அதிருப்தியில் உள்ள அதிமுகவினருக்கு சீட் கொடுத்தால் அவர்கள் திமுவுக்கு வந்து விடுவார்கள். அப்போது ஸ்டாலின் சொல்வது போல 200 இடங்களில் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகியது குறித்தும், பாஜகவுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-அன்வர் ராஜா கொள்கை ரீதியாக எடப்பாடி பழனிசாமியின் முடிவை ஏற்றுக்கொள்ள வில்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் முடிவில் தான் பயணம் செய்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக காரணம் என ஜெயலலிதா நம்பினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க சோ கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. 2014 சட்டமன்றத் தேர்தலிலும் அவர் பாஜக உடன் கூட்டணி அமைக்கவில்லை. பாஜக உடன் கூட்டணிக்கு செல்லாததால் கணிசமான அளவு சிறுபான்மையினர் வாக்குகள் அவர்களுக்கு சென்றது. 2021 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்கு சென்றதால் தான் நான் தோல்வி அடைந்தேன் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி, இனி எந்த காலத்திலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொன்னார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாறுகிறார். இதனை அன்வர் ராஜா போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திராவிட இயக்க கொள்கையை கொண்ட அன்வர் ராஜா, சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார்.
2021ல் அதிமுக, பாஜக கூட்டணிக்கு சென்றபோது இரட்டை தலைமை இருந்தது. ஓபிஎஸ்தான் பாஜக கூட்டணி வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பின்னர் கூட்டணியில் இருந்து வெளியேறி, இனி பாஜக உடன் கூட்டணியே கிடையாது என்ற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்தார். பின்னர் அந்த நிலைப்பாட்டில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி மாறுகிறார். ஓபிஎஸ் நீக்கத்தால் தென் மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கை இழந்துள்ளது. மதுரையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்வதற்கு சவுராஷ்ட்டிரா வாக்குகள், அண்ணாமலை போன்ற பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் ஓபிஎஸ் நீக்கம் தான் அதற்கு பிரதான காரணமாக பார்க்கிறேன். சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று தலைவர்களையும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக வீழ்த்தியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பட்ட உடன் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு மிக்க முக்குலத்தோர் சமுதாயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போய்விட்டார்கள். அந்த எதிர்ப்பு 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாக செல்லும்பட்சத்திலும், முக்குலத்தோர் சமுதாயத்தினர் எடப்பாடிக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள். இத்தகைய சூழல்களை எல்லாம் பார்த்து அன்வர் ராஜா, அரசியல் எதிர்காலமும் இல்லை. இஸ்லாமியர்களிடம் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கொள்கையிலும் மாறி போய்விட்டார். 2021ல் கூட தேர்தலில் வெற்றி பெற்றிடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். 2026ல் செல்வாக்கும் போய்விட்டது. கொள்கையும் இல்லை என்கிறபோது அன்வர் ராஜா இப்படி ஒரு முடிவை எடுக்கிறார். ஓபிஎஸ், எதிர்வரும் நாட்களில் அதிமுக மீட்புக்குழுவில் தனக்கு உள்ள செல்வாக்கை காட்டுவார். அந்த செல்வாக்கை மையமாக வைத்து, 2026ல் பிளேயராக இருப்பார். ஓபிஎஸ்க்கு 2026 தேர்தல் தான் கடைசி வாயப்பு. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்துவார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியான உடன் ஓபிஎஸ் இங்கே முதலமைச்சர் ஆகினார். அப்படிபட்ட வாய்ப்பு கிடைக்க வேண்டிய கடைசி கட்டத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அவர் யாரை நம்பியும் இல்லை. தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வேலைகளை வரும் நாட்களில் ஓபிஎஸ் செய்வார்.
ஓபிஎஸ், தினகரன், பன்னீர்செல்வம் போன்றவர்களை ஒருபோதும் கட்சிக்குள் விட மாட்டார்கள். ஏனென்றால் தங்களைவிட பெரியவர்களை கட்சிக்குள் விட்டால், மீண்டும் அவர்கள் கட்சியை கைப்பற்றி விடுவார்கள் என்று பயம் இருக்கும். நாளைக்கு தேர்தலில் தோற்றால் தம்பிதுரை அல்லது பன்னீர்செல்வத்தை தலைவராக ஆக்க பார்ப்பார்கள். வரும் தேர்தலில் செங்கோட்டையனுக்கு இடம் கிடைக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணிக்கு வந்ததே இரண்டாவது இடத்தை காப்பாற்றுவதற்காக தான். 2021 தேர்தலில் பாஜக கூட்டணியால் தான் தோற்றோம் என்று ஜெயக்குமார், முனுசாமி போன்றவர்கள் பேசினார்கள். அப்படி இருக்கும்போது 2வது இடத்தை தக்க வைக்கதான், பாஜக உடன் கூட்டணி வைக்கிறார்கள். அண்ணாமலை, சீமான் தலைமையில் ஒரு அணியை உருவாக்க முயற்சித்ததால் வேறு வழியில்லாமல், எடப்பாடி பாஜவின் கூட்டணிக்குள் வந்தார். தற்போது அவருக்கு இரண்டாவது இடம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2026 தேர்தலில் செங்கோட்டையனுக்கு சீட் தராவிட்டால் அவர் ஸ்டாலினிடம் போக வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் பலர் சொந்த பலம் மற்றும் பணம் பலம் காரணமாக வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் அதிமுககாரர்களான செந்தில் பாலாஜி, சேகர்பாபு போன்றவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை கூட்டி வருவார்கள்.
அதிமுகவில் சீட் கிடைக்காமல் உள்ளவர்களுக்கு, அதிருப்தியாளர்களுக்கு சீட் கொடுப்பதாக அறிவித்தால், அவர்கள் திமுகவுக்கு வந்துவிடுவார்கள். இதனால் ஸ்டாலின் சொல்வது போல திமுக 200 இடங்களில் வெற்றி பெறும். திமுக 45 சதவீத வாக்குகளுக்கு மேலாக எடுப்பார்கள். இதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களுக்கு அறிக்கையாக கொடுத்திருக்கிறேன். பல முனை போட்டியாக சென்றால் திமுகவுக்கு வெற்றியை கொடுக்கும். எத்தனை சீட்டுகள் வரும் என்பது கூட்டணி அமைவதை பொறுத்தது. ஆனால் வாக்கு சதவீதம் 45க்கு மேல் வரும். இது கடந்த 1957, 1962-ல் காமராஜர் பெற்ற வாக்கு சதவீதமாகும். 2021ல் ஸ்டாலின் பெற்ற வாக்குகளாகும். மற்ற அணிகள் பிரிந்தால் சீட் கன்வர்ஷன் அதிகமாகும். கடந்த மக்களவை தேர்தலில் 48 சதவீத வாக்குகள், 35 சீட்டுகளை ஸ்டாலின் வெல்வார் என்று சொன்னேன். 4 இடங்களில்தான் போட்டி என்று சொன்னேன். ஸ்டாலின் 47 சதவீத வாக்குகளும், 39 சீட்டுகளும் வென்றார். எனவே சீட்டுகள் எவ்வளவு வரும் என்பது தெரியவில்லை. வாக்குகள் 45 சதவீத வாக்குகள் என்கிறபோது ஆட்சியை பிடித்துவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.