பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது வரவேற்க தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை தொடக்கம் முதலே விசாரித்து நீதியை நிலைநாட்ட துணை நின்ற நக்கீரன் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்தது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுதான். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். மொத்தம் 275 பெண்கள் பாதிக்கப்பட்டதாக சொல்வார்கள். 1,100 வீடியோக்கள். இந்த வீடியோக்களை டிபி கணக்கில் வைத்திருந்தார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பெல்டால் அடிக்காதிங்க அண்ணா என்று சொல்வார். அப்படி அவரை பெல்டால் அடித்தபோது அந்த பெண்ணுக்கு வலிப்பு வந்துவிட்டது. விதவை தாய், ஒரு தம்பி. அந்த கும்பத்தை காப்பாற்றுகிற பெண் அவர். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அந்த பெண்ணை எப்படி மயக்குகிறார்கள் என்றால்? ஒரு கல்யாணத்திற்கு மேக்அப் போட வேண்டும் என்று அழைக்கிறார்கள். சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மேக்அப் ஆர்டர் இருப்பதாக கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு வலிப்பு வந்து மயங்கி விழுகிறபோதுதான் அடிக்காதிங்க அண்ணா என்று சொல்கிறது. தப்பித்து பக்கத்து வீட்டிற்குள் புகுந்துள்ளது. அவர்கள் காரில் ஏற்றிச்சென்று அந்த பெண்ணுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து, மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நான் அந்த பெண்ணை சென்று பார்த்தபோது, கதறல்தான் இருந்தது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக்குழுகள் மூலம் இணைக்கப்பட்டு கடன் பெற்றவர்கள் ஆவர். அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்ளிட்ட அனைவரும் பெரிய அளவிலான பைனான்சியர்கள் ஆவர். கடன் வாங்கிவிட்டு கட்டாமல் போகும் குடும்பங்களில் ஒரு பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்வது. பின்னர் அதை வீடியோ எடுத்து வந்துள்ளனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அப்படி ஒரு பெண்ணை தூக்கிச் செல்கிறபோது அவரின் அண்ணன், இவர்களை பிடித்துவிடுகிறார். வால்பாறை பக்கத்தில் ஒரு பங்களாவில் வைத்து அவர்களை அடிக்கிறார். அப்போது, அவர்களின் செல்போன்களை எடுத்து பார்க்கிறபோது பல பெண்களின் வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மூலமாக தான் இந்த விவகாரம் வெளியே வருகிறது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண்ணை கடத்திச்சென்று செயினை அறுத்துவிட்டார்கள் என்பதுதான் புகார். இதில் சின்ன பெண்கள் உள்ளனர். வயது முதிர்ந்த பெண்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரையும் சபரிராஜனின் பங்களாவுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இப்படி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த அனைத்து விவகாரங்களிலும் தொடர்புடையவர்கள் பார் நாகராஜன், அதிமுக நிர்வாகி அருளானந்தம் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லாம் ஒரு கேங்காக செயல்பட்டுள்ளனர். இவர்கள் பெண்களை, அப்போதைய அதிமுக சேர்மேனாக இருந்த கிருஷ்ணகுமார் என்பரிடம் அனுப்புவதாக அருளானந்தம் சொல்கிறார். கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர் ஆவார். இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் என்பவரது பெயர்தான் பெரிய அளவில் அடிப்பட்டது. பிரவீன், கல்லூரி படிக்கிறபோது சுரேகா என்கிற மாணவியை காரில் அழைத்துச்செல்கிறபோது அவர் காரில் இருந்து குதிக்கிறார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். நான் அந்த பெண்ணின் வீட்டை தேடிச் சென்றபோது அவர்கள் வேண்டாம் விட்டு விடுங்கள் என்கிறார்கள். அதன் பிறகு பிரவீரன், பெங்களுருவில் உள்ள சட்டக்கல்லூரிக்கு மாற்றப்படுகிறார். இவர் அடிக்கடி பொள்ளாச்சி வந்துவிட்டு போகிறார். இந்த கேங்கின் தலைவர் பிரவீன்தான். பாலியல் வன்புணர்வை வீடியோ எடுத்து மேலே இருக்கும் ஒருவருக்கு அனுப்புகிறார்கள். இதில் எந்த பெண் ஓகே என்று அவர் முடிவு செய்வார். வால்பாறையில் உள்ள பங்களாவில் வைத்து அந்த பெண்களை, விவிஐபிகள் அனுபவிப்பார்கள்.
இந்த செலக்ஷன் பிராசஸ்-க்காக பலியான சுயஉதவிக்குழுவில் கடன் பெறும் பெண்கள். அனைவரும் ஏழைப்பெண்கள். அவர்கள் அனைவருடைய கண்ணீரும் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. மற்ற எந்த பாலியல் வழக்குகளிலும் இல்லாத விஷயம் பொள்ளாச்சி வழக்கில் உள்ளது என்றால் அது வீடியோ பதிவு செய்ததுதான். இது முழுக்க முழுக்க மின்னணு ஆதாரங்கள் மூலமாக தான் நிருபிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல் புகார் அளிக்கப்பட்டு, வீடியோக்கள் வந்த உடன், பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன். இவர் எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமான வழக்கறிஞர் ஆவார். அதிமுக நிர்வாகி அருளானந்தமும், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜனின் திருமண நிகழ்வுக்கு, எடப்பாடி, ஓபிஎஸ், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 5 அதிமுக அமைச்சர்கள் வந்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளிலும் கிருஷ்ணகுமார், அருளானந்தம் கும்பல்தான் தலையிடும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை இவ்வளவு நாட்களாக நடைபெற்றதற்கு காரணம், இந்த வழக்கின் பெரும்பான்மை விசாரணைகள் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஜெயராமன் சென்று நிர்மலா சீதராமனின் கால்களிலேயே விழுந்துவிட்டார். சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் எந்த இடத்திலும் பிரவீன் பெயர் வரவில்லை. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பிரவீனுக்கு தொடர்பு இல்லை என்று ஒரு உத்தரவை வாங்குகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏஎஸ்பி பாண்டியராஜன் என்பவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்தார். தற்போது கொளத்தூரில் டி.சி.ஆக உள்ளார். வால்பாறை செல்லும் வழியில் உள் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆக இருந்தவர் தான் பெண்களை எல்லாம், கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை செய்துள்ளார். போலீசார், சேர்மன் கிருஷ்ணகுமார் போன்றோரின் துணையுடன் இந்த விவகாரம் நடைபெற்றது. இந்த வழக்கு என்பது தொடர்புடைய பாலியல் விவகாரம் ஆகும். இதில் ஏதோ சின்ன பசங்க காம வெறியில் செய்கிறார்கள் என்றால்? ஒருவர் அல்லது 2 பேரை செய்வார்கள். 275 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் நீதி கிடைத்ததில் நக்கீரன் இதழின் பங்கு என்ன என்றால்? நக்கீரன்தான் முதலில் அந்த பெண் அழுகிற வீடியோவை வெளியிட்டது. அந்த சமயத்தில் வழக்கு பெரிய அளவுக்கு நகரவில்லை. வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ், கிருஷ்ணகுமார் போன்றவர்கள் யார் என்றும், பொள்ளாச்சி ஜெயராமனின் நெட்வொர்க் என்ன? இந்த விவகாரத்தில் அவர் அந்த அளவுக்கு தொடர்பு உள்ளது. பெண்களை இவர்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள். வட்டிக்கு விடுகிற தொழில், அப்படி வட்டி கொடுக்காத பெண்களை இவர்கள் எப்படி மாளிகைக்கு அழைத்து வருகிறார்கள். காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள். காவல்துறை எப்படி இதற்கு சப்போர்ட் செய்கிறது என்று ஒவ்வொரு கட்டத்தையும் பெரிதாக எக்ஸ்போஸ் செய்கிறபோது தான், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுகிறார்கள். அப்படி சிபிசிஐடிக்கு மாற்றியும், வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று நக்கீரன் வெளிப்படுத்துகிறது. நான் 3 மாதங்கள் பொள்ளாச்சியில் தங்கியிருந்தேன். கோவை மாவட்ட நக்கீரன் நிருபராக இருந்த அருள் என்பவர்தான் முதலில் பெண் அழுகிற வீடியோ வெளிவரக் காரணமாகும்.
என்னை பொருத்தவரை சிபிஐயின் குற்றப்பத்திரிகை தவறானது ஆகும். இந்த வழக்கில் நிறைய திமிங்கலங்கள், சுறாக்கள் எல்லாம் தப்பியுள்ளார்கள். அதற்கு காரணம் சிபிசிஐடி வழக்கு விசாரணையை தீவிரமாக பாலோ செய்கிறபோது, உஷாராக எடப்பாடி பழனிசாமி அதை சிபிஐக்கு மாற்றுகிறார். சிபிஐ விசாரணை என்று வருகிறபோது, அது ரசியமாக வைக்கப்படும். இதில் நல்ல விஷயம் என்ன என்றால் அன்றைக்கு பெல்டால் அடிப்பட்ட பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவ்வளவு விவரங்களை தெரிந்தும், அந்த பெண்ணை காதலன் திருமணம் செய்துகொண்டார். மொத்தம் 8 பெண்களை தான் சிபிஐ ஆல் பிடிக்க முடிந்தது. அவர்களுக்கான பாதுகாப்பை திமுக அரசுதான் செய்து கொடுத்தது. அதிமுக அரசாக இருந்திருந்தால் அது நடந்திருக்காது. காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் எங்களை விசாரிக்க விடவில்லை. அவர் எப்படி முதல்வரின் தொகுதியில் டி.சிஆக இருக்கிறார் தெரியவில்லை. அது மட்டுமின்றி அதிமுக ஆட்சி. பொள்ளாச்சி ஜெயராமன் அந்த ஊரின் அறிவிக்கப்படாத மன்னர். அவரை எதிர்த்து நாங்கள் போகிறோம். அங்கு மக்கள் நீதிமய்யம் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் உதவினார். அவர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டுபிடித்து செல்வதற்குள், வீரப்பன் காட்டிற்குள் செல்வது போன்று தான் இருந்தது. இதுபோன்று பல உள்ளது. அந்த வலியை அனுபவித்தால்தான் தெரியும். நக்கீரன் கோபாலை பல முறை அழைத்து விசாரித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு முக்கியமானது பொள்ளாச்சி சம்பவம். அதற்கு முந்தைய எம்.பி. தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் காலியாகியது. பெண்களின் வாக்கு முழுமையாக திமுகவுக்கு விழுந்ததற்கு காரணம் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்தான். 2021 சட்டமன்றத்தேர்தலிலும் முக்கிய பங்கு வகித்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முழுமையான நீதி கிடைக்கவில்லை. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சிபிஐ-யால் காப்பாற்றப்பட்டுள்ளான். அதிமுகவினரை காப்பாற்றுவதற்காக தான் சிபிஐக்கு வழக்கு கொடுக்கப்பட்டது. அருளானந்தம் என்பவர் ஒரு சாதாரண அதிமுக நிர்வாகி. பொள்ளாச்சி ஜெயராமனின் மீது இந்த குற்றச்சாட்டு உள்ளது என்று அதிமுகவில் இருக்கும் சாதாரண தொண்டன் வரை தெரியும். நமக்கே பலர் சோர்சாக மாறினார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் நக்கீரனின் இடைவிடாத போராட்டத்திற்கு காரணம் ஆசிரியர் நக்கீரன் கோபால்தான். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த வன்முறைக்கு எதிராக அவருக்கு ஏற்பட்ட கோபம் தான், இன்றைக்கு இந்த வழக்கு ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.