ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விளக்கி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டு வைத்துள்ளபோது கேவலத்திற்கு அஞ்சாமல் ஆளுநர் ரவி உள்ளார். அப்போது, பிரச்சினை எங்கே உள்ளது என்றால் கல்வி என்பது சூத்திர, பஞ்சமர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் கிடைக்கக்கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ்- அமைப்பின் முக்கியமான திட்டமாகும். அதனால்தான் மன்னராட்சி காலத்தில் அனைத்து சொத்துக்களையும் பிடுங்கி கோவில்களுக்கு கொடுத்தார்கள். அதை மீறி சொத்து வைத்திருந்தார்கள் என்றால், லாபத்தில் பெரும்பங்களை மன்னர் எடுத்துக்கொண்டார். அதற்கு மேலாகவும் வைத்திருந்தால் வரிகளை போட்டு புடிங்கினார்கள். இப்படி பெரும்பான்மை மக்களை நிலம் இல்லாதவர்களாக சொத்து இல்லாதவர்களாக மாற்றிவிட்டார்கள்.
சொத்து இருந்தது என்றால் அவர்கள் படிக்க செல்வார்கள். படிப்பினால் சிந்தனை வரும். அவன் அரசியல் அதிகாரத்திற்கு போவான். அடிப்படையில் உயர்கல்வி சூத்திர பஞ்சமர்களுக்க கிடைக்கக்கூடாது என்பதுதான் அவர்களது திட்டமாகும். அதனால் ஆர்.என்.ரவி வந்தது முதல் உயர்கல்வியில் முழுமையாக அரசியல் செய்தார். அனைத்து பல்கலை.களிலும் 2 குழுக்களை உருவாக்கியுள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களும் இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டன. நீண்ட நாட்களாக துணை வேந்தர்களை நியமிக்கவில்லை. மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. புதிய பாடப்பிரிவுகள் எதையும் உருவாக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பிரச்சினையில் உள்ளன. உயர்கல்வி பாடத்திட்டம் என்பதால்தான் உச்சநீதிமன்றம் சொன்னாலும் திரும்ப திரும்ப ஆளுநரும், ஆர்.எஸ்.எஸ்-ம் மூக்கை நுழைக்கிறார்கள்.
துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது. ஏனென்றால் இன்றைக்கு துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விவகாரங்களிலும் ஏற்கனவே அதிகாரம் உள்ளது. புரோ சான்சலராக ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர்தான் உள்ளார். அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டத்தை நடத்துவதில் தவறு கிடையாது. உயர்கல்வித்துறையின் கீழ் பல்கலைக்கழகங்கள் வருவதால் மாநில அரசின் தலைவர் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் எந்த கூட்டம் வேண்டும் என்றாலும் நடத்தலாம். அதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. முதலமைச்சர் சட்டசபையில் அரசியல் பேசுகிறார். மோடி, அமித்ஷா அரசியல் பேசுகின்றனர். ஆனால் குடியரசுத் தலைவர் அப்படி அரசியல் பேச முடியுமா? அவரை போன்று தான் ஆளுநரும். குடியரசு தலைவரையாவது எம்.பி., எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஆளுநர் ஒரு மத்திய அரசு அதிகாரி போன்றவர்தான். ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறு ஆகும். ஆனால் ஆர்.என்.ரவி, ஆளுநராக வந்ததில் இருந்து அதை மீறிக்கொண்டுதான் உள்ளார்.
ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள். காஷ்மீர் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் இந்த தீர்ப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வது என்ன அர்த்தம். ஜெகதீப் தன்கர் மூத்த வழக்கறிஞராக இருந்து மேற்குவங்க ஆளுநராகி, தற்போது குடியரசு துணை தலைவராகியுள்ளார். அவர் தொடர்ச்சியாக நீதித்துறையை தாக்கி வருகிறார். இன்றைக்கு நேரடியாக ஒரு நீதிபதி ஊழல் செய்துள்ளார் என்றும், 142வது சட்டப்பிரிவை அணு ஆயுதம் போல வைத்திருக்கிறார்கள் என்று கடுமையாக தன்கர் பேசுகிறார். தீர்ப்பை விமர்சிப்பது வேறு. நீதிபதிகளை தாக்குவது என்பது வேறு. தற்போது பாஜகவினர் உச்சநீதிமன்றத்தை, தலைமை நீதிபதியை தாக்குகிறார்கள். இது அரசியல் சட்டத்தை அழிப்பதற்கு சமமாகும். அந்த வேளையை குடியரசுத் துணை தலைவரே செய்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து சூடு ஆறுவதற்குள்ளாக நான் ஜெகதீப் தன்கரையே கூட்டிவந்து நிகழ்ச்சி நடத்தி இங்கேயே அவர் பேசுவார் என்றால் நாங்கள் நீதித்துறையுடன் நேரடியாக மோதுகிறீர்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் என்னுடைய அதிகாரத்தை குறைத்தாலும் நாங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவோம் என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஜெகதீப் தன்கரை அந்த பகுதியில் இருந்து நீக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி மேற்கொள்ள வேண்டும்.
ஓரு நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல்வாதிகள் மீது எவ்வளவு ஊழல் புகார்கள் உள்ளன. அவர்களை எல்லாம் தூக்கில் போட்டுவிடலாமா? நீதித்துறையை தன்னிச்சையாக செயல்பட விடாமல் தடுத்தது ஒழித்தது மோடி அரசுதான். 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து மக்களிடம் மக்களை காப்பாற்ற வேண்டுகோள் விடுத்தனர். நீதிபதி லோயா மரணம் எப்படி நடைபெற்றது? இதற்கு பாஜக, ஜெகதீப் தன்கர் பதில் சொல்வார்களா? ஆளுநரும், குடியரசுத் துணை தலைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் குழப்பம் செய்வதற்காக வருகிறபோது, அவர்கள் மொழியில் தான் நாம் பதில் சொல்ல வேண்டும். இது மோதல் எல்லாம் கிடையாது. அவர்கள் எப்போதும் அப்படித்தான் செய்கிறார்கள். சட்டத்தில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் கூட ஒரு சட்டத்தை உருவாக்கி கொள்கிறார்கள். நீங்கள் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்று வருவதற்குள் 4 வருடம் காலம் ஆகிவிடும். திமுக அரசாங்கம் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ரவியை நீக்குவதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும். ரவிக்கும், தன்கருக்கும் அவர்கள் மொழியில் தான் பதில் அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.