேசி அதிமுகவுக்கு கூட நன்றி தெரிவிக்கவில்லை. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க அரசின் மீது தான் குற்றம். விஜய் மீது குற்றம் இல்லை என்பது போன்று பேசினார். குறைந்தபட்சம் நன்றி தெரிவிப்பதாக இருந்தால், எடப்பாடிக்கும், அதிமுகவுக்கும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். மாறாக விஜய் அவற்றை கடந்துசென்றார். இதுதான் தற்குறித் தனமாகும்.
ஆதவ் அர்ஜுனா, ஒருமையில் பேசுவது. தரம் தாழ்ந்து பேசுவது. 25 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்களை பேசுவது எல்லாம் கைத்தட்டுக்காக நடைபெற்றதாகும். இது அரசியல் அல்ல. உங்களுடைய அரசியல் என்ன? கலைஞர் கைதின்போது ஸ்டாலின் எங்கே சென்றால் உங்களுக்கு என்ன? மோடி எங்கே வாயை திறந்தாலும் 60 வருடங்களாக இறந்த போன நேருவை இழுப்பது போன்றதுதான் இது. இதில் இருக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான அரசியல் என்ன? இதை விஜய் ரசிக்கிறார். இது அற்ப அரசியலாகும்.

இன்றைக்கு எஸ்.ஐ.ஆர் குறித்து முதலில் கவலைப்பட வேண்டிய கட்சி, தவெக தான். ஜென் ஸீ தலைமுறையினர் தான் உங்களுடன் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலே கிடையாது. திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே எஸ்.ஐ.ஆரை பார்த்து தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று ஆதரித்து வழக்கு தொடர்வோம் என்று ஜெயக்குமார் சவடால் விட்டார். ஆனால் பாதிப்பு வராமல் எஸ்.ஐ.ஆர். நடத்த வேண்டும் என்று தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். காரணம் பாதிப்பு வரப்போகிறது என்று அவர்களுக்கு தெரிகிறது. எஸ்.ஐ.ஆர் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியது விஜய். காரணம் அவருடைய கட்சியில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள்.
தவெகவினர் இந்த ஒரு விஷயத்திற்காக தான் கவலைப்பட வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்காக பி.எல்.ஓ-க்களுடன் திமுக, அதிமுக பிரதிநிதிகள் செல்கிறார்கள். ஆனால் விஜய் கட்சியினர் எங்கேயும் இல்லை. விஜய் களத்திலேயே இல்லை. அப்படி இருக்கும்போது திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்பது கேஸ் பலூன் போன்றதாகும். தேர்தலின்போது களத்தை மாற்றுகிற திறமை விஜய்க்கு, கூட்டணி அமைத்தால்தான் உண்டு, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


