தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் அடையாளமாக திகழ்பவர் ஓபிஎஸ். அவரை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் திமுகவின் பலத்தை அதிகரிக்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதன் அரசியல் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:- ஒபிஎஸ், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் திமுக கூட்டணி வாய்ப்பை திறந்துள்ளது நல்ல முடிவாகும். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ அரசியலில் இருந்தே அகற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஓபிஎஸ் வளர்ந்து வந்தார் என்றால், அதிமுகவை கைப்பற்றிவிடுவார் என்று சொல்கிறார். ஓபிஎஸ் தொண்டர்கள் மீட்புக்குழுவை வைத்துக்கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். சூர்யமூர்த்தி என்பவர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டுதான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் தான் முடிவை எடுப்போம் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. அதை வெளிப்படையாக சொல்வது என்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுக்கு 6 இடங்களுக்கு மேல் தர மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். அதன் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து விட்டது. நாளைக்கும் அவர் கடைசி நேரத்தில் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்? ஒரு நம்பகத்தன்மை அற்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அப்போது ஒபிஎஸ்-க்கு நன்மை செய்வார்களோ, இல்லையோ. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு செக் ஆக இந்த வழக்கை பாஜக வைத்துள்ளது.
அதிமுக தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதில் ஓபிஎஸ்க்கு ஆதராக கூட தீர்ப்பு வரலாம். ஆனால் அவர் அதை நம்பி இருக்க விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்காக தானே தவிர, இதனால் நமக்கு எந்த பலனும் கிடையாது என்று ஓபிஎஸ் புரிந்துகொண்டுவிட்டார். அப்போது கூட்டணிக்கான அனைத்து கதவுகளைவும் திறந்து வைப்பது தானே சரியாக இருக்கும். இன்றைக்கு திமுக அரசில் அதிகளவிலான முக்குலத்தோர் சமுதாய எம்எல்ஏ-க்கள் உள்ள போதும், முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் குறைவாகவே திமுகவுக்கு வந்துள்ளது. 2024ல் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு, சமுதாய ரீதியாக கிடைத்த வாக்குகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறபோது, முதற்கட்டமாக வன்னியர் வாக்குகள் போதிய அளவுக்கு வரவில்லை என்பதை கண்டறிகிறார். தென் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் மறவர் சமுதாய வாக்குகள் திமுகவுக்கு வரவில்லை என்பதையும் ஸ்டாலின் உணர்ந்துகொண்டார். அனைத்து தொகுதிகளையும் வென்றபோதும் மறவர் வாக்குகளை வரவில்லை என்பதை யோசிக்கிறார். ஓபிஎஸ்-தான் மறவர்களின் அடையாளமாக உள்ளார். அப்போது ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, மறவர் சமுதாய வாக்குகள் அவருக்கு வரும் என்று எதிர்பார்க்கிறார்.
ஓபிஎஸ் அணி விஜய் தரப்புடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என்பதில் விட்டுக்கொடுக்க மாட்டார். பலத்தை நிருபிக்காத விஜயிடம் கூட்டணி செல்வதை விட 47 சதவீதம் வாக்குகளுடன் தொடர் வெற்றிகளை பெற்று வரும் திமுகவிடம் செல்வது சிறந்தது என்பது ஓபிஎஸ் முடிவாக இருக்கலாம். அதிமுகவில் முக்குலத்தோர் ஆதிக்கத்தை கொண்டுவந்தது சசிகலா அம்மையார்தான். ஆனால் தேனி மக்களவை தேர்தலின்போது தங்க தமிழ்செல்வன், தினகரன் தங்களுடைய சாதிப் பிரிவை சேர்ந்தவர் அல்ல என்று சொல்லித்தான் வெற்றி பெற்றார். அப்போது தேனியில் வெற்றி பெற்றது சாதிய உட்பிரிவுதான். ஜெயலலிதா, யாதவர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கினார். அதேபோல், ஸ்டாலினும் அந்த சமுதயாத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு, அந்த சமுதயாத்திற்கு இரண்டு அமைச்சர் பொறுப்புகளை வழங்கியுள்ளார். எதார்த்த அரசியலில் சூழலில் ஓபிஎஸ்க்கு, ஸ்டாலின் பெஸ்ட். ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பெஸ்ட் ஆவர்.
பாஜக தரப்பில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும், வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி வருகையின்போது அவரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மர்ம முடிச்சுகளை ஓபிஎஸ் புரிந்துகொண்டதால் அதை நிராகரிக்கவும் செய்திருக்கலாம். ஓபிஎஸ் விவகாரத்தில் பாஜக தவறு செய்தது உண்மைதான். அதில் உள் விவகாரங்கள் நிறைய உள்ளன. அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். பிரதமர் மோடியும் அவரை சந்திக்க வில்லை. அப்போது ஓபிஎஸ் இந்த முடிவை எடுப்பது நியாயமானது தான். இது சட்டமன்றத் தேர்தல் என்பதால் ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு சொல்வதால் மோடிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது வாஜ்பாய் வெற்றி பெற்றது போல, பிரதமர் மோடி வெற்றி பெற்றுவிடுவார். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அரசியல் உள்ளது ஓபிஎஸ்க்கும் அது உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த அரசியல் உள்ளது. தன்னுடைய 2வது இடத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் எடப்பாடி பாஜக உடன் கூட்டணிக்கு வந்துள்ளார். அதை புரிந்துகொண்டு மோடியும், அமித்ஷாவும் காய் நகர்த்த வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்பார்ப்பு. நயினார், தமிழிசை போன்றவர்கள் பாஜகவின் நலனை தாண்டி, எடப்பாடி பழனிசாமியின் நலனுக்காக மாறிவிடக்கூடாது என்பதுதான் நமது எதிர்பார்ப்பு ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.