தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக – தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த மோசடிகள் தொடர்பாக ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிகையாளர் சுபேர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்ட்டிராவில் 30 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. அதன் பிறகு 6 மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. இந்த இடைப்பட்ட 5 மாத காலத்தில் 50 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல் கர்நாடக மாநிலம் தேவபுரா என்கிற தொகுதியில், 1.2 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சில வாக்காளர்களின் மாதிரிகளையும் வெளியிட்டுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில் மட்டும் 80 பேர் ஒன்றாக சேர்ந்து வாக்களித்து உள்ளனர். அதற்குரிய சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துள்ளது. ஒரே நபர், பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்திருக்கும் விபரங்களை தரவுகளுடன் சொல்கிறார். யார் யாருக்கு பல்வேறு இடங்களில் வாக்குரிமை உள்ளது என்கிற விபரத்தையும் ராகுல்காந்தி தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் விளக்கி உள்ளார்.
ராகுல்காந்தி, குறிப்பிட்ட ஒரு குழு அனைத்து மாநிலங்களிலும் வாக்களித்து உள்ளனர் என்று சொல்கிறார். குறிப்பாக எந்த எந்த இடங்களில் பாஜக பலவீனமாக இருக்கிறதோ, அந்த அந்த இடங்களில் அந்த குழுவினர் சென்று வாக்களித்து இருப்பதாக சொல்கிறார். ஒரே முகவரியில், ஒரே பெயரில் 30 முதல் 40 பேர் வரை உள்ளனர். சில தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் தரவுகளுடன் பவர்பாய்ண்ட் போட்டு ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
ராகுல்காந்தி கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக பத்திரிகையாளர்களிடம், தேர்தல் முறைகேடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதற்கு பிறகு தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ராகுல்காந்தியின் செய்தியாளர் சந்திப்பின் மூலமாக ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் பாஜகவின் கைகளில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலமாக மோசடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பாஜக தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்றால்? எங்கெங்கு பாஜகவுக்கு அவசரத் தேவைகள் உள்ளதோ, அங்கு மட்டுமே இதனை பயன்படுத்துகிறார்கள்.
பாஜகவினர் மோசடியில் ஈடுபட்ட இடங்கள் என்பது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்களிலும், கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலிலும் மோசடியில் ஈடுபட்டனர். எந்த மாநிலத்திற்கு என்ன தேவை உள்ளதோ, அந்த வழியை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு 5 மாத காலமே இருந்ததால் அவசரத்தில் பாஜக சில ஆதாரங்களை விட்டுவிட்டது. அதனை தான் ராகுல்காந்தி வெளிப்படுத்தி உள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவாக வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகு அந்த இடங்களில் பாஜக அதிகளவில் வாக்குகளை பெற்றுள்ளதாக ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது ஏன் என்கிற கேள்வி எழலாம். உ.பி-ஐ பொருத்தவரை ராமர்கோவில் கட்டிவிட்டதால் வாக்குகள் தங்களுக்கு வந்துவிடும் என பாஜக தவறாக கணித்துவிட்டது. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்துவிட்டதால், பாஜக முழுமையாக வந்துவிடும் என்றும் முறைகேட்டில் ஈடுபடவில்லை.
கருத்துக்கணிப்புகள் மூலம் பாஜக மக்கள் மத்தியில் கருத்துருவாக்கங்களை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கருத்துக் கணிப்புகள், கட்சிகளை உடைப்பது போன்ற பல்வேறு வழிகளை பயன்படுத்தி, பாஜக முறைகேடுகளில் ஈடுபடுகிறது. சில இடங்களில் மக்களை வாக்களிக்க விடாமலும் தடுத்தனர். மகாராஷ்டிராவில் அவசர அவசரமாக செய்கிறபோது பாஜகவினர் மாட்டிக் கொண்டார்கள். ராகுல்காந்தி, கிட்டத்தட்ட 6 மாத காலமாக ஆய்வு மேற்கொண்டு முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளார்.
தேர்தல் ஆணைய மோசடி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். இந்த செய்திகளை வடஇந்திய ஊடகங்கள் சில நாட்களில் இழுத்து மூடிவிடுவார்கள். இந்த விவகாரத்தை மடைமாற்றம் செய்ய பாஜக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றாலும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாது. ராகுல்காந்தி ஆதாரத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் தவறு செய்ய இனி கொஞ்சம் அச்சப்படும். இதன் மூலம் கடந்த கால தவறுகளை சரிசெய்ய முடியாது. ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
ராகுல்காந்தி வெளிப்படுத்தி உள்ள இந்த குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியின் குரலாகத் தான் பார்க்க வேண்டும். பீகாரில் கொண்டுவந்துள்ள வாக்காளர் சிறப்பு திருத்தத்தை இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தான் ஆதரிக்கின்றன. மத்திய பாஜக அரசு மீது தவறு இல்லாவிட்டால், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டியது தானே. அவர்கள் விவாதிக்க அனுமதி வழங்காததால் தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 18 நாட்களாக போராடி வருகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்