திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிற்பதால், அவரை பழிவாங்கும் விதமாக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.


அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், அதன் அரசியல் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அமைச்சர் கே.என்.நேருவின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு அண்மையில் ஆட்கள் எடுக்கப்பட்டது. அந்த பணி நியமனத்தில் முறைகேடு என்று அமலாக்கத்துறை பிரச்சினையை எழுப்பியது. அதற்கு ஆதாரம் உள்ளதா? என்றால் கிடையாது. அதற்கு பதிலாக முறைகேடு நடந்ததாக தகவலை கசிய விடுவார்கள். பின்னர் அந்த தகவலை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாக்குவார்கள்.
அதன் பிறகு திடீரென ஒருநாள் அமலாக்கத் துறை சோதனை நடத்தி கருத்தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் திமுக அரசின் வெற்றிக்கு அவர் பாடுபடாத வகையில், அவரை முடக்க முடியுமா? என்று பார்ப்பார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. வேலைகளுக்கு விண்ணப்பிக்க முறையாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வுகளை நடத்தியது, ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் தான் நடத்தப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையில் 2569 + 110 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 499 பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் 187 மையங்களில் இந்த பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 955 பேர் தேர்வை எழுதினார்கள்.
செப்டம்பர் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டு அக்.7ஆம் தொடங்கி, 2025 பிப்ரவரி 17 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. கவுன்சிலிங்கிற்கு 6,600 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 2535 பேருக்கு பணியில் சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 62 பேர் பணியில் சேர்ந்தார்கள். இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் மிகவும் வெளிப்படையாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.

கே.என்.நேரு போன்ற திமுக அமைச்சர்கள் குறிவைப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா? என்ற பார்க்கிறார்கள். ஸ்டாலினை மிரட்ட முடியாது என்பதால், அவருக்கு கீழே இருக்கும் அமைச்சர்களை மிரட்ட பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை மூலம் வழக்கு தொடர்ந்தால் திமுக அரசு மீது ஊழல் அரசு என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். செந்தில் பாலாஜி போன்ற பல அமைச்சர்களுக்கு இதுபோன்று செய்துள்ளார்கள். இன்னும் பல அமைச்சர்களை நோக்கி இது விரிவடையக்கூடும்.
பீகாரில் அதானி நிறுவனம் தொழில் தொடங்க 62 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் பாஜக அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டினார். அதேபோல், பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணன், செபி மாதவி புச் மீதான புகார்களுக்கு பாஜக கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ், நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்துள்ளார். அன்புமணி மீது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை சுற்றி இருக்கும் அமைச்சர்கள் தற்போது குறிவைக்கப்படுவது ஏன் என்றால்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஸ்டாலின் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். மதுரையில் போய் நின்று பேசினார். தவறான நீதியை வழங்கியதற்காக மதுரையை எரித்த கண்ணகி வாழ்ந்த ஊர் இது. நீதி தவறினால் என்ன நடக்கும் என்கிற அறச்சீற்றம் வேறு யாருக்கும் வருமா? அதனால் திமுக அரசை ஊழல் அரசாக காட்டுவதற்காக புறப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அளித்தார்கள். தற்போது கே.என்.நேருக்கு வந்துள்ளனர். இந்தியா முழுவதும் தங்களுடைய ஆட்சியை நிருவுவதுதான் பாஜகவின் ஒரே இலக்கு. மற்ற மாநிலங்கள் எல்லாம் அதற்கு இறையாகி விட்டனர்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் உறுதியாக நிற்கிறார். எதிர்த்து அடிக்கிறார். ஸ்டாலினை குறி வைப்பதற்காக, அவருடைய சகாக்களை குறி வைக்கிறது பாஜக. முதலமைச்சர், திமுகவினருக்கு நேரடியாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த தேர்தலில் நிச்சயமாக திமுக வெல்லும். ஆனால் நாம் கூடுதல் கவனத்தோடு களத்தில் இருக்க வேண்டும். இடி, ஐ.டி., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் களத்தில் இறக்கவிடுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


