பீகார் மாநிலத்தில் பாஜக – ஜேடியு கூட்டணி தோல்வியை நோக்கி செல்கிறது என்பதால் தான் அவர்கள் SIR நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி நடத்திவரும் யாத்திரை மற்றும் பிரதமர் மோடியின் பிரிவினையை ஏற்படுத்தும் விதமான பரப்புரை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முன்பு வாக்கு திருட்டு தொடர்பாக ஒரு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகளை தான் நான் வெளியிட்டிருந்தேன். இன்னும் 6 மாதத்தில் ஒட்டு மொத்த நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்ற வாக்கு திருட்டு பற்றியும், அதற்கு பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்ற மோசடிகள் குறித்த விவரங்களையும் வெளியிடப் போகிறேன், என்று சொல்கிறார். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை நேரடியாக எதிர்கொள்வதற்கு பாஜகவுக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ திராணி இல்லை. ஒரு தொகுதி என்று இல்லை. நாடு முழுவதும் தேர்தல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிற போது, தேர்தல் தோல்விக்கு மோடி – அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும். சந்திரபாபு நாயுடு எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார். அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆந்திராவுக்கான சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படவில்லை. பெரிய அளவிலான மனவருத்தத்தில் அவர் இருக்கிறார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன. பவன் கல்யாணை வளர்த்துவிட்டு, சந்திரபாபு கட்சியை கரைக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக அனைத்து பத்திரிகைகளும் எழுதுகின்றன. அப்போது இன்றைய தேதிக்கு பாஜக என்பது 240 எம்.பிக்களை கொண்ட ஒரு கட்சி. பாஜக அரசு மைனாரிட்டி அரசு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
பீகார் மாநிலத்தில் தோல்வி உறுதி என்கிற நிலையில், பிரதமர் மோடி பிரிவினைவாத அரசியலை கையில் எடுத்து இருக்கிறார். இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஊடுருவல்காரர்கள் என்று பிரித்து பார்க்கிற தன்மை கொண்ட பிரச்சாரத்தை அவர் பீகாரில் மேற்கொண்டிருக்கிறார். தோல்வி பயம் காரணமாகவே தன்னுடைய பதவியின் மாண்பை மறந்து பேசுகிறார். அவர் எல்லோருக்குமான முதலமைச்சர் தான். மெஜாரிட்டி இல்லாத தேவ கவுடா, குஜரால், சந்திரசேகர் போன்ற பிரதமர்கள் கூட அனைவருக்குமான பிரமராக தான் இருந்தார்கள். இந்து – முஸ்லிம் இடையே பிரிவினை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து உள்ளது. அதை மேலும் மேலும் உரம்போட்டு வளர்ப்பது பாஜக. அதற்கு தூண்டுதல் கொடுப்பது மோடியும், அமித் ஷாவும் தான். அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் ஆலோசகர் உக்ரைன் போர் என்பது மோடியின் யுத்தம் என்று சொல்கிறார். இன்றைக்கு ரஷ்யா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருமானம், பணச்சலவை செய்யப்படுவதற்கு சமம் என்கிறார். இதன் மூலம் இரண்டு, மூன்று தனியார் நிறுவனங்கள் தான் பயன்பெறுகின்றன. ஆனால் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். இது மோடியின் தவறுதானே. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் தொடர்ச்சியாக தவறுகளை தான் செய்து வருகிறார்.
ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை. அவருடைய முதலாவது செய்தியாளர் சந்திப்பு என்பது ஒரு பிரசென்டேஷன். அதில் தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பீகாருக்கு சென்று அதைதான் சொன்னார். அப்போது பாஜக தரப்பில், தமிழ்நாட்டில் இருந்து பீகாரிகளை விரட்டி அடிக்கிறார்கள். இவர்கள் இந்திக்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டினார்கள். திமுக இந்திக்கு எதிரான கட்சி அல்ல. இந்தி ஆதிக்கத்துக்கு தான் எதிரானது. தமிழ்நாட்டில் இன்றைக்கும் இந்தி பிரச்சார சபா செயல்பட்டு வருகிறது.
பாஜகவினர் தங்களை நம்பி வந்தவர்களை கைவிட்டதில்லை என்று சொல்கிறார்கள். மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த ஷிண்டே, இன்றைக்கு துணை முதல்வர் ஆகிவிட்டார். முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் இன்றைக்கு கட்சியை விட்டே நீக்கி விட்டார்கள். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு என்ன? பாஜகவை நம்பி சென்று நான் கஷ்டப்படுகிறேன் என்பதுதான் அவருடைய குற்றச்சாட்டு. பாஜக எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்த கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அந்த மாநில அரசியலுக்குள் தாங்கள் வந்துவிடுவது. பொதுவாக தேசிய கட்சிகள் இதை கைக்கொள்ளும். ஆனால், இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு கிடையாது. மாநில கட்சிகள்தான். ஆனால், அதிமுக அந்த வலையில் தெரியாமல் சென்று மாட்டியுள்ளது. அல்லது தெரிந்தே மாட்டியுள்ளார்கள் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு கேம் பிளான் இருக்கும்.
நிர்மலா சீதாராமன், மூப்பனார் பிரதமராவதை தடுத்தது யார் என்று உங்களுக்கே தெரியும் என்று கலைஞரை மனதில் வைத்து சொல்கிறார். ஆனால் பச்சை பொய். 1996 கால கட்டம் என்பது எங்களுக்கு தெரியும். பாஜக அரசு வாஜ்பாய் தலைமையில் 13 நாட்கள் இருந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் வாஜ்பாய்தான் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ். யார் பிரதமர் வேட்பாளர் என்று வருகிறபோது மூப்பனார் விரும்பவில்லை. கலைஞர், மூப்பனார் பெயரை முன்மொழிந்தார். இரண்டு முறையும் மூப்பனார் பிரதமர் பதவியை விரும்பவில்லை. அப்படி மூப்பனார் பிரதமர் ஆவதை கலைஞர் தடுத்தார் என்றால்? எதற்காக 1998ல் திமுக உடன் மூப்பனார் கூட்டணி வைத்தார்? எல்லோரும் பொய் சொல்கிறார்கள். சராசரி அரசியல்வாதி பொய் சொல்வது போல நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் பொய் சொன்னால் நாடு தாங்குமா? அது வாக்காளர் பட்டியல் திருத்தமாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளுர் அரசியலாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிலும் பொய் சொல்வது என்கிற நிலையை நோக்கி இந்த நாடு போய்விட்டது.
இந்தியா டுடே – சீஓட்டர் கருத்துக்கணிப்பின் முடிவுகள் என்பது தேசிய அளவில் சர்வே எடுத்து, அதை மாநில அளவில் பிரிக்கிறார்கள். அப்போது, மாநில அரசியலுக்கு அது மாறுபடும். மாநில அரசியலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. பீகாரில் பாஜக வேட்பாளர் நிறுத்துகிற அனைத்து வேட்பாளர்களும் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். பீகாரில் பாஜக வெற்றிபெறும் என்று தெரிந்து இருந்தால் அவர்கள் SIR நடவடிக்கையே எடுத்திருக்க மாட்டார்கள். ஏன் அவர்கள் இவ்வளவு பெரிய சர்ச்சையில் போய் சிக்கி, நீதிமன்றத்தில் போய் நிற்க வேண்டும். பாஜக நடத்திய உட்கட்சி சர்வேயில் பீகாரில் தோல்வியை நோக்கி செல்கிறோம் என்று தான் வந்திருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் அவர்கள் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார்கள். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக SIR நடவடிக்கையே எடுத்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. SIR நடவடிக்கையே எடுப்பதாக இருந்தால் ஒரு தொகுதியிலோ, அல்லது ஒரு சில தொகுதிகளிலோ தான் செய்ய முடியும். SIR என்பது குறைந்தபட்சம் 6 மாத காலம் ஆகும். அப்போது எதிர்க்கட்சிகள் இதில் சந்தேகப்படுவது நியாயமானதுதான். சந்தேகத்தை நிவர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.