Homeசெய்திகள்கட்டுரைஅதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

-

- Advertisement -

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.

அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும் கவலையின்றித் தன்னுடய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த இயக்கம் இன்று நாலாபுறமும் கரைந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்ட நிலையிலும், எடப்பாடி பழனிசாமியின் சுயநலப் போக்கு மாறவில்லை. கட்சியின் இந்த அவல நிலையை உணர்ந்துதான், அவர் நடத்தும் அவசர ஆலோசனைக் கூட்டங்களைக்கூட தற்போதைய அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிருப்தியுடன் புறக்கணித்து வருகின்றனர்.

we-r-hiring

கைகூடி வந்த மாஸ் கூட்டணி…!
உண்மையில், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி நகரும் தவெக, ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு கேட்டது அதிமுகவிடம் தான். எடப்பாடி பழனிசாமியால் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வந்த வேகத்தில் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக மாறிய லீமா ரோஸ், அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை ஊடகங்களிடம் பகிரங்கமாக உறுதிப்படுத்தினார். அன்றைக்குத் தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்திருந்தால், அதிமுக என்ற இயக்கம் இன்று உயிர்ப்போடு இருந்திருக்கும், தொண்டர்கள் மத்தியிலும் ஒரு புதிய தெம்பு பிறந்திருக்கும். அதிமுக, தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்த ஒரு வலுவான கூட்டணி அமைந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை இந்தத் கூட்டணி வாரிச் சுருட்டியிருக்க முடியும். ஆனால், எடப்பாடியின் கண்ணை மறைத்த முதலமைச்சர் நாற்காலி ஆசையும், விஜய் முதலமைச்சர் ஆவதை ஏற்க முடியாத வன்மமும்தான் எல்லாவற்றையும் கெடுத்தது.அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

அதன் விளைவாகவே, எதிர்க்கட்சியான திமுகவின் மறைமுக ஆதரவோடு மீண்டும் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு எடப்பாடி காய்களை நகர்த்தியது அம்பலப்பட்டுள்ளது. எடப்பாடியின் இந்த நயவவஞ்சகச் செயல், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மாக்களுக்கும், கழகத்தின் உண்மைத் தொண்டர்களுக்கும் செய்த மன்னிக்க முடியாத துரோகம்.

வேடிக்கைப்பார்க்கும் இபிஎஸ்!
திமுக-எடப்பாடி துரோகக் கூட்டணியின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் தற்போது கரூரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நாளை கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களுக்கு அரசு வேலையும் வழங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்தைத் தடுக்க சட்ட ரீதியாக எதிர்க்கட்சியான திமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், முதலமைச்சர் விஜய் கரூர் பயணம் குறித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்யாமல், தனது மனதுக்கு நெருக்கமான திமுக எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பொலிவிழந்த அம்மா நினைவிடம்…!
எடப்பாடியின் சுயநலத்திற்கும் பதவி வெறிக்கும் இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை; கழகத் தொண்டர்களின் ஜீவாதாரமாக விளங்கும் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடம் பொலிவிழந்து பரிதாபமாகக் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அங்கே மின் விளக்குகள் கூட முழுமையாக எரியாத அவலம் தொடர்கிறது. பதவிக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், வாரிசு மிதுன் பழனிசாமியின் அரசியல் நுழைவிற்காகவும் எதையும் செய்யத் துணியும் எடப்பாடி பழனிசாமிக்கு, அம்மாவின் நினைவிடத்தைக் குறித்து கேள்வி கேட்கக்கூட திராணி இல்லாமல் போனது ஏன்? அதிமுக என்ற மாபெரும் ஜனநாயகப் பேரியக்கத்தைத் தனது சொந்த சொத்தாகக் கருதும் எடப்பாடி, தற்போது அடுத்த நாடகமாக ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டும்’ என்று வெற்று முழக்கமிடுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சொந்தப் பணத்தை செலவழித்து கழக நிகழ்ச்சிகளை செய்த கட்சியினரிடம் தேர்தலில் போட்டியிட ஏது பணம்? கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ‘அன்ட்கோ’ கூட்டு போட்டுக்கொண்டு தலைமைப் பீடம் மட்டும்தான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்துள்ளது.அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

தொண்டர்களின் சாபமும்..!
“தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசும்போது மட்டும், ‘சாதாரண கிளைச் செயலாளராக இருந்த நான், இன்று உழைப்பால் பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளேன்’ என்று பெருமை பேசத் தெரிந்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று தன்னைப்போல வேறொரு எளிய தொண்டனோ அல்லது துடிப்பான இளைஞனோ அந்தப் பதவிக்கு வருவதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை. தான் ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல, வேறொருவர் பொதுச்செயலாளராக வருவதற்கு அனைத்து வழிகளிலும் முட்டுக்கட்டை போடுகிறார். தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் தோற்ற பிறகும், கொஞ்சம்கூட மனசாட்சி உறுத்தாமல், பொதுச்செயலாளர் பதவியை விட்டு நகரமாட்டேன் எனக் கூறும் எடப்பாடியை நம்பி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்ய கழகத்தினர் யார் முன்வருவார்கள்? தேர்தலில் போட்டியிட விரும்பும் ஏழைத் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தன் சொந்தப் பெட்டியில் இருந்து நிதி தருவாரா? கட்சிப் பதவியை வெறும் லேபிளாகப் பயன்படுத்தி தொழில் செய்து பெருமளவில் சம்பாதித்தவர்கள், சம்பாதிப்பவர்கள் கூட, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முன்வர மாட்டார்கள் என்பதுதான் கள யதார்த்தம்.

இளைஞர்களுக்கு வழிவிடாமல், இன்னமும் பொதுச்செயலாளர் நாற்காலியில் பசைபோட்டு ஒட்டிக்கொண்டு நகராமல், கே.பி. முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற சுயநல ஜால்ராக்கள் ஓதும் மந்திரத்தைக் கேட்டுக்கொண்டு, அதிமுகவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் எடப்பாடி பழனிசாமியைத் தொண்டர்களின் சாபம் சும்மா விடாது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா மீதான விசுவாசம், கழகத்தின் மீதான ஈர்ப்பு அல்லது மாற்றுக் கட்சியில் இணைவதற்கு வழியில்லாமல் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கழகத்தில் இருக்கிறார்கள்.  உண்மையிலேயே இந்தக் கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், இனியாவது சுயநலத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்து, இயக்கத்தை துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைக்க குரல் கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம்!

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

MUST READ