தற்போதைய சூழலில் திமுக அரசை எதிர்க்கும் வலுவான நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. அதனால் தன்னுடைய கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவர்களையும் ஈர்க்கும் நபராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதால் ஏற்பட்டு இருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்தும், ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட கூட்டணி நகர்வுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்து பேசியது பாஜகவிடம் தன்னுடைய பேர வலிமையை கூட்டுவதற்காக தான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் பாஜக இறங்கியுள்ளது. உண்மையில் ஒபிஎஸ்-ன் நடவடிக்கை காரணமாக பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. பாஜகவில் இருந்தும், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் ஓபிஎஸ்-ஐ தொடர்புகொள்கிறார்கள். வரும் 26ஆம் தேதி பிரதமர் தமிழகம் வரும்போது அவரை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாக சொல்கிறார்கள். பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் ஓபிஎஸ் அவமதிப்பிற்கு உள்ளாகினார் என்பது உண்மை. ஆனால், பிரச்சினை அது மட்டும் கிடையாது. ஓபிஎஸ், என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறாரா? என்று பாஜக ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்டுக்கொண்டு ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதேபோல் நாளைக்கு எடப்பாடியின் பேச்சை கேட்டுக் கொண்டு கடைசி நேரத்தில் அவரை என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் என்ன செய்வார்? அப்போது, தனக்கு என்று தனியாக ஒரு பாதையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தேர்தல் இன்னும் 8 மாதத்தில் வர உள்ளதால் அவர் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி சுயநலனுக்காகவும், தன்னுடைய தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதாலும் ஒபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கு தடையாக உள்ளார். எனவே அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் உள்ளார். ஒபிஎஸ் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்று தொடர்ந்துள்ள வழக்கில் முடிவு வருவதற்கு கால தாமதம் ஆகும். அப்படி இருக்கும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடாவிட்டால் அவருடைய அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அதனால் அவர் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுவரை அதிமுகவை தோல்விய அடைய செய்யும் முயற்சிகளில் நாம் இறங்கக்கூடாது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்து வந்தார். ஆனால் அதிமுக வெற்றிபெற்றால் பலம் பெறப் போவது எடப்பாடி தான். அப்போது எடப்பாடியை அரசியல் ரீதியாக தோல்வியடைய செய்வதற்கான முயற்சிகளில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். அதனை நோக்கி தான் அவர் காய்களை நகர்த்துகிறார். ஓபிஎஸ்-ஐ நம்பி வந்தவர்கள், பாஜகவை நம்ப வேண்டாம். நமக்கு வெளியில் தவெக, திமுக போன்ற வாய்ப்புகள் உள்ளன. எனவே மோதி பார்த்துவிடலாம் என்று சொல்கின்றனர். தவெக உடன் முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டார்கள். மேலும், ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து தொண்டர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
அதேவேளையில், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் மீது பாஜகவுக்கு அதிருப்தி எழுந்திருக்கிறது. அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஓபிஎஸ்-ஐ சந்திக்காததால், அவர் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். பிரேமலதா, ராமதாஸ் போன்றவர்கள் முதலமைச்சருடன் பேசியது, ஊசாலாடிக் கொண்டிருந்த வைகோ முதல்வரை சந்தித்துள்ளனர். இன்னும் பலர் முதலமைச்சரை சந்திக்க முயற்சித்து வருகிறார்கள். இது அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் எடப்பாடியை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வட மாவட்டங்களில் பேசுகிற போது, தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவேன் என்று சொல்கிறார். அதே தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் போது ஏன் 10.5 சதவீதம் குறித்து பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.வீ.சண்முகம், எடப்பாடியிடம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அதிமுகவுக்கு விழும் வாக்குகளும் விழாது என்றும் எச்சரித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்திற்கு கூட்டமும் சரியாக வரவில்லை. கூட்டணியும் சரியாக அமையவில்லை. அவருடைய செயலால் ஓபிஎஸ் சென்றது தென் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில், பொது மக்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போது திமுகவை எதிர்க்க ஒரு வலுவான கூட்டணி எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. அதனால் திமுகவுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இந்த கேமில் ஸ்டாலின் சாமர்த்தியமாக எடப்பாடியை வீழ்த்திவிட்டார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் தன்னை நோக்கி வரவைத்துவிட்டார். அது எடப்பாடி பழனிசாமிக்கு பலத்த அடிதான். ஓபிஎஸ்-ஐ எடப்பாடி அவமதிப்பு செய்ததை, அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயம் தங்களை அவமதிப்பு செய்ததாக கருதுகிறது. அதிமுகவில் செல்வாக்கு மிக்க சமுதாயமாக விளங்கியது முக்குலத்தோர் சமுதயம். எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தபோது அவர்கள் ஓரங்கட்டப்பட்டடார்கள். அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களின் வீழ்ச்சிக்கு காரணமான எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர்கள் தயாராகிவிட்டனர். அந்த முடிவை தான் ஓபிஎஸ் செயல் படுத்துகிறார். அதனால் தென் மாவட்டங்களில் எடப்பாடியின் சுற்றுப் பயணத்திற்கு போதிய அளவில் மக்கள் கூட்டம் வருவதில்லை. பாஜக ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவரது உச்சபட்ச நிபந்தனை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் என்பதாக தான் இருக்கும்.
ஓபிஎஸ்-க்கு அடிப்படையில் ஒரே நோக்கம் தான். அதிமுக எங்கு போட்டியிட்டாலும் அதை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் நோக்கமாகும். அதற்கு தவெகவுக்கு போதிய பலம் உள்ளதா? என்கிற கேள்வி எழும். அவர்கள் வாக்குகளை தான் பிரிப்பார்களே தவிர, அதிமுகவை தோற்கடிக்க முடியாது.அதனால் ஓபிஎஸ் தரப்பினர் இந்த இடத்தில் மாறுபடுகிறார்கள். திமுக உடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் 5 இடங்கள் கொடுத்தாலும், அனைத்து இடங்களிலும் அதிமுகவை தோற்கடிப்பார்கள். எடப்பாடியை வீழ்த்த இதுதான் வழி என்று நினைக்கிறார்கள். எனினும் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை 8 மாதங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம். தற்போது தவெக, திமுக என இரு தரப்பிலும் கூட்டணி கதவுகளை திறந்து வைக்கலாம் என்ற முடிவில் அவர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் கூட்டணி சேர்ந்தால், ஓபிஎஸ்க்கு திமுக கூட்டணி வாய்ப்பு மட்டும் தான் உள்ளது. எனவே அவர்கள் இரு பக்கமும் கூட்டணி கதவுகளை திறந்துவைத்துள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.