அதிமுக – பாஜக இடையிலான கூட்டணிக்கு இடையூறாக இருப்பார் என்பதால் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்றும், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்ன வார்த்தைகள் அதனை உறுதி படுத்துவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அதிமுகவில் பலரும் விரும்பவில்லை. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன் போன்றவர்கள் பாஜக கூட்டணியை விரும்பிகிறார்கள். ஆனால் பிற இரண்டாம் கட்ட தலைவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாகும். அதிமுகவை உடைத்தவர்கள் பாஜகவினர். அவர்களை நம்பி இப்போது கூட்டணிக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன? அப்போது அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனரா? என்று விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டது. அப்படி அதிமுகவை உடைத்த பாஜகவே, கட்சியை மீண்டும் இணைத்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார் என்றால் இரு கட்சிகளுக்கும் பலன் கிடையாது.
ஒபிஎஸ்-ஐ இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அந்த மன உறுதியின் விளைவுதான் செங்கோட்டையனுக்கு போனை போட்டு நீங்க வாங்க.. என்று அழைப்பு விடுத்தது. அதிமுக இணைப்புக்கு எடப்பாடி ஒத்துவராததால் அவர்கள் மாற்று நபர் குறித்து யோசிக்கிறார்கள். எடப்பாடி இதை ஒப்புக்கொண்டு செயல்படுத்த ஒத்துழைத்தால், அவர் இதே இடத்தில் இதே கவுரவத்தோடு பதவியோடு தொடர்வார். ஏற்க மறுத்தாலோ, தடையாக இருந்தாலோ அவருக்கு பாஜகவின் மொழியில் தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதுதான் நமக்கு கிடைக்கும் தகவல். அப்போது எடப்பாடிக்கு பதிலாக செங்கோட்டையனை வைத்து ஏதோ செய்யப் போகிறார்களோ என்று தெரிகிறது. என்ன செய்யப் போகிறார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. செங்கோட்டையனின் மௌனமும், வெளிப்படையான இந்த பயணங்களும் அதைதான் உணர்த்துகிறது.
பாஜக செங்கோட்டையனை வைத்து எடப்பாடிக்கு பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கவில்லை. அவர் ஒன்றும் அதிமுகவில் வட்ட செயலாளரோ, கிளை செயலாளரோ கிடையாது. எம்ஜிஆர் ஆல் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டு, அங்கீகாரப்படுத்தப்பட்டு இன்றைக்கும் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களால் மதிக்கப்படுகிற தலைவர்களில் செங்கோட்டையன் பிரதானமானவர் ஆவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் யாரோ ஒரு தனி நபர் அல்ல. இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடிக்கு, யாரை வைத்து பதிலடி கொடுக்கலாம் என்று பார்க்கிறார்கள். அதில் சமுதாய கணக்கும் உள்ளது. தகுதியும் உள்ளது. விசுவாசத்திலும் எடப்பாடிக்கு எந்த வகையிலும் குறைந்தவர் கிடையாது செங்கோட்டையன். இதை எல்லாம் தெரிந்துதான் கணக்கு போட்டுள்ளார்கள். ஆனால் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரிந்தால்தான் நல்ல தேர்வா? அல்லது கெட்ட தேர்வா? என்று ஒரு முடிவுக்கு வர முடியும். எப்படி செய்ய போகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அவற்றை எல்லாம் நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஓபிஎஸ்-ஐ கூப்பிட்டு குருமூர்த்தி மூலம் பாஜக தர்மயுத்தம் இருங்கள் என்று சொன்னதன் பிரதான நோக்கம் என்பது அதிமுகவை உடைப்பதாகும். ஆனால் இன்றைக்கு செங்கோட்டையனை டெல்லிக்கு வரவழைத்து பேசுவது என்பது ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க என்ன செய்யலாம் என்கிற ஆலோசனைக்கு ஆகும். அன்றைக்கு கட்சியை உடைப்பதற்கு ஒபிஎஸ்ஐ பயன்படுத்தினார்கள். இன்றைக்கு கட்சியை ஒற்றுமைப்படுத்த செங்கோட்டையனை பயன்படுத்து கிறார்களோ என்கிற ஒரு வியூகம் இருக்கிறது. எப்படி செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் எடப்பாடி என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டும். அவர் தலைமையில் ஒரு அணி அமைந்தால் அது ஒன்றுபட்ட அதிமுக அல்ல. அவரும் ஒரு வலுவான அணியாகத்தான் இருப்பார். அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பது அதுபோன்று அணிகளாக பிரிவது இல்லை. பிரிந்து கிடக்கும் அணிகளை சேர்க்க தான் அவர்கள் விரும்புகிறார்களே தவிர, இன்னொரு அணி உருவாக வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. அது எடப்பாடியா, செங்கோட்டையனா, தினகரனா என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்கிற புள்ளியில் தான் அவர்கள் பார்க்கிறார்கள்.
எடப்பாடி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தபோது தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்காக சந்தித்து பேசியதாக கூறினார். அடுத்த அரை மணிநேரத்தில் அமித்ஷா ட்வீட் போடுகிறார், தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறது என்று அமித்ஷா பேசுகிறார். அப்படி கூட்டணி பேச்சு நடைபெற வில்லை என்றால் இது குறித்து கே.பி.முனுசாமி பேசவில்லை. தானாக வந்து வீடியோ போடுகிற ஆர்.பி. உதயகுமார் பேசவில்லை. இவர்களை விடுங்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் எடப்பாடி கேட்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர் மவுனமாக இருக்கிறார். அதை வைத்துதான் நான் சொல்கிறேன் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது என்று. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான அமித்ஷாவின் கருத்துக்கள் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நிமிஷம் வரை மவுனம் காக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமித்ஷா வெளிப்படையாக அதிமுக உடன் பேச்சு நடைபெறுகிறது என்று சொல்கிறார். அப்போது யாரிடம் நீங்கள் பேசுகிறீர்கள் என்று எடப்பாடி கேட்க வேண்டும் அல்லவா? எதுக்காக அவர் பதுங்குகிறார்.

செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு எந்த தனி நபராலோ அல்லது ஒரு சிலரால் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று நினைப்பது ஒரு காணமாக இருக்கலாம். தனிநபர் உயிரை பாதுகாப்பதை யாரும் கொச்சைப்படுத்த மாட்டார்கள். மாற்று அரசியல் என்று சொல்லும் விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக கேட்டபோது, அவர் பதில் சொல்லவில்லை. செங்கோட்டையனுக்கு ஏன் கொடுக்கிறார்கள் என்றால்? பாஜகவுக்கு யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களை பாதுகாக்க நினைப்பார்கள்.
அண்ணாமலை டெல்லி பயணம் குறித்து பேசிய அண்ணாமலை, உரிய முறையில் தமிழ்நாட்டு அரசியலை எடுத்துச்சொல்ல வேண்டியது தன்னுடைய கடமை என்றும், அப்போதுதான் சரியான முடிவை டெல்லி தலைமை எடுக்க முடியும் என்று சொன்னார். நான் ஒரு தொண்டனாக இருந்து செயல்படவும் தயார். தனக்கு பின்னால் வருகிறவர்கள் இந்த கட்சியை இதேபோல் வழிநடத்தி செல்லட்டும் என்று, அடுத்து மாற்றுத் தலைவர் வர போகிறார் என்பதையும் மறைமுகமாக சொல்கிறார். எடப்பாடி – அமித்ஷா சந்திப்பின் போதே கூட்டணி உடைவதற்கு காரணமாக இருந்த அண்ணாமலை மீண்டும் கட்சித் தலைவராக தொடரப் போகிறார் என்று செய்தி வருகிறபோது. எப்படி அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று எடப்பாடி மற்றும் அவருடன் சென்றவர்கள் அமித்ஷாவிடம் முன்வைத்திருக்கலாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கலாம். அப்போது அண்ணாமலையை கூப்பிட்டு எடப்பாடி கூட்டணிக்கு சம்மதிக்கிறார். நீங்கள் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்குமே. அதனால் மாற்றிவிட்டு என்று கூட அமித்ஷா சொல்லி இருக்கலாம்.

ஏனென்றால் நிஜமாகவே மாற்றம் வர வேண்டிய நேரம் தற்போது வந்திருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இனிமேல்தான் தொடங்க உள்ளது. அண்ணாமலை வேட்புனு தாக்கல் செய்யலாமா வேண்டாமா? என முடிவெடுக்கும் அதிகாரம் உண்மையில் அமித்ஷா, மோடியிடம் தான் உள்ளது. கட்சி தலைவர் யாரோ ஒருவர் என்றாலும் முடிவு எடுப்பவர்கள் இவர்கள்தான். அப்போது கூப்பிட்டு சில கருத்துக்களை சொல்லி இருக்கலாம். அண்ணாமலையின் விரக்தி கலந்த வார்த்தைகளை பார்த்தால், கொஞ்சம் ஒதுங்கி இருங்கள். உங்களுக்கு வேறு அசைன்மெண்ட் தருகிறோம் என்று கூட சொல்லி இருக்கலாம். ஏனென்றால் அண்ணாமலை வெளிப்படையாகவே சில வார்த்தைகளை விட்டுவிட்டார். நான் தொண்டனாக இருந்து செயல்படவும் தயாராகிவிட்டேன். கட்சியின் நலன்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார். நயினார் நாகேந்திரனும் டெல்லியில்தான் இருப்பதாக சொல்கிறார்கள். அண்ணாமலையுனுடைய சந்திப்பில் எடப்பாடியின் சந்திப்பில் தொடர்புடைய விஷயமும் அடங்கி இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.