விஜய்க்கு கூட்டணி அமைக்க வேண்டிய தேவை இருக்கும் நிலையில், பலம்வாய்ந்த அரசியல் தலைவர்களான ஓபிஎஸ், தினகரன் உடன் அவர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், அவர்களால் புறக்கணிக்கப்படும் டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜயுடன் கூட்டணி செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதாவது :- அதிமுகவின் செல்வாக்கு சிதறி கிடக்கிறது. அந்த கட்சியில் வாக்கு வங்கி கிடையாது. செல்வாக்குதான். திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து, எம்ஜிஆர் உடன் பயணித்து, ஜெயலலிதா உடன் பயணித்து, எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை எல்லாம் சந்தித்து வலிமையாக இருக்கக்கூடிய ஒரு கட்சி, இன்றைக்கு எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா என்று 4 ஆக பிரிந்து கிடக்கிறது.
அதற்கு சாட்சி என்பது, ஜெயலலிதா 2016ல் பொதுச் செயலாளராக இருந்தபோது அதிமுக பெற்றது 42 சதவீதம் வாக்குகள். அது 2021ல் 33 சதவீதம் வாக்குகளை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் 28 சதவீதம், கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 23 சதவீதம் என்று சரிந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில் அந்த செல்வாக்கு கட்சியில் இருந்து பிரிந்த மற்றவர்களுக்கு போகிறது. 2019 மக்களவை தேர்தலில் அமமுக முதன்முறையாக போட்டியிட்டு 22 லட்சம் வாக்குகளை பெற்றது. ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் வாங்கிய ஓட்டு யாருடையது? எனவே அதிமுக செல்வாக்கு வேறு கட்சிக்கு போகவில்லை. அதேவேளையில் கட்சியில் நடைபெறும் பிரச்சினையால் வெளியேற்றப் பட்டவர்களையும் அந்த செல்வாக்கு கைவிட தயாராகவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஒரு பலமான தலைவர் என்று அந்த கட்சி நம்பிக் கொண்டிருந்தால், அது பெரும் பலவீனமாகும். இவ்வளவு பெரிய சரிவுக்கு பிறகும், இவ்வளவு பேர் நீக்கப்பட்ட பிறகும் அவற்றை பார்த்து கட்சியில் இருந்து போனவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும். ஆனால் அதை விடுத்து கூட்டணியால் அதிமுக பலம்பெரும் என்று சொன்னால், அது தவறாகும். தென் மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் உள்ள அதிமுக தலைவர்கள் மீது, மக்களுக்கு பற்று இருக்கவே செய்யும். ஆனால் அது குறிப்பிட்ட சமுதாய பற்று கிடையாது. சிதறி கிடக்கும் அதிமுகவின் செல்வாக்கை கூட்டாமல் எடப்பாடி பழனிசாமி, ஒரு வியூகமாக கூட்டணி வைத்து பலப்படுத்தலாம் என்று நினைக்கிறார். ஆனால் அது நடக்கப்போவது இல்லை. ஆனால் அவர் சொல்வது போல மெகா கூட்டணி நிச்சயமாக அமையாது. அதற்கு காரணம், அப்படி மெகா கூட்டணி அமைக்க அதிமுக பலமானதாக இருக்க வேண்டும்.
அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்டமான கட்சி வரும் என்று சொன்னார். வெளிப்படையாகவே நாங்கள் விஜயை எதிர்பார்த்தோம் என்று சொல்ல வேண்டியது தானே. தவெக உடன் பின்வாசல் வழியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதை வெளிப்படையாக செல்ல வேண்டியது தானே. அவர்களும் ஒரு மதச்சார்பற்ற கட்சிதானே. ஏன் சொல்லவில்லை. அதற்கு காரணம் பிரம்மாண்ட கூட்டணி என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு அதிமுகவினர் ஒன்றும் அரசியல் அறிவு அற்றவர்கள் அல்ல. அப்போது எடப்பாடி பழனிசாமி செல்கிற பாதை என்பது, அதிமுகவை மீண்டும் முதன்மையான இடத்திற்கு கொண்டுவருவதற்கான அளவுக்கு இல்லை. அவர்களுடைய கூட்டணி வியூகத்தில் உள்ள பெரிய தவறு என்ன என்றால்? மக்களை மறந்துவிடுகிறார்கள். ஆனால் மக்களையும் வைத்துக்கொண்டு வியூகங்களை வகுத்தால் அப்போது வெறறி பெறலாம். அதற்கான சாத்தியம் உள்ளது. உங்களுடைய பலத்தை நீங்கள் வெளியில் துரத்திவிட்டு, அதற்கு பிறகு என்னை நிலைநிறுத்திக்கொள்வேன். அதற்கு பிறகு நீங்க எல்லாம் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அந்த அளவுக்கு மாஸ் செல்வாக்கு படைத்த பெரிய தலைவர் கிடையாது.
எடப்பாடி பழினிசாமி, தான் 118 தொகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விட்டதாகவும், அதில் 100 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். தொண்டர்கள் சிறப்பாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொல்லியுள்ளார். இது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக சொல்லப்பட்டது தான். முதலில் மக்களையும், தொண்டர்களையும், அவர்களின் அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக என்கிற கட்சி தமிழ்நாடு நலம் சார்ந்து போராடுகிற ஒரு கட்சியாகும். அந்த கட்சி பலவீனப்படுகிறபோது, அந்த இடத்தை யார் பிடிப்பார் என்கிற பயம் எங்களுக்கு உள்ளது. அதிமுகவினருடைய கவலை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது. ஆனால், எங்களுடைய கவலை என்பது தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி வந்துவிட்டது என்றால், கல்வித்துறை யாருக்கு போகும். பாஜக பள்ளிக்கல்வியை எடுத்துக் கொண்டால் மனுஸ்மிருதியை கொண்டுவந்து வைப்பார்கள் என்பதுதான்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் விஜயுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து செல்வார்கள் என்கிற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக பொருத்தவரை அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும் அதிமுக தான். வெறும் சின்னத்தை மட்டும் வைத்து பார்க்கிற அளவுக்கு அரசியல் புரிதல் இல்லாதவர்கள் அல்ல அதிமுக தொண்டர்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜயை புகழ்ந்து பேசுவதற்கு காரணம், பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்த தான். விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்வது தங்களுக்கு வேறு கூட்டணி வாய்ப்புகளும் உள்ளன என்று பாஜகவை எச்சரிக்க தான்.
தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் விஜய் குறித்து பேசியபோது இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்வார்களா என கேள்வி வந்ததல்லவா? ஏன் விஜயுடன் சசிகலாவும் சேர்ந்து, 4 பேராக கூட சேரலாம். இன்றைக்கு விஜய்க்கு கூட்டணி என்பது தேவையாகும். 22 லட்சம் வாக்குகளை பெற்றவர் தினகரன். ஓபிஎஸ் தென் மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் என்று நிருபித்தவர். இதற்கிடையே, சசிகலா என்பவர் ஒரு பெரிய ஆற்றல்தான் என்று அரசியல் புரிந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது ஏன் எல்லோரும் ஒன்றாக சேர மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.