எதிர்வரும் நாட்களில் அதிமுக, பாஜக இடையே மோதல்கள் அதிகரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அமித்ஷா தமிழக சுற்று பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழகத்திற்கு வந்திருந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு நடைபெறவில்லை. அமித்ஷா, செயல்திட்டம் தோல்வி அடைந்தது தென் மாநிலங்களில் மட்டும்தான். எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மகன் மீது உள்ள வழக்குகள் பிரச்சினையாகும். ஆனால் அவரை வழக்குகளை காண்பித்து பாஜக மிரட்ட முடியாது. அதிமுகவை உடைத்தது பாஜக தான். ஆனால் அதை ஒருங்கிணைத்து நிற்க வைப்பது எடப்பாடி பழனிசாமிதான்.
புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா எடப்பாடி பழனிசாமி குறித்து வாய் திறக்கவில்லை. விமான நிலையத்தில் சந்திப்பார் என்றும், புதுக்கோட்டை மேடையில் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டபோதும், எடப்பாடி பழனிசாமி வரவில்லை. எனவே இந்த கூட்டணி ஒருங்கிணைப்பாக இல்லை. அமித்ஷா, தற்போது ஓபிஎஸ்-ஐயும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் சேர்க்க சொல்கிற நிலையில், எடப்பாடி பழனிசாமி அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் மகன் விமான நிறுவனம் தொடங்குவதாக கூறி விமானம் வாங்கி ஒடிசாவில் நிற்க வைத்துள்ளனர். இது தொடர்பாக அந்நிய செலாவணி மோசடி வழக்கு அவர் மீது உள்ளது. பாஜகவை பொறுத்தவரை தங்களின் நோக்கத்திற்காக என்ன வழக்குகளை வேண்டுமானாலும் போடுவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாஜக, அதிமுக உடன் இணைந்துதான் தேர்தலை சந்திக்கும். அதனால் தான் புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா 2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக வாங்கிய வாக்குகளை சேர்த்தால் 26 தொகுதிகளில் தாங்கள் வெற்றி பெற்று இருப்போம் என்று சொன்னார்.
அதிமுகவுக்கு விழுந்தது பாஜக எதிர்ப்பு வாக்குகளாகும். அதேபோல் பாஜகவுக்கு விழுந்தது முக்குலத்தோர் வாக்குகளாகும். பாஜகவும் சரி, விஜயும் சரி பாஜக வாக்குகளை தான் பறிக்க முயற்சிக்கிறார்கள். திராவிடக்கட்சிகளில் மதச்சார்பின்மையில் மிகவும் சாப்ட் ஆன கட்சி அதிமுக தான்.

பாஜக, அதிமுகவை உடைத்து அந்த இடத்திற்கு வருவதற்கு முயற்சி செய்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து போராடுகிறார். வரும் நாட்களில் இந்த மோதல் இன்னும் அதிகமாகும். டிடிவி தினகரன், இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் நலன்தான் முக்கியம் என்று கூறியுள்ளார். தவெக கூட்டணியில் வருவதற்காக அவர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார். லண்டன் ஓட்டல் வழக்கை காண்பித்து தான் அவரை பாஜக மிரட்டியது. சசிகலா இனி கட்சிக்குள் ஒருபோதும் வர முடியாது. வேண்டுமென்றால் அவர் காசு கொடுத்து எடப்பாடிக்கு எதிராக 50 தொகுதிகள் வரை தோற்கடிக்க முடியும். எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண் சசிகலா ஆவார்.
சசிகலாவிடமே வித்தைகளை கற்றுக்கொண்டு கட்சியை கைப்பற்றி நிற்க வைத்து விட்டார். சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த எம்எல்ஏக்களை எல்லாம், எடப்பாடி பழனிசாமி காசு கொடுத்து வாங்கிவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் அவருடைய மகனை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். அவரை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த அளவுக்கான பக்குவம் மிதுனுக்கு கிடையாது. ராஜ் சத்யனை அழைத்து மிதுனை ஆளாக்கி தரும்படி கூறினார். ஆனால் அவருடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். மிதுன் மேலே வரவே இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


